சிற்பம் என்பது சில்ப என்ற வட சொல்லிலிருந்து உருவானது. சிலாரூபம் என்பதிலிருந்து சிலை என்ற தமிழ்ச் சொல் வழங்கப்படுகிறது. ஒருவர் தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். உருவத்தை அமைத்தல், படைத்தல், சமைத்தல் சிற்பக் கலை ஆகும். பல்வேறு பண்பாடுகளில் சிற்பங்கள் பெரும்பாலும் சமய வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. சிற்பங்கள் பண்டைய கால சமயம், புராணம், அரசியல், சமூகம், கலைத் தொடர்பான வெளிப்பாடாக இருந்தன.
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஒட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார்.
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிற்பக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது. கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு என்ற இலக்கியம் கூறுகின்றது. கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம் செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன. வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களை ‘புடைப்புச் சிற்பங்கள்’ என்றும் வகைப்படுத்துவர்.
பண்டைய பண்பாட்டு கலாச்சாரங்களின் எச்சமாக மண்பாண்டங்களைத் தவிர்த்த ஏனைய படைப்புகள் யாவும் அழிவுற்றன.மனிதனின் படைப்புகளில் காலத்தால் அழியாமல் வாழக்கூடிய கலைப்படைப்பு சிற்பமாகும். மற்றையவை விரைவில் அழியக்கூடிய பொருட்கள் கொண்டு செய்யப்பட்டவையாகும். பழங்காலத்தில் செய்யப்பட்ட மரச்சிற்பங்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. அவை முற்றிலும் அழிந்துவிட்டன. அக்காலச் சிற்பங்களில் பிரகாசமான வண்ணம் தீட்டப்பட்டன. இவை தற்போது தேய்வுற்றும் வண்ணம் மங்கியும் காணப்படுகின்றன.
போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு வழிபாடு செய்ய ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தல் மரபு. அக்கல்லில் வீரனது உருவத்தைச் செதுக்குவர். அதற்கு அடியில் வீரனின் பீடும் பெயரும் பொறிப்பர் என வரும் தொல்காப்பியச் செய்திகளால் சிற்பத் தொழில் தொல்காப்பியர் காலத்தில் இருந்தது என்பதை அறியலாம். இத்தகைய நடுகல்லைப் பற்றி அகமும் புறமும் விளக்கிக் கூறும். தருமபுரி மாவட்டம், இருளப்பட்டியில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு நடுகற்கள், இத்தகைய சிற்பங்கள் பண்டு இருந்ததற்கு சான்று பகரும்.
செங்குட்டுவனால் இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கல்லில், கண்ணகியின் உருவம் பொறிக்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரத்தால் உணரலாம். கொல்லி மலையில் பெண் தெய்வத்தின் உருவச் சிலை ஒன்று இருந்தது. அது தமிழ் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. "கொல்லிப்பாவை அண்ணாய்” என்பது இலக்கிய வழக்கு. எனவே, அப்பாவை சிற்ப முறைப்படி நன்முறையில் அமைக்கப்பட்டிருந்தது என்று கொள்ளலாம். இவ்வாறே புகார் நகரத்தில் பூசைக்கென நடப்பெற்ற பாவை ஒன்று இருந்தது. அது “கந்திற்பாவை’ எனப் பெயர் பெற்றது என்று மணிமேகலை கூறும்.
சிற்ப நூல்கள்
தெய்வங்களின் உருவங்களைப் பல்வேறு நிலைகளில் சிற்பங்களாகச் செதுக்குவதற்கும், சுதையினால் செய்வதற்கும், வண்ண ஒவியங்களாக வரைவதற்கும் வழிகாட்டியாக அமைந்த நூல்களே சிற்ப நூல்களாகும். இவற்றில் பல்வேறு தெய்வங்களின் உருவநிலைகள் த்யானஸ்லோகங்களாக அமைந்துள்ளன. இவற்றை அகத்தின் கண் நிறுத்தி கல்கல் என்ற உளியின் ஒசையூடே கல்லிலே அழியாத காவியத்தைப் படைத்தவர்கள் சிற்பிகள், சிற்பாசாரியர்கள். இவர்களுக்காக இயற்றப்பட்ட காஸ்யபம், சாரஸ்வதம், ப்ராம்மீயம் முதலிய சிற்ப நூல்கள் ஏராளம். சாளுக்ய மன்னன் விக்ரமாதித்யன் என்பவன் மானஸோல்லாஸம் என்ற ஒரு சிறந்த நூலை இயற்றியிருக்கிறான்.
ஆகமங்கள்
கோயில்களில் தெய்வ உருவங்களைப் பிரதிஷ்டை செய்தல், வேள்வியும் விழாவும் எடுத்தல் முதலிய முறைகளைக் குறிக்கும் நூல்களுக்கு ஆகம நூல்கள் என்று பெயர். இவற்றுக்குத் தந்திர சாஸ்திரம் என்னும் பெயர் உண்டு. தந்திர சாஸ்திரங்கள் வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை. நாயன்மார்களும், ஆழ்வார்களும், எல்லாம் வல்ல இறைவனை வேத முதல்வன் என்றும், "அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்” என்றும் அழைக்கின்றனர். ஆகமங்கள் சிவ வழிபாட்டைக் கூறுபவை என்றும், விஷ்ணு வழிபாட்டைக் குறிப்பவை என்றும் இரு வகைப்படும். சிவாகமங்கள், காமிகம், காரணம், அஜிதம் முதலிய 28 நூல்களாகும். வைணவாகமகங்கள் வைகானசம்' என்றும், பாஞ்சராத்ரம் என்றும் இருவகைப்படும். விகனஸ் என்ற முனிவரின் வழியைப் பின்பற்றியது வைகானசமாகும். இவ்வாகமங்கள் அனைத்தின் அடிப்படைத் தத்துவமும் ஒன்றே. மனிதன் தான் உடுப்பதும், உண்பதும், கேட்பதும், காண்பதும், களிப்பதும், ஆண்டவனின் அருளால் எண்று கருதினான். எனவே அவையனைத்தையுமே கடவுளுக்குப் படைத்துப் பின்னரே தான் கொண்டான். இதுவே ஆகமங்களின் அடிப்படைத் தத்துவமாகும். பரம்பொருளை உருவங்களில் இருக்க வேண்டுதல், ஆசனம் அளித்தல், நீராட்டுதல், சந்தனம் முதலியன அளித்தல், பட்டாடை அணிவித்தல், மலர்மாலைகள் சூட்டல், ருசியான உணவு, செவிக்கினிய இசை, கண்ணுக்கினிய கூத்துக்கள் முதலிய பல அங்கங்கள் கொண்டதே வழிபாட்டு முறையாகும். ஆண்டுதோறும் பல்வேறு விழாக்களை எடுக்கும் முறையையும் ஆகம நூல்கள் குறிக்கின்றன. சுமார் 2,000 ஆண்டுகளாக இவ்வடிப்படையில்தான் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்று அறிகிறோம். பரிபாடல் என்ற தமிழ் நூலில் இவை "விரிநூல்" எனக் குறிக்கப்பட்டுள்ளன.