தமிழ் மக்கள் சுமார் 2000 ஆண்டுகளாகவே (சங்க காலத்திலிருந்தே) காசை உபயோகித்திருக்கிறார்கள். காசு என்றும், காணம் என்றும், பொன் என்றும், கழஞ்சு என்றும் பெயர் வழங்கியிருக்கிறார்கள். சேர மன்னர்கள் புலவர்களைப் போற்றி அவர்களுக்குப் பொற் காசுகள் கொடுத்தார்கள். நார்முடிச்சேரல் என்பவன் காப்பியனாருக்கு நாற்பத்து நூறாயிரம் 'பொன்" பரிசு கொடுத்தான். ஆடு கோட்பாட்டு சேரலாதன் நச்செள்ளையாருக்கு ஒன்பது 'கா' பொன்னும் நூறாயிரம் காணமும் பரிசு கொடுத்தான். செல்வக் கடுங்கோ என்ற சேரன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பரிசு கொடுத்தான். பல காசுகளைக் கோர்த்து சங்க கால மக்கள் அணிகள் செய்து மகிழ்ந்தனர்.
...

இடுப்பில் அணியும் “காசு ஒட்டியானம்” இருந்தது. ‘கழஞ்சிக்காய்’ வடிவில் தங்கத்தை உருட்டி அதையும் காசாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு ‘கழஞ்சு’ என்று பெயர். இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் உபயோகத்திலிருந்தது.
மூவேந்தர்
சங்க காலத்தில் முடியுடை வேந்தர் மூவர் வெளியிட்ட காசுகளில் அரசரின் பெயரோ, தலையோ பொறிக்கவில்லை. அதனால் அவர்கள் வெளியிட்ட காசுகள் எது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தில் சில செப்புக் காசுகள் கிடைத்துள்ளன. சதுரமான அவற்றின் தலைப்புறம் புலி ஒன்று வாலை சுழற்றி நிற்கிறது. பின்புறம் வேலிக்கு நடுவில் ஒரு மரம் இருக்கிறது. இக்காசு சங்ககால சோழர் காசு மற்றொரு வகைக் காசு அதுவும் சதுரக்காசுதான். வெள்ளியாலோ செம்பாலோ ஆனது. அதில் தலைப்புறம் யானையும் அதன் தலைக்கு மேலே மங்கலச் சின்னங்களும் இருக்கின்றன. பின்புறம் கோடுகள் மீன் போல் உள்ளன. இக்காசுகள் சங்கச் சேரர்களின் காசுகள்.
ஆண்டிபட்டி
வட ஆற்காடு மாவட்டம் செங்கம் வட்டம் ஆண்டிபட்டி என்ற இடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு புதையல் கிடைத்தது. அப்புதையிலில் ஒரு வகை ஈயக் காசுகள் 12க்கு மேல் இருந்தன. அந்த காசுகளின் தலைப்புறம் நடுவில் இரு கோடுகளும் புள்ளிகளும் உள்ளன. படுக்கவைத்தாற் போல் ஒரு அங்குசம் காணப்படுகிறது. அதைச் சுற்றிலும் கி. பி. 200ஐச் சார்ந்த தமிழ் எழுத்துக்கள் உள்ளன. “தின்னன் எதிரான் சேந்தன் அ" என்று எழுதப்பட்டுள்ளது. தின்னனின் எதிரியான சேந்தனுடையது என்று பொருள் கூறலாம். “எ” என்ற குறில் எழுத்துக்கு இலக்கண மரபுப்படி புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. பின்புறம் மலையையும் ஆற்றையும் குறிப்பது போல் கோடுகள் உள்ளன. ஏறக்குறைய கி. பி. 200ல் சேந்தன் என்ற அரசன் ஆண்டிருக்கிறான். அவன் தன் பெயரைப் பொறித்து காசு வெளியிட்டிருக்கிறான், இது ஈயக்காசு. இதுவே தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள காசுகளில் அரசன் பெயரோடு கிடைத்துள்ள மிகவும் பழங்காசு.