முகப்பு சிற்பங்கள் கற்சிற்பங்கள்
தமிழகத்தில் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்லாலான சிற்பங்கள் ஏதும் இதுகாறும் கிடைக்கவில்லை. ஒரு சில நடுகற்கள் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இறந்துபட்ட வீரனின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றையே பண்டைய சிற்பங்களாகக் கூறலாம். இதற்கடுத்துப் பல்லவர் காலத்திலிருந்துதான் கற்சிற்பங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பல்லவர்காலச் சிற்பங்கள் இரு வகைப்படும். பாறைகளிலேயே செதுக்கப்பட்ட சிற்பங்கள் என்றும், கட்டடங்களை அழகு செய்யும் சிற்பங்கள் என்றும் இரு வகைப்படும். இவற்றில் பாறையைச் செதுக்கிக் குடைவரைக் கோயில்களாகவும், ஒற்றைக் கற்கோயில்களாகவும் அமைந்தவற்றில் பாறைச் சிற்பங்களைக் காணர்கிறோம். இவற்றில் ...
தமிழகத்தில் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்லாலான சிற்பங்கள் ஏதும் இதுகாறும் கிடைக்கவில்லை. ஒரு சில நடுகற்கள் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இறந்துபட்ட வீரனின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றையே பண்டைய சிற்பங்களாகக் கூறலாம். இதற்கடுத்துப் பல்லவர் காலத்திலிருந்துதான் கற்சிற்பங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பல்லவர்காலச் சிற்பங்கள் இரு வகைப்படும். பாறைகளிலேயே செதுக்கப்பட்ட சிற்பங்கள் என்றும், கட்டடங்களை அழகு செய்யும் சிற்பங்கள் என்றும் இரு வகைப்படும். இவற்றில் பாறையைச் செதுக்கிக் குடைவரைக் கோயில்களாகவும், ஒற்றைக் கற்கோயில்களாகவும் அமைந்தவற்றில் பாறைச் சிற்பங்களைக் காணர்கிறோம். இவற்றில் பெரும்பாலானவை மாமல்லபுரத்தில் இருக்கின்றன. மாமல்லபுரத்திற்கும் முற்பட்ட குடைவரைக் கோயில்கள் மகேந்திரவர்மனால் தோற்றுவிக்கப் பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் வாயிற் காவலர்களின் சிலைகள் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. திருச்சியில் மலையின் மேலுள்ள குடைவரைக் கோயிலில் கங்கைவார் சடைகரந்தாராகக் காணப்படும் சிவபெருமானின் சிற்பம் போற்றத்தகு எழிலும் சிறப்பும் வாய்ந்தது.
பல்லவர் காலப் பெரும் படைப்புகள் என்று உலகத்தாரால் போற்றப்பட்டவை மாமல்லபுரத்துச் சிற்பங்களாகும். இவற்றில் குடைவரைக் கோயில்களிலும், இரதக் கோயில்களிலும், பாறை களிலும், கட்டடக் கோயில்களிலும் சிற்பங்கள் உள்ளன. மாமல்ல புரத்தில் குடைவரைக் கோயில்களில் மகிஷமர்த்தினி குகை, ஆதிவராகர் குகை, வராகர் குகை, மும்மூர்த்தி குகை ஆகிய குகைக் கோயில்களில் எழிலார்ந்த சிற்பங்கள் உள்ளன. இவை அனைத்திலும் மகிஷமர்த்தினி குகையில் உள்ள இரு சிற்பங்கள் பல்லவர்களின் ஒப்பரும் படைப்புகளாகும். ஒரு புறத்தே சீறிப்பாயும் சிங்கத்தின் மீதமர்ந்து கையிலே வாள்பிடித்து கணங்கள் சூழ ஆணவமே உருக்கொண்ட மகிஷாசுரனைப் பாய்ந்து வீழ்த்துகின்ற பாவையாகக் கொற்றவை காண்பிக்கப்பட்டுள்ளாள். இச்சிற்பம் அசையாத கல்லிலே ஆரவாரம் நிறைந்த போரின் சீற்றத்தை அப்படியே சித்தரிக்கிறது. இதற்கு எதிரில் சீற்றத்திற்கு நேர்மாற்றமாக அமைதியே உருவாக ஆழ்கடலில் அரவணையில் படுத்துறங்கும் அம்மானின் தோற்றமாக மற்றொரு அற்புதப் படைப்பு உண்டு.
"கள்வா! கடல் மல்லைக் கிடந்த கரும்பே வள்ளால் உந்தனை எங்கெனம் நாள் மறக்கேனே"
எனத் திருமங்கை மன்னன் உருகிப் பாடிய கடல்மல்லைக் கிடந்த கரும்பின் உருவம் இது. இவ்விரு சிற்பங்களும் பக்கச்சுவர்களை அலங்கரிக்க, நடுவில் கருவறையை அலங்களிக்கும் பெருமானாக அன்னையோடு அமர்ந்த அப்பனாக அன்னையின் தொடைமீதமர்ந்து விளையாடும் குமரப் பெருமானை உடனர் கொணர் டவராக, சோமாஸ்கந்த மூர்த்தியாக விளங்குகின்ற சிவபெருமானின் தோற்றமும் அற்புதப் படைப்பே.
இதற்கு அருகிலுள்ள ஏனப்பெருமானின் குகையிலும் பல ஒப்பரும் சிற்பங்கள் உள்ளன. இதை ஆதிவராகர் குகை என்று கூறுகிறார்கள். இதனர் கர்ப்பகிருஹத்தில் ஆதி முனர் ஏனப்பெருமானாக விளங்கிய பன்றி முகத்தோன் சிலை உள்ளது. அருகில் உள்ள சுவர்களில் திருமகள், கொற்றவை, நான்முகன், கங்காதரர் முதலிய சிற்பங்கள் உள்ளன. தெய்வீகத் திருவுருவங் களைத் தவிர இங்கு இரண்டு மன்னர்களுடைய உருவங்களும், எழிலே உருவாய் அவர்களது அருகில் நிற்கின்ற தேவியர் உருவங்களும் உள்ளன. வராகர் குகை என்ற பெயர் பெற்ற குகையிலும் "அந்தரம் ஏழினோடு செல உய்த்த பாதம்" உடையாரான திரிவிக்கிரம மூர்த்தியின் உருவும், ஆழ்கடல் புகுந்து நிலமங்கையை எடுத்த வராக மூர்த்தியின் உருவமும், கொற்றவை, திருமகளின் சிற்பங்களும் உலகப் புகழ் வாய்ந்தவை. இதேபோன்று மும்மூர்த்தி குகைகளிலுள்ள சிற்பங்களும் அழகுற வடிக்கப்பட்டவை.
இங்கு இரதங்கள் என்று கூறப்படும் கற்கோயில்களின் புறத்தே பல சிற்பங்கள் கவின்பெற அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அர்ஜுன இரதம் என்னும் கோயிலிலும், தர்மராஜ இரதம் என்னும் கோயிலிலும் உள்ள சிற்பங்கள் மிகச் சிறந்தவை. அர்ஜுன இரதத்தில் கிழக்குச் சுவரிலும், தெற்குச் சுவரிலும் உள்ள பெண்களின் உருவங்கள் பல்லவர் காலப் பெண்கள் எவ்வளவு எழில் மிக்கவர் களாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்றுகள். இடை மெலிந்து கொடிகள் போல் காட்சியளிக்கும் இப்பூங்கொடிகளின் எழில் பார்ப்போர் மனதைப் பரவசப்படுத்தும் உருவங்களாகும். தர்மராஜ இரதத்தின் மேல் இரு நிலைகளிலும் உள்ள தெய்வத் திருவுருவங்களின் அமைதியும் முகத்திலே தோன்றும் பொலிவும் பல்லவச் சிற்பிகளின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகள்.
அகன்ற பாறையில் இயற்கையாக அமைந்த இடைவெளியை வானத்திலிருந்து விழும் கங்கையாறாகக் கற்பித்து, அதன் கரையில் கையை உயர்த்திக் காலைத் தூக்கி கடுந்தவம் புரியும் பார்த்தனுக்குப் பாசுபதம் அளிக்கும் பரமனைப் படைத்து விண்ணில் உலவும் தேவர், கந்தர்வர், இயக்கர், கிண்ணரர், சித்தர், சாரணர் முதலியோர் விண்ணிலே பறந்து வந்து இப்பெரும் காட்சியைப் போற்ற, கானகத்தே வாழும் கானவர்களும், கடிந்து செல்லும் விலங்குகளும், நாட்டகத்தே வாழும் நல்லோரும், களிறும் பிடியும் இவ்வரும் காட்சியிலே தங்களை மறந்து நிற்க, கீழ் உலகிலிருந்து வெளிப்போந்து கைகூப்பித் தொழுகின்ற நாகர்களது உருவையும் தாங்கி நிற்கின்ற இவ்வரும் படைப்பு அனைத்துலகையும் இணைத்து வருவோர் அனைவரையும் கலை இன்பத்தில் ஆழ்த்தும் கல்லிலே தோன்றும் கவிதையாகும். பண்டைய உலகில் விலங்குகளை மிகச் சிறப்பாக உயிர்த்துடிப்பு உள்ளவையாகச் சிற்பங்களிலே வடித்துள்ளதை மாமல்லபுரத்தில்தான் காணலாம். இதைப் போன்ற மற்றொரு பாறைச் சிற்பமும் அரைகுறையாகச் செதுக்கப்பட்டு மாமல்லையில் காணப்படுகிறது.
மேற்குறித்த சிற்பங்கள் பாறையில் இருந்த இடத்திலேயே செதுக்கப்பட்டவை ஆகும். கற்கோயில்களைப் பல்லவர்கள் எடுத்த போதும் சிற்பங்களைத் தனித்தனியாகச் செதுக்கி பொருத்தாமல் சுவரை முதலில் எழுப்பி அவ்விடத்திலேயே சிற்பங்களைச் செதுக்கியுள்ளது மேற்குறித்த மரபைப் பின்பற்றியே ஆகும். இவ்வாறு சுவரில் இருந்த இடத்திலேயே சிற்பங்களைச் செய்வது, மண்ணிட்டாளரின் கலையைப் பின்பற்றியதாகும். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரையில் செங்கல்லால் சுவர்களை எழுப்பி அதிலேயே சுதையால் உருவங்களைச் செய்வது மரபு என்று கண்டோம். அதே கலையைப் பல்லவர்கள் கல்லிலே மாற்றி அமைத்ததை அவர்களது கட்டடக் கோயில்களில் காணலாம்.
பல்லவர்களது கட்டடக் கோயில்களில் மிகவும் சிறந்த எழில் வாய்ந்த சிற்பங்கள் காஞ்சியில் இராஜசிம்மனால் தோற்றுவிக்கப்பட்ட கைலாயநாதர் கோயிலில் உள்ளன. இங்கு சிவபெருமானின் பல்வேறு தோற்றங்களும், தேவியர்களினர் தோற்றங்களும், திருமால், நாண்முகன், முருகன், கொற்றவை முதலியவர்களின் தோற்றங்களும் பல்வேறு நிலைகளில் படைக்கப்பட்டுள்ளன. உள்ளே விளங்குகின்ற பெருமானின் பேரருளை நினைந்து நினைந்து கூத்தாடிப் பெருமிதம் கொள்வார்களாகச் சிறுசிறு கணங்கள் விமானத்தின் அடியிலே சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிவபிரான் புரிந்த ஆடல்களைத் தாங்கி நிற்கும் கயிலயங்கிரியைக் காட்டிலும் சிறந்ததாகத் தோற்றுவிக்கப் பட்டது இக்கோயில் என்று அங்குள்ள கல்வெட்டுக் கூறுகிறது. தென்னிந்தியாவில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வளவு மகத்தான கோயிலை யாரும் எடுப்பித்ததில்லை. அன்று தமிழகத்தில் இருந்த சிற்பங்கள் அனைத்திலும் மிகப்பெரிய சிற்பங்கள் இக்கோயிலில்தான் தோற்றுவிக்கப்பட்டன.
இதேபோன்று சற்றுக் காலத்தால் பிற்பட்ட காஞ்சி வைகுந்தநாதர் கோயிலிலும் அழகிய சிற்பங்கள் உள்ளன. இங்கு பல்லவர்களது வரலாறு முழுவதும் சிற்பமாகச் செதுக்கப் பட்டுள்ளதைக் காணலாம். இச்சிற்பங்கள் கல்லால் ஆனவை. ஆயினும் சுண்ணாம்புச் சாந்து பூசி அழகிய வண்ணம் பூசப்பட்டு மிளிர்ந்தன. பொதுவாகக் கூறுமிடத்து சிற்ப வல்லமையில் பல்லவருக்கு ஈடாகத் தமிழகத்தில் யாரையும் கூறமுடியாது. பல்லவர்களது கோயில்கள் அழகிய சிற்பங்கள் போலவே காட்சியளிக்கும். எளிமையான அமைப்பும், அணிகலன்கள் அதிகமின்றி இயற்கையழகு மிளிர, ஒப்பற்ற சிற்பங்களைப் பல்லவர் தோற்றுவித்தனர்.
பல்லவர்களது சிற்பங்களைப் போலவே கி.பி. 6, 7, 8-ஆம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டிய மன்னர்களும் குகைக் கோயில்களில் சிற்பங்களை அமைத்துள்ளனர். திருமெய்யம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் பாண்டியர்களது சிற்பங்களைக் காணலாம். சற்றேறக்குறைய கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் கழுகுமலையில் ஒற்றைக் கற்கோயில் செதுக்கப் பட்டுள்ளது. இதில் பாண்டியர்களது சிற்பக்கலையின் உன்னத படைப்புக்களைக் காணலாம். பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களைத் தவிர தனியாகச் செதுக்கி வைக்கப்பட்ட பாண்டியர் சிற்பம் ஒரு சிலவே கிடைத்துள்ளன.
அதியமான் மன்னர்களால் நாமக்கல் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு குடைவரைக் கோயில்களில் நல்ல அழகிய சிற்பங்கள் இருக்கின்றன.
சுமார் கி.பி. 850-லிருந்து தஞ்சையை ஆண்ட சோழர்கள் எடுத்துள்ள கோயில்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. இவற்றில் கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டவை பெரும்பாலும் சிவாலயங்களில் இன்றும் எஞ்சியுள்ளன. கருவறையின் கோட்டங்களை அலங்கரிக்கும் இவை தெய்வங்களின் பல்வேறு உருவங்களைச் சித்தரிக்கின்றன. ஒரு சில அரசர், அரசமாதேவியர் முதலியோரின் உருவங்களாகவும் காணப்படுகின்றன. சிறப்பாகக் குடந்தைக் கீழ்க்கோட்டம், ழரீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில், பசுபதி கோயில் என்னும் புள்ளமங்கை, திருவாரூர் அறநெறிச்சுரம் முதலிய கோயில்களில் மிகச்சிறந்த சிற்பங்கள் இருக்கின்றன. இவற்றில் குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும், யூரீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயிலிலும் உள்ள உருவச் சிலைகள் வியத்தகும் வகையில் ஒப்பரும் படைப்புகளாகும். கொடியிடையார்களாக உயர்ந்து எழில் உருவாக தாம் நிற்குமிடத்திலிருந்து வெளியே வந்து வருவோர்களை வரவேற்பவர்கள் போல் உயிருள்ள மங்கையர்களாக படைக்கப்பட்டுள்ள சில பெண்களின் சிற்பங்கள் உலகக் கலைப் படைப்புகளிலேயே மிகச்சிறந்தவை என்று பல நாட்டோராலும் போற்றப் பட்டவை. முக்கியமாகக் குடந்தைக் கீழ்க்கோட்டத்திலுள்ள மங்கையரின் உருவத்திற்கு ஈடு இணையே கிடையாது. தமிழக சிற்பக் கலை சிறப்பாகச் சோழர்களது கலை மிகவும் உன்னத நிலையை எட்டிப்பிடித்தது என்பதற்கு இச்சிலைகள் எடுத்துக்காட்டுகள்.
இதே காலத்தில் பல கற்கோயில்களின் வாயில்களை அலங்கரிக்கும் துவாரபாலகர்களது சிலைகளும் மிகச் சிறப்பாக செய்து வைக்கப்பட்டுள்ளன. கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்காலக் கோயில் என்றால் அங்கு துவார பாலகர்களது சிலைகளைக் காணத்தவறக்கூடாது. அவ்வளவு அற்புதப் படைப்புக்கள் அவை.
இக்காலக் கோயில்களில் மற்றுமொரு சிறப்பும் உண்டு. இக்கோயில்களின் அதிட்டான வர்க்கங்களில் சிவபுராணம், இராமகாதை முதலிய புராண இதிகாசக் காட்சிகள் தொடர்ந்து சிறுசிறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிறப்பாகக் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் இராமாயணம் முழுவதும் தொடர்ந்து பல சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 9,10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோயில்களில் பல்லவர் காலக் கோயில் போல் அல்லாமல் சிற்பங்கள் தனித்தனி யாகச் செதுக்கப்பட்டுக் கோட்டங்களின் உள்ளே பொருத்தி வைக்கப் பட்டுள்ளன. இங்கு கட்டடமும் சிற்பமும் சமநிலை வகிக்கின்றன. இக்காலக் கோயில்களைக் கண்ணுறும்போது கட்டடமும் தெரிகிறது. அதிலிருந்து தனித்ததொரு அழகுடையதாய்ச் சிற்பங்களும் தெரிகின்றன. பல்லவர் காலத்தில் கட்டடமும் சிற்பம்போல் காட்சியளிக்கிறது என்று முன்னர் கூறினோம்.
தஞ்சையில் மாபெரும் கோயிலைத் தோற்றுவித்த இராஜராஜன் காலத்திலிருந்து ஒரு மாறுதலைக் காண்கிறோம். இராஜராஜன் கருங்கல்லால் வானளாவும் கட்டடத்தை எழுப்பினான். அவனது கவனம் முழுவதும் கட்டடத்தில் தலையாய் நின்றது. அவன் கட்டுவித்த கோபுரங்களையும் விமானங்களையும் ஏராளமான சிற்பங்கள் அலங்கரித்த போதிலும் அவை கட்டடத்திற்கு அங்கமாகக் கட்டடத்தின் பெருமிதத்திலே மறைந்து காணப்படுகின்றன. இதனைப் பின்பற்றி வந்த இராஜேந்திர சோழனும் கட்டடச் சிறப்பிற்கு முதலிடம் அளித்தபோதிலும் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள சிற்பங்கள் அழகில் ஒப்பற்றவையாய்க் காணப்படுகினர்றன. சிறப்பாகக் கலைமகளின் சிற்பமும், சண்டிக்கு அருள்பாலித்த அண்ணலாக சண்டீச்வர பிரசாத தேவராகத் தோற்றமளிக்கும் சிவபிரானின் சிற்பமும் மிக வனப்புடையவை. தாராசுரத்தில் இரண்டாம் இராஜராஜன் தோற்றுவித்த இராஜராஜேச்சுரம் கோயிலிலும் தில்லையினர் வாயில்களை அலங்கரிக்கும் கோபுரங்களில் வைக்கப்பட்ட சிற்பங்களும் பிற்காலச் சோழர் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். இருப்பினும் பிற்காலச் சோழர் சிற்பங்கள் கட்டடத்தின் அங்கமாக இடம்பெறுகின்றனவே அன்றி தங்களது தனித்தன்மையை இழந்துவிட்டதைக் காணலாம்.
சோழர் கால இறுதியில் போசள மன்னர்கள் திருச்சிக்கு அருகில் கண்ணனூர் (சமயபுரம்) என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது திருவரங்கப் பெருமானின் கோயிலில் குழலூதும் பிள்ளைக்கு ஒரு கோயில் எடுப்பித்துள்ளார்கள். அங்கு அழகிய ஆயர் மகளிரின் சிற்பங்கள் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றன. சிறப்பாக ஒரு ஆயர் மகள், திருவரங்கப் பெருமானின் மீது ஆறாக் காதல் கொண்டவள், தன் நினைவிழந்து உடலிலே உடையேதுமின்றி தன் நிலை அழிந்து அரங்கத்து அம்மானையே நினைந்து நினைந்து நிற்க, எதிரில் வந்த தோழி இவள் நிலையை உணர்த்த, நாணம் மேலிட நிற்கின்றாளாகக் காண்பிக்கப்பட்டுள்ளாள்.
"என்னையும் நோக்கி எந்தனர் அல்குல் நோக்கி
ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் அன்னைஎனர் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா"
என்ற திருமங்கை மன்னனின் பாசுரத்தையும்
“தன்னை மறந்தாள் தனி நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவனர் தாளே”
என்ற அப்பர் பிரானின் அடிகளையும் இது நினைவூட்டும்.
கி.பி. 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட விஜயநகரப் பேரரசர்கள் பல சிற்பச் செழுமை வாய்ந்த மண்டபங்களைத் தோற்றுவித்துள்ளனர். இம்மண்டபங்களின் தூண்களில் பல சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. சிறப்பாகக் குதிரை மீதும், யாளி மீதும் அமர்ந்து பாய்ந்து வரும் வீரர்களின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. விஜயநகர மன்னர்கள் காலத்தில் அரபு நாட்டிலிருந்து ஏராளமான குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆதலின் இதைப் பிரதிபலிப்பதாக ஏராளமான குதிரை வீரர்களின் சிற்பங்கள் கல்யாண மண்டபங்களை அலங்கரிக்கின்றன. விஜயநகர மன்னர்கள் தெலுங்கு, கன்னடப் பகுதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். ஆதலின் அப்பகுதியிலிருந்த சில உருவ அமைப்புகளையும், ஆடை அணிகலனர்களையும் இவர்களது சிற்பங்களில் காணலாம். விஜயநகரக் காலத்திற்கு முன்னர் தமிழகச் சிற்பங்களில் மாதர்களின் மார்பகங்கள் திறந்தே காண்பிக்கப்பட்டிருக்கும். புடவையால் மேற்பகுதி மூடப்பட்டு இருக்காது. விஜயநகரர் காலத்திலிருந்துதான் புடவை மாதர்களின் மேல்பகுதியை மறைத்து காணிபிக்கப்படுவது சிற்பங்களில் காணப்படுகிறது. விஜயநகர மன்னர்களின் தானைத் தலைவர்களாக வந்த நாயக்கர்கள் மதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, கும்பகோணம், திருச்சி முதலிய இடங்களிலும் பல சிற்பங்களைத் தோற்றுவித்துள்ளனர். இவர்களது சிற்பங்கள் பெரும்பாலும் தூண்களை அலங்கரிப்பவையாக உள்ளன. 5 அல்லது 6 அடிக்கு மேல் உயர்ந்தவையாக உடலைப் பல்வேறு கோணங்களில் வளைத்து முத்தாலும், மணியாலுமான பல அணிகளை அணிந்தவையாக இவை காட்சியளிக்கின்றன. இவற்றில் குறவன், குறத்தி முதலிய சிற்பங்கள் மிக எழில் வாய்ந்தவை. முதன்முறையாகப் பாண்டிநாட்டுப் பகுதியில் திருவிளையாடற் புராணத்தின் அடிப்படையில் பல சிற்பங்கள் இக்காலத்தில் இருந்துதான் தோற்றுவிக்கப்பட்டன. மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்துச் சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. நாயக்கர் காலச் சிற்பங்களுக்கு இவை நல்ல எடுத்துக்காட்டுகள். இதற்குப் பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார் சிற்பப் பணிபுரிந்துள்ளனர்.