மண்ணில் புதையுண்டு காணப்படும் தொல்லியல் சான்றுகளையும், அவை கிடைக்கும் சூழல்களையும் அறிவியல் பூர்வமாக அகழ்ந்து (தோண்டி), முறையாகப் பதிவுசெய்து சேகரித்து பகுப்பாய்வு செய்வது அகழாய்வாகும். பண்பாட்டு எச்சங்களை வகைப்படுத்தி அறிவியல் முறையில் ஆய்தலாகிய அகழாய்வு தொல்லியல் வரலாற்றின் ஒரு முக்கியப் பிரிவாகும்.
அகழாய்வு மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation sites), ஈமச்சின்னங்கள் அமைந்த பகுதி (Burial sites) ஆகிய இருவிடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் வாழ்ந்த பகுதி என்பது அரண்மனை, ஊர், கோயில், கோட்டை, ஆற்றங்கரையோரங்கள், கடற்கரை பட்டினம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றினை அகழாய்வுக்கு உட்படுத்தி வரலாறு அறிதல் ஒரு முறையாகும்....
மண்ணில் புதையுண்டு காணப்படும் தொல்லியல் சான்றுகளையும், அவை கிடைக்கும் சூழல்களையும் அறிவியல் பூர்வமாக அகழ்ந்து (தோண்டி), முறையாகப் பதிவுசெய்து சேகரித்து பகுப்பாய்வு செய்வது அகழாய்வாகும். பண்பாட்டு எச்சங்களை வகைப்படுத்தி அறிவியல் முறையில் ஆய்தலாகிய அகழாய்வு தொல்லியல் வரலாற்றின் ஒரு முக்கியப் பிரிவாகும்.
அகழாய்வு மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation sites), ஈமச்சின்னங்கள் அமைந்த பகுதி (Burial sites) ஆகிய இருவிடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் வாழ்ந்த பகுதி என்பது அரண்மனை, ஊர், கோயில், கோட்டை, ஆற்றங்கரையோரங்கள், கடற்கரை பட்டினம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றினை அகழாய்வுக்கு உட்படுத்தி வரலாறு அறிதல் ஒரு முறையாகும். மனிதர்கள் இறந்த பின் புதையுண்ட இடத்தில் அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களான கல்வட்டம், கல்திட்டம், கற்குவை, நெடுங்கல், தாழி, நடுகல் ஆகியவற்றை அகழாய்வு செய்தல் ஒரு முறையாகும்
அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள் அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆராயப்படுகின்றன. காலக்கணிப்பு செய்வற்கு கரிமக்கணிப்பு முறை (radiocarbon dating), ஒளி உமிழ் காலக்கணிப்பு முறை (thermoluminescence), மரவளையக் கணிப்பு முறை (dendrochronology) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
அகழாய்வுக்குப் பின்னர் அகழாய்வுகள் குறித்த அறிக்கைளை, அதாவது கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை வரலாற்றுப் புரிதலோடு, தொடர்புடைய விடயங்களோடு வெளியிடுதல் அகழாய்வு அறிக்கை ஆகும்.
அகழாய்வுக்குப் பின்னர் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் அருங்காட்சியகத்தில் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கக் காட்சிப்படுத்தப்படுகின்றன.
தமிழக அகழாய்வுகளில் பெரும்பாலும் சங்க கால ஊர்களான கரூர், பூம்புகார், அழகன்குளம், மாங்குளம், மாங்குடி, கொடுமணல், கொற்கை, வசவசமுத்திரம், கீழடி ஆகியவை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. அவை பண்டைய தமிழக சமூக, பண்பாட்டு வரலாற்றை அறிய உதவுவதோடு தமிழக வரலாற்றுக் காலத்தை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்லவும் உதவுகின்றன.