முகப்பு சிற்பங்கள் மரச்சிற்பங்கள்
சிற்பங்கள் பண்டைய காலத்தில் மரத்தினால் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. மரத்தினால் தெய்வ உருவினை வடித்து வணங்குதல் தொல் மரபாகும். மரமே தெய்வமாக வணங்கப்படும் சமூகத்தில் மரத்தினால் சமைக்கப்பட்ட தெய்வ உரு உயர்வானதாகக் கருதப்பட்டது. சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் மாளிகைகளில் இருந்தமை குறிப்பிடப்படுகின்றது. மரச்சிற்பங்கள் முழு உருவத்தில் தனிச்சிற்பங்களாகவும், மரப்பலகையில் புடைப்புச் சிற்பங்களாகவும் செதுக்கி வடிக்கப்படும். அத்தி, தேவதாரு போன்ற மரங்கள் தெய்வ வடிவங்கள் செய்வதற்கு பொதுவாக பயன்படுகின்றன. மரச்சிற்பங்கள் தெய்வ உருவங்களாகவும், புராணக் காட்சிகளாகவும் வடிக்கப்பட்டு தேர்களில் பொருத்தப்படுகின்றன. மரச்சிற்பங்கள் அதிக அளவினவாக தேர்ச்சிற்பங்களா...
சிற்பங்கள் பண்டைய காலத்தில் மரத்தினால் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. மரத்தினால் தெய்வ உருவினை வடித்து வணங்குதல் தொல் மரபாகும். மரமே தெய்வமாக வணங்கப்படும் சமூகத்தில் மரத்தினால் சமைக்கப்பட்ட தெய்வ உரு உயர்வானதாகக் கருதப்பட்டது. சங்க காலத்தில் மரச்சிற்பங்கள் மாளிகைகளில் இருந்தமை குறிப்பிடப்படுகின்றது. மரச்சிற்பங்கள் முழு உருவத்தில் தனிச்சிற்பங்களாகவும், மரப்பலகையில் புடைப்புச் சிற்பங்களாகவும் செதுக்கி வடிக்கப்படும். அத்தி, தேவதாரு போன்ற மரங்கள் தெய்வ வடிவங்கள் செய்வதற்கு பொதுவாக பயன்படுகின்றன. மரச்சிற்பங்கள் தெய்வ உருவங்களாகவும், புராணக் காட்சிகளாகவும் வடிக்கப்பட்டு தேர்களில் பொருத்தப்படுகின்றன. மரச்சிற்பங்கள் அதிக அளவினவாக தேர்ச்சிற்பங்களாகவே காணப்படுகின்றன. மேலும் கோயில்களின் வாயிற்கதவுகளில் உள்ள சிற்பங்கள், பல்லக்குகள், வாகனங்கள் ஆகியன மரத்தினால் செய்யப்படுகின்றன. மரச்சிற்பங்கள் அழகுடைய வடிவுடையனவாக செதுக்கப்பட்டு பல நிற வண்ணங்களினால் செழுமைப் படுத்தப்படுகின்றன. மரச்சிற்பங்கள் இயற்கைச் சூழலுக்கேற்பவும், பராமரிக்கப்படும் தன்மைக்கேற்பவும் மெருகு குலையாமல் கலை வடிவை காட்டி நிற்கின்றன.
தென்னிந்தியாவில், பொதுவாகத் தமிழகத்தில் மரம் ஏராளமாகக் கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் கலைப் பொருட்களைச் செய்தனர். குடிமல்லத்தில் உள்ள சிவலிங்கக் கோயிலைச் சுற்றி அக்காலத்தில் மரவேலி போடப் பட்டிருந்தது என்ற செய்தி மரத்தின் கலைப் பயனை அறிய ஓர் எடுத்துக்காட்டாகும். எனவே இந்தியா முழுவதும் மரம் கலை நுணுக்கமான பொருட்களைச் செய்யப் பயன்படுத்தப் பட்டது. மரத்தால் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. அவை தேர்களிலும், மரக் கதவுகளிலும், கோயில் முகப்புகளிலும், கருவறைகளிலும் கூட இடம்பெறலாயின.
இலக்கியத்தில் மரச் சிற்பங்கள்
புறநானூற்றில் தச்சன் தேர் செய்வது பற்றிய குறிப்பு வருகிறது. அரண்மனை வாயில் பின் கதவுகளில் கொற்றவையின் உருவம் செய்விக்கப் பட்டிருந்ததாக மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த வாயிற் கதவுகளில் புலியின் உருவம் பொறிக்கப் பட்டிருந்ததாகப் பட்டினப் பாலை கூறுகிறது. பரிபாடலில் மரப் பதுமைகள் பற்றிய குறிப்பு வருகிறது.
மணிமேகலையில் மரத்தாலும் பிற பொருட்களாலும் தெய்வ உருவங்கள் செய்யப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. பெருங்கதையிலும் "புது மரப்பாவை பொறியற்றாங்கு" என்று வருகிறது.
சிற்பங்கள் செய்யப்பட்ட மரங்கள்
பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, துவளை, மருக்காரை, பல முள்ளிப் பாலை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகியன இரண்டாம் வகை மரங்களாகும். வெட்பாலை, மராமரம் அல்லது ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளைக் கருங்காலி, அசோகம், கருவேம்பு ஆகியவை மூன்றாம் பிரிவு மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, செண்பகம், மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியன நான்காம் வகையைச் சேர்ந்த மரங்களாகும். இத்தனை வகை மரங்கள் கூறப்பட்டிருப்பினும் பெரும்பான்மையாக இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ளமருது ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
கோயில் மரச்சிற்பங்கள்
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி 590-630) காலத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்ட போதும் இறையுருவங்கள் மரத்தாலோ அல்லது உலோகத்தாலோதான் செய்விக்கப்பட்டன. அவற்றை வைப்பதற்குக் கருவறையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சில பிற்காலத்துக் கோயில்களிலும் மரத்தாலான சிற்பங்கள் இடம் பெறலாயின. உதாரணமாக, உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயிலிலுள்ள இறை உருவங்கள் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் சில கோயில்களின் மண்டபங்களில் மரச் சிற்பங்களைக் காணலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் முன் மண்டபத்தில் கேரளத்துத் திருவடி அரசர்களின் திருப்பணி நடந்துள்ளது. அதன் விதானத்தில் ஏராளமான மரச் சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரம் கொண்டவை. இறையுருவங்களும், இராமாயணம், பாரதம் கதைத் தொடர்களும், நாட்டார் வழக்காற்றியல் சிற்பங்களும், சில பாலியல் சிற்பங்களும் இங்குக் காணப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் மேல்தட்டில் உள்ள விதானத்தில் அழகான மர வேலைப்பாடுகளும், மரச் சிற்பங்களும் செய்விக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிருஷ்ண லீலைகள், பாரதம் மற்றும் பிற வைணவத் தொடர்பான சிறுசிறு சிற்பத் தொகுதிகளைக் காணலாம். கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் கோபுரத்தின் முதல் தட்டின் உட்புறம் ஒரு மண்டபம் போல் அமைந்துள்ளது. வீரன், நடன மாது ஆகியோரது உருவங்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. திருநெல்வேலி தாமிர சபையில் நேர்த்தியான மரச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. சங்கரன் கோயிலில் புலித்தேவர் அறையில் மரச் சிற்பங்கள் உள்ளன. திருக்குறுங்குடி கோயில் கோபுரத்தில் மரச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கதவுகளில் சிற்பங்கள்
வட இந்தியாவைப் போன்றே, தமிழகத்திலும் பல்லவ, பாண்டிய, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கோயில் வாயிலின் நிலைகளின் மேற்பகுதியில் சிற்பங்கள் அமைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது. நிலைக்காலின் இரண்டு பக்கங்களிலும் வளமையைக் காட்டும் செடி கொடிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டன. விசய நகர நாயக்கர் காலத்தில் இம்மரபு மாற்றமடைந்தது. கோயில் வாயிற் கதவுகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இவை பொதுவாகத் தனியாகச் செய்து கதவுகளில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான கருத்துகளைப் புராணங்களிலிருந்தும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்தும் எடுத்துக் கொண்டனர். இதுபோல் சிற்பங்களுடன் அமைக்கப்பட்ட கதவுகள் தமிழகத்தில் பல கோயில்களில் காணப்படுகின்றன. அவற்றில் அழகு மிகுந்தனவும், கருத்தமைதி உடையனவும் சில கதவுகளேயாகும். இதற்கு உதாரணமாக அழகர் கோயில், பிரம்ம தேசம், கல்லிடைக் குறிச்சி, பாபநாசம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கதவு) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அழகர் கோயில், கல்லிடைக் குறிச்சி ஆகிய கோயில் கதவுகளில் வைணவம் தொடர்பான சிற்பங்களும், மற்றவற்றில் சைவம் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. வைணவக் கோயில் கதவுகளில் மேல் தட்டில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களும், கணபதி சிற்பமும் உள்ளன. அடுத்த தட்டில் இராமாயணச் சிற்பங்கள் தொடர்ச்சியுடைய கதை நிகழ்ச்சிகளாகவோ, அல்லது குறுக்கு வெட்டு அமைப்பிலோ செதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்குக் கீழே மகாபாரதச் சிற்பங்கள் இதே அடிப்படையில் அமைந்துள்ளன. அதற்கும் கீழ்த்தட்டில் பாலியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. எவ்வாறு இதிகாச, புராண மற்றும் பிற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இஃது உணர்த்துகிறது.
அனைத்துக் கதவுகளிலும் கணபதி சிற்பம் அமைக்கப் பட்டிருப்பதற்குக் காரணம் அவர் கதவுகளின் காவலன் என்னும் கருத்து மேலோங்கி இருப்பதே ஆகும். கதவுகளில் விஷ்ணு அனந்தசாயியாக (அரவத்தின் மீது துயில் கொள்வது) உள்ள சிற்பம் அமைக்கப்படும் வழக்கம் உள்ளது. இது வைகுண்டத்தை அடைவதற்காகத் திறக்கப்படும் கதவின் குறியீடாக உள்ளது. தமிழகத்துக் கோயில் கதவுகளில் உள்ள இதிகாசச் சிற்பங்களில் கதைத் தொடர்ச்சியைக் காணமுடிகிறது.
தேர்ச் சிற்பங்கள்
மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில்தான் கல்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன. இருப்பினும் பழங்காலத்தில் அமைக்கப் பட்ட தேர்களைக் காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.
தற்போது பெரும்பான்மையான கோயில்களில் தேர்கள் உள்ளன. அவை இடைக் காலத்திலிருந்து இன்றுவரை செய்து வைக்கப்பட்டவையாகும். பல கோயில்களின் தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை ஆகும். திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்லவே கோயில் போன்ற அமைப்புடைய இத்தேர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 866 தேர்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
இந்த நடமாடும் கோயில்கள் எனப்படும் தேர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள் அழகாகக் கற்சிற்பங்கள் போன்று கருமை நிறத்தில் காட்சியளிக்கும்.
தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் (tiers) உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்துள்ளன. சிற்றுருச் (miniature) சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், ஆச்சார்ய புருஷர்கள், அஷ்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வாகனங்கள்
கோயில்களில் திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதி உலாவிற்கு எடுத்துச் செல்வதற்காக அந்தந்த இறையுருவத்திற்குத் தொடர்பான வாகனங்கள் மரத்தினால் செய்யப் பட்டன. தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் இன்றும் வாகனங்கள் செய்யும் தொழில் நடைபெற்று வருகின்றது. அங்கு அன்னம், மயில், சிங்கம், நந்தி, கருடன், யானை, காமதேனு போன்ற வாகனங்கள் செய்விக்கப் பட்டுக் கோயில்களுக்கு விற்பனை செய்யப் படுவதைக் காணலாம். இவ்வாகனங்கள் இந்து சமய மேல்தட்டுக் கருத்துகளுக்கும் நாட்டுப்புறக் கலைக்கும் பாலங்களாக அமைகின்றன. கோயில்களுக்குள் இறைவனின் கற்சிற்பங்களுடன் சேர்த்துச் செய்யப்படும் வாகனங்கள் அவ்விறைவனுக்கு நிகராகவே வணங்கப் படுகின்றன. இவை தற்காலிகமாக, முக்கியத் திருவிழாக்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியனவாகும். இன்று பெரும்பான்மையான கோயில்களில் உள்ள வாகனங்கள் நானூறு ஆண்டுகளுக்கு உள்ளாகச் செய்விக்கப் பட்டவையாகும்.
செட்டி நாட்டுச் சிற்பங்கள்
செட்டிநாட்டுப் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் என்று அழைக்கப்படும் நகரத்தாரால் பெரும்பெரும் வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மரங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வீடுகளின் பிரதான மரக் கதவுகள் மிகப் பெரிய நிலைகளைக் கொண்டவை. இரட்டைக் கதவுகள் அமைக்கப் பட்டிருக்கும். கதவுகளிலும், நிலைகளின் இரு பக்கங்களிலும் நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப் பட்டிருக்கும் அவை பெரும்பாலும் முப்பரிமாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கதவுகளிலுள்ள சிற்பங்கள் பெரும்பாலும் கிளி முதலிய பறவைகள், மிருகங்கள், செடிகொடிகள், தாமரை, கடவுள்கள், கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன் போன்றவைகளாகும். பதினாறு - பதினேழாம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்ப அமைப்புகளே செட்டி நாட்டு நகரத்தாருக்கும் கலைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. இம்மரபைப் பின்பற்றியே செட்டியார்கள் தாம் கட்டிய மற்றும் புதுப்பித்த கோயில்களில் சிற்பங்கள் அமைத்துள்ளனர்.
செட்டி நாட்டுக் கதவுகளில் அவர்கள் வணங்கிய தெய்வங்களின் உருவங்களே அதிகம் காணப்படுகின்றன. அனைத்துக் கதவுகளிலும் இலட்சுமி பிரதான இடத்தைப் பெற்றுள்ளாள். இவ்வுரு பெரும்பாலும் கஜலட்சுமியாக, அதாவது நடுவில் தேவி அமர்ந்து கொண்டிருப்பது போலவும், அவளுக்கு இரண்டு பக்கமும் யானைகள் நின்று கொண்டு அத்தேவிக்கு நீர்கொண்டு அபிடேகம் செய்வது போலவும் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அடுத்த முக்கியமான கதவுச் சிற்பம் சிவனும் பார்வதியும் நந்தியின் மீது அமர்ந்துள்ள இடப வாகன மூர்த்தியின் சிற்பமாகும். இது அவர்களது திருமண வாழ்வையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும் குறி்ப்பதாகும். செட்டியார்களின் தாலிகளில் கூட இவ்வுருவம் பொறிக்கப் படுவது வழக்கமாகும். இராமர், சீதை பட்டாபிடேகக் காட்சியும் கதவுச் சிற்பமாகக் காணப்படுகிறது. கணபதி, கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணு, முருகன் ஆகியோரின் உருவங்களும் கதவுகளில் வைக்கப் பட்டுள்ளன.
காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டின் கதவில் விஷ்ணு அனந்த சயன மூர்த்தியாகக் கோயில் கொண்டிருப்பது போன்று மரச் சிற்பம் அமைந்துள்ளது. ஏழு தலை நாகம் தாங்கியுள்ளது போன்ற பீடத்தின் மீது ஒரு விமானம் அமைந்துள்ளது. விமானத்தின் அடித்தட்டில் மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்று கொண்டுள்ளார். அதற்கு மேல் உள்ள தட்டில் விஷ்ணு அனந்த சயனத்தில் உள்ளார். அதற்கு மேல் விமானத்தின் மேற்பகுதி உள்ளது. இது மொத்தத்தில் ஒரு நாயக்கர் காலக் கோயில் போன்றே உள்ளது.
காரைக்குடிச் சிற்பங்கள்
காரைக்குடியில் உள்ள சில வீடுகளில் பெரிய யாளியின் உருவங்கள் காணப் படுகின்றன. கோயில்களில் இருப்பது போன்று இறையுருவங்களின் இரண்டு பக்கங்களிலும் துவார பாலகர் (வாயிற்காப்போர்) சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கிருத்தவத் திருச்சபைச் சிற்பங்கள்
தமிழகத்தில் கிருத்தவ சமயத் தேவாலயங்கள் பல உள்ளன. அவற்றில் அச்சமயத் தொடர்பான சடங்குகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. பல முக்கியத் தேவாலயச் சடங்குகளும், திருவிழாக்களும் உள்ளூர் இந்து சமயம் தொடர்பு உடையனவாகவோ அல்லது அம்மரபினைப் பின்பற்றியவையாகவோ அமைந்து வருகின்றன. உதாரணமாக வேளாங்கன்னி கோயில் தமிழகத்துக் கத்தோலிக்கத் திருச்சபைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இத்திருச்சபைச் சடங்குகளில் சிரிய அல்லது இலத்தீன் மொழி பயன்படுத்தப் படுகின்றது. ஆயினும், பக்திச் செயற்பாடுகள் இந்து சமயத்தினை ஒத்துள்ளதைக் காணலாம். இங்கு, திருவிழாக்களின் போது மரத்தாலான தேரில் வேளாங்கன்னி மாதாவின் மரச் சிற்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுவது வழக்கமாக உள்ளது. இத்தேரில் இயேசு நாதரின் வாழ்க்கை மற்றும் விவிலியத் தொடர்பான கதைகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
காரைக்காலில் உள்ள ஏஞ்சல்ஸ் மாதா கோயிலிலும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் பத்தாவது நாளில் மாதாவின் திருவுருவம் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுகிறது.
சென்னை மைலாப்பூரில் உள்ள புனித லாஸரஸ் கத்தோலிக்கத் திருச்சபைத் திருவிழாவிலும் புனிதர்களின் உருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
பிரசித்தி பெற்ற திருச்சபைத் தேர் ஒன்று திருச்சி மாவட்டம் புரத்தாக்குடி என்ற ஊரில் உள்ள மாதா கோயிலில் உள்ளது. இத்தேரின் அமைப்பும், இதில் செய்விக்கப்பட்டுள்ள சிற்பங்களும் இந்துக் கோயில் தேர்களை நினைவூட்டுவனவாக உள்ளன. இதில் ஓராண்டில் சமுதாயத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளும், மேடை நாடக நிகழ்ச்சிகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இதில் இயேசுவின் வாழ்க்கை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு தொடர்பான சிற்பங்கள் உள்ளன. விசயநகர மன்னர்களது அரசச் சின்னமும் இதில் இடம் பெற்றுள்ளது. இது போன்ற தேர்கள் ஆவூர், மலையடிப்பட்டி, ஆலம் பாக்கம், புல்லம் பட்டி ஆகிய ஊர்களிலும் உள்ளன. இவை கடந்த நானூறு ஆண்டுகளுக்குள் செய்யப்பட்டவையாகும்.
தமிழகத்தில் உள்ள பல திருச்சபைகளில் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தாலான பீடம் (altar) அமைந்துள்ளது. அவற்றில் தேவ கோட்டங்கள் போன்ற அமைப்பில் சிற்பங்கள் வைக்கப் பெறும். இவற்றில் இயேசு, மேரி, புனிதர்கள் ஆகியோரின் உருவங்கள் அடங்கும். பிறருடைய உருவங்கள் பீடத்தின் தூண்களில் வைக்கப்படுகின்றன. சென்னை மைலாப்பூரில் உள்ள புனித லாஸரஸ் திருச்சபையில் யாளியின் உருவம் காணப்படுகிறது.