பழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.
கல்வெட்டுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கல்லெழுத்துக் கலையாக கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் பரிணமித்துள்ளன. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 50 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. எண்ணிக்கையில் அதிகமான கல்வெட்டுகளும் தமிழகத்திலேயே உள்ளன.
தமிழ்க் கல்வெட்டுகளில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமிக் கல்வெட்டுகள் மிகப் பழமையானவை. இவை குகைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர் மலை, மறுகால்தலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் இக் கல்வெட்டுகளைக் காணலாம். பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளதால் இவை ‘பிராமிக் கல்வெட்டுகள்’ என்று வழங்கப்படுகின்றன. ‘குகைக் கல்வெட்டுகள்’ என்றும் அழைப்பர்.
கீழவளவு, ஆனைமலை, அழகர் மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, திருவாதவூர், விக்கிரமங்கலம், மாங்குளம், கருங்காலக்குடி, புகழூர், அரசலூர், மாமண்டூர் என்று பல இடங்களில் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு எழுதும் முறை
முதன்மைச் சான்றாகக் கருதப்படும் கல்வெட்டுக்களை எழுதுவதற்கென்றே சில பிரத்யேக நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் தொடக்கத்திலிருந்தே இந்நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சான்றாக அசோகரது பெரும்பாலான கல்வெட்டுக்கள், தமிழகத்தில் காணப்படும் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டுக்கள், பூலாங்குறிச்சி கல்வெட்டுக்கள் ஆகியன சமதளத்தின் மீது கூட வெட்டப்படாது மேடு பள்ளமிக்க சொரசொரப்பான கற்பாறைகளின் மீது வெட்டப்பட்டுள்ளன. எவ்வித நேர்த்தியுமின்றி காணப்படும் இவற்றைப் படித்துணர்வதிலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆனால் காலப்போக்கில் கல்வெட்டு எழுதும் முறை செம்மை செய்யப்பட்டு சிரத்தையுடன் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
கல்வெட்டுக்களில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடுவதில்லை. அதே போன்று மெய்எழுத்துக்களுக்குப் புள்ளி இடும் வழக்கமும் இல்லை. இதற்கு ஓலையில் எழுதும் வழக்கம் காரணமாயிருக்கலாம். ஆகவே, அதே முறையை இங்கும் பின்பற்றிக் கல்வெட்டுக்களை எழுதியுள்ளனர். சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் குறிக்க முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாகக் குத்துக்கோடு ஒன்று இடப்பட்டுள்ளது. இம்முறை சில கல்வெட்டுக்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது. அசோகரின் கால்சி கல்வெட்டில் வாக்கியத்தின் இறுதியில் குத்துக்கோடு இடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலாம் குலோத்துங்கனின் சிதம்பரம் பாடல் கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கனின் திருவண்ணாமலைப் பாடல் கல்வெட்டு போன்ற பல பாடல் கல்வெட்டுக்களில் குத்துக்கோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாடல் வடிவக் கல்வெட்டுக்களுக்கு வரி எண் இடுகின்ற வழக்கமும் காணப்படுகின்றது. சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டு இவ்வகைக்கு முதல் சான்றாகும்.கல்வெட்டு வெட்டப்படுவதற்கு முன் மேடுபள்ளங்கள் சமன் செய்யப்பட்டு ஒரு சமதளம் உருவாக்கப்படும். பின்னர் அதன் மீது எளிதில் அழியாத ஒரு வகை மை அல்லது செங்காவி கொண்டு கல்வெட்டு வாசகம் எழுதப்படும். இவ்வாறு கல்வெட்டு வாசகம் எழுதுபவர் லிபிகாரா, லேக்க, கரண, கரணிக, காயஸ்தா என பலவாறு அழைக்கப்பெறுகிறார். தமிழ்க் கல்வெட்டுக்களில் இவர் எழுத்தர் என்ற பொருளில் எழுதுவான் என்று குறிப்பிடப்படுகிறார். (இவ்வாறு செங்காவியால் எழுதப்பட்டு உளியால் வெட்டப்படாது உள்ள கல்வெட்டுக்களைத் தமிழகத்தில் தாராசுரம், அரிட்டாபட்டி, திருநாவலூர் மற்றும் நார்த்தாமலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் காணலாம்.) அதன் பின்னர் சூத்ரதாரர், சிலாகூடர், ரூபகாரர் என அழைக்கப்பெறும் கல்வெட்டு செதுக்குபவர் செங்காவியால் எழுதப்பட்ட வாசகங்களின் மீது உளி கொண்டு கீறி எழுத்துக்களைச் செதுக்குவார். இவ்வாறு எழுத்துக்களைக் கீறுவதற்கு இரு வகையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. எழுத்தைப் பொறிக்க நேரடியாக உளியால் பாறையைக் கீறுவது ஒரு வகை. இதில் எழுத்துக்கள் வெட்டப்பட்ட இடங்கள் மட்டும் பள்ளமாகவும் பிற பகுதிகள் சமதளமாகவோ அல்லது புடைப்பாகவோ காணப்படும். மற்றொரு வகையில் எழுத்துக்களை நேரடியாக உளி கொண்டு செதுக்காது எழுத்துக்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் செதுக்குவது ஆகும். இதன் மூலம் எழுத்துக்கள் மட்டும் நன்கு புடைப்புடன் காட்டப்படும். இதற்குச் சான்றாக அறச்சலூர், விக்கிரமங்கலம் கல்வெட்டுக்களைக் கூறலாம். தமிழகத்தில் கல்வெட்டு பொறிப்பதற்கு முன்னர் மன்னனின் வாய்மொழி உத்தரவானது ஒருவரால் நேரடியாகக் கேட்கப்பட்டு பின்னர் அச்செய்தி ஓலையில் எழுதப்பட்டு அதன் பின்னரே கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு மிகச் சிறப்பாக விளக்குகிறது. இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள கேட்டார் (உலவியப்பெருந்திணை நல்லங்கிழான் இனங்குமான்), கேட்டு வந்து கூறினன் ஓலை எழுதுவான் (றமன் காரிக்கண்ணன்), இது கடைப்பிஓலை காற்கண்டெழுதிக் கொடுத்தேன் (நாரியங்காரி) ஆகிய சொல்லாட்சிகள் மூலம் இதனை அறியலாம்.
கல்வெட்டுக்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் சொற்களுக்குப் பதிலாக சொற்குறுக்கங்ளைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. சான்றாக, சம்வத்ஸர என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சமவத், சம்வ, சம் போன்ற சொற்குறுக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று மன்னர்களின் நீண்ட மெய்க்கீர்த்திகளை முழுமையாகப் பொறிக்காமல் முதல் சொல்லை மட்டும் குறிப்பிட்டு பின்னர் ஸ்ரீ மெய்க்கீர்த்திக்கு மேல் என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு.
பொதுவாகக் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் மங்கலக் குறியீடுகள் காணப்படுகின்றன. பிற்காலக் கல்வெட்டுக்களில் நந்தி, சிவலிங்கம், சங்கு, தாமரை இந்து சமயக் குறியீடுகள் இடம்பெறத் தொடங்கின. வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அவ்வணிகக்குழுவில் இடம்பெற்ற பலரின் சின்னங்களுடன் மங்கலச் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஏர் சின்னம் பொறிக்கப்பட்ட சித்திரமேழிக் கல்வெட்டுக்கள் இவ்வகையைச் சார்ந்தவை.
கல்வெட்டு வெட்டும்போது பிழை ஏற்படின் அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அசோகரின் கால்சி கல்வெட்டில் பிழையான சொல் அடிக்கப்பட்டு அதன் சரியான சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட செய்தியை ஒரே மொழியில் இரு வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதும் முறையும் சில கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. மகாபலிபுரத்திற்கு அருகிலுள்ள சாளுவங்குப்பத்திலுள்ள அதிரணசண்டேஸ்வரர் கல்வெட்டு கிரந்தம், நாகரி என இரு வரி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மராட்டியர் காலத்திய கல்வெட்டுக்கள் தமிழ்-மராத்தி, தமிழ்-மராத்தி-தெலுங்கு, தமிழ்-மராத்தி-தெலுங்கு-ஆங்கிலம் என இரு மொழி, மும்மொழி, நான்கு மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.