முகப்பு சிற்பங்கள் உலோகச் சிற்பங்கள்
தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள செப்புத் திருமேனிகள் உலக மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இவை எழில் மிகுந்து கலை நிறைந்து காணப்படுவதால் விலை மதிப்பில்லாச் செல்வங்களாகத் திகழ்கின்றன.
வரலாறு
செம்பில் சிறந்த உருவங்களைப் படைக்கும் கலை, சங்க காலத்திலிருந்தே சிறந்து வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் அகழாய்வில் செம்பாலான பல பொருள்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் “அன்னை தெய்வம்" ஒன்றின் உருவம் கிடைத்துள்ளது. அதுதான் இதுகாறும் கிடைத்துள்ளவற்றில் மிகவும் தொண்மையானது. அத்துடன் கோழி, ...
தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள செப்புத் திருமேனிகள் உலக மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இவை எழில் மிகுந்து கலை நிறைந்து காணப்படுவதால் விலை மதிப்பில்லாச் செல்வங்களாகத் திகழ்கின்றன.
வரலாறு
செம்பில் சிறந்த உருவங்களைப் படைக்கும் கலை, சங்க காலத்திலிருந்தே சிறந்து வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் அகழாய்வில் செம்பாலான பல பொருள்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் “அன்னை தெய்வம்" ஒன்றின் உருவம் கிடைத்துள்ளது. அதுதான் இதுகாறும் கிடைத்துள்ளவற்றில் மிகவும் தொண்மையானது. அத்துடன் கோழி, நாய் போன்ற செம்பாலான உருவங்களும் கிடைத்துள்ளன. இவை கிறிஸ்துவிற்கு முன்னர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
பின்னர் பல்லவர் காலத்திலிருந்து பல செப்புப் படிமங்கள் கிடைத்துள்ளன. சில அறிஞர்கள் பல்லவர் காலத்தில் செப்புப் படிமங்கள் இல்லை எனக் கருதுகின்றனர். ஆனால் இக்கருத்து ஏற்புடையதல்ல. கிடைத்துள்ள பல செப்புப் படிமங்களினர் அமைதியைக் கொண்டே அவை பல்லவர் காலத்தவை எனத் திட்டவட்டமாகக் கூறலாம். கோயில்களிலே செம்பாலான தெய்வப் படிமங்களை அலங்கரித்து வீதியில் உலாவாக எடுத்துச் செல்வது தேவாரத் திருப்பதிகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஆதலின் செப்புப் படிமங்கள் வழக்கிலிருந்தன என்பதில் ஐயத்திற்கிடமில்லை.
காவிரிப்பூம்பட்டினத்தில் மேலையூர் என்ற பகுதியில் ஒர் அழகிய மைத்ரேயர்” உருவம் கண்டெடுக்கப்பட்டது. அது இப்பொழுது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. அது செம்பால் செய்யப்பட்டது. மேலே தங்க முலாம் பூசப்பட்டு விளங்குகிறது. சுமார் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. கோவை மாநகருக்கு அருகில் உள்ள சிங்காநல்லூர் என்ற இடத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆகிய திரிவிக்கிரமனின் செப்புத் திருமேனி ஒன்று வழிபாட்டில் உள்ளது. எழில் வாய்ந்த அவ்வுருவம் பல்லவர்களது சிற்ப அமைதியை நினைவூட்டுகிறது. பாண்டிக் கொடுமுடியில் கோயிலில் வழிபாட்டிலுள்ள திருமாலின் சிலை ஒன்றும், கூரம் என்ற இடத்தில் கிடைத்த நடமாடும் பெருமானின் உருவம் ஒன்றும் சற்றேறக்குறைய இக்காலத்தைச் சார்ந்தவை. சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள அம்மை அப்பனாய் விளங்கும் சோமாஸ்கந்தர் உருவம் ஒன்று ஈடில்லா எழில் வாய்ந்தது. திருவாலங்காடு என்ற இடத்தில் இவ்வுருவம் கிடைத்தது. அப்பன் அமர்ந்திருக்கும் ஏற்றமும், அன்னையின் எழில் உருவாம் அருள் வடிவும் பார்க்கப் பார்க்க பரவசம் ஊட்டுபவை.
செப்புக் கலையின் பொற்காலம்
சோழப் பெருமன்னர்கள் பெருங்கோயில்கள் பல எடுத்தனர். அவற்றிற்கு ஏராளமான செப்புத் திருமேனிகளைச் செய்தளித்துள்ளனர். ஆதித்த சோழன், பராந்தக சோழன் ஆகிய மன்னர்களின் காலத்தே செய்தளிக்கப்பட்ட செப்புத் திருமேனிகள் அழகானவை. அவர்களால் எடுக்கப்பட்ட கோயில்களில் உள்ள சிற்பங்களை இவை ஒத்து விளங்குகின்றன. பராந்தக சோழனின் மகன் கண்டராதித்த சோழன் சிறந்த சிவபக்தி பூண்டவர். இவரது தேவியார் செம்பியன் மாதேவியார் என்ற புகழ்மிக்க சோழப் பேரரசியாவார். இத்தேவி பல கோயில்களுக்குப் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செப்புத் திருமேனிகள் செய்தளித்துள்ளார். இவர் செய்து வைத்துள்ள பல செப்புத் திருமேனிகளைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. தமிழகத்தில் உள்ள செப்புத் திருமேனிகளில் மிகவும் எழில் வாய்ந்தவை செம்பியன் மாதேவியால் செய்தளித்தவையாகும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுவர். நன்னிலம் வட்டத்தில் கோணேரிராஜபுரம் என்ற இடத்தில் இத்தேவி செய்து வைத்த ஒப்பற்ற செப்புத் திருமேனிகள் இன்றும் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் பல கோயில்களில் இத்தேவியார் அளித்த செப்புத் திருமேனிகள் உள்ளன.
ஆடவல்லான்
தமிழகம் தோற்றுவித்த சிறந்த கலைப் படைப்புகளில் "ஆடவல்ல பெருமானாக - நடராஜ மூர்த்தியாக" உள்ள உருவே உலகோர் அனைவரின் கருத்தையும் கவர்ந்திருக்கிறது. நடராஜ உருவிலே வீசி எடுத்த பாதம்’ என்றும், ‘குஞ்சித திருவடி என்றும் சதுர நடம்’ என்றும் பல்வேறு தாண்டவங்கள் உண்டு. இவை அனைத்திலும் தில்லையில் ஆடுகின்ற 'ஆனந்தத் தாண்டவம்' என்னும் ஆடவல்லானி அமைதியே மிகவும் வனப்புடையது. இவ்வுருவைக் கண்டே உலகம் வியக்கிறது. ஆனந்தத் தாண்டவம் புரியும் ஆடவல்ல பெருமானின் செப்புத்திருமேனி இல்லாத கோயிலே தென்னகத்தில் இல்லை. இவ்வுருவம் பராந்தக சோழனுடைய காலத்திலிருந்துதான் காணப்படுகிறது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அப்பர் பெருமான் காலத்திலிருந்தே இவ்வுருவம் சிறந்து விளங்கியது என்று மற்றும் பிறர் குறிப்பர். எப்படியிருப்பினும் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் ஆடவல்ல பெருமானின் அற்புதத் திருமேனிகளை ஆயிரக்கணக்கில் செய்து அகம் மகிழ்ந்தது தமிழகம்.
உத்தமசோழனும், அவரது தேவியாரும் பல செப்பு உருவங்களைச் செய்து கோயில்களுக்கு அளித்திருக்கின்றனர். தமிழகமே வியக்கும் வண்ணம் தஞ்சையில் பெருங்கோயிலைத் தோற்றுவித்த "இராஜராஜப் பெருந்தகை” பல சிறந்த தெய்வ உருவங்களை செம்பில் வடித்து அளித்திருக்கிறானர். உருவங்களுடைய அமைதியைத் தெளிவாகக் கல்வெட்டிலும் குறித்து வைத்திருக்கிறானர். இவ்வாறு அளிக்கப்பட்ட பல செப்பு உருவங்களைத் தஞ்சைப் பெருங்கோயிற் கல்வெட்டுகள் பல குறிக்கின்றன. உருவங்களின் அமைதியை எவ்வளவு சிறப்பாகக் கல்வெட்டில் குறித்துள்ளனர் என்பதற்குக் கீழ் உள்ள கல்வெட்டு சான்று கூறும்.
"கீழ் கிடந்த முயலகனோடும் கூட பாதாதி கேசாந்தம் முக்காலே அரைக்கால் முழு உசரமும் பூரீஹஸ்தம் நாலும் ஜடைமேல் கங்கா பட்டாரகியும், ஜடை ஒன்பதும் பூமாலை ஏழும் உடைய கனமாக எழுந்தருளுவித்த ஆடவல்லார் திருமேனி ஒன்று: ரத்தின நியாசம் செய்து இவர் எழுந்தருளி நின்ற மூவிரல் உசரமுடைய பத்மம் ஒனர்று: ஐவிரல் உசரத்தில் அரைமுழ நீளத்து பதிற்றுவிரல் அகலமுடைய பீடம்" என்பதாகும் அக்கல்வெட்டு.
இராஜராஜன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் பல அழகிய செப்பு உருவங்கள் செய்து வைக்கப்பட்டன. அவற்றில் சில இப்போது கிடைத்துள்ளன. ஏறு ஊரும் பெருமான்' ஆன விருஷவாகன தேவர் சிலையும், அவரின் தேவி உமா பரமேச்வரி சிலையும் மிகச்சிறந்த அழகுடையவை. சிறந்த தமிழகக் கலைஞனால் தோற்றுவிக்கப் பட்டவை. இதுதவிர மலைமகள் மணவாளன், பிச்சை உகக்கும் பெருமான்', 'கரிய கஞ்சுகண் ஆன வைரவன்', 'சண்டேசன்", ஆடவல்லான்', 'வெண்காட்டில் உறையும் பெண் காட்டும் உருவான்' முதலிய உருவங்களும் அங்கு கிடைத்துள்ளன. அவற்றில் பல கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இவை இராஜராஜன், அவன் மகன் முதல் இராஜேந்திரன் அவன் மகன் முதல் இராஜாதிராஜன் ஆகிய மன்னர்களின் காலத்தில் செய்தளிக்கப்பட்டவை. இராஜேந்திர சோழன் தோற்றுவித்த கங்கைகொண்டசோழபுரத்துப் பெருங்கோயிலில் முருகப்பெருமானுடைய செப்புச் சிலை ஒன்று உள்ளது. அது இராஜேந்திர சோழன் காலத்தில் செய்தளிக்கப்பட்டது. இதுபோன்று பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் செப்புத் திருமேனிகளைச் செய்துள்ளனர். இதன் பின்னர் ஏராளமான செப்பு உருவங்கள் செய்தளிக்கப்பட்ட போதிலும் அவை அவ்வளவு எழில் வாய்ந்தவை அல்ல.
செப்புத் திருமேனிகள் - இருவகை
செப்புத் திருமேனிகள் இருவகைப்படும். முழுவதும் கனமாகச் செய்யப்பட்ட செப்புத் திருமேனிகள் என்றும் உள்ளே பொள்ளலாகச் செய்யப்பட்ட திருமேனிகள் என்றும் இருவகைப்படும். தமிழகத்தில் செய்யப்பட்ட திருமேனிகள் அனைத்தும் முழுதும் கனமாகச் செய்யப்பட்ட செப்பு உருவங்களாகும், பல வாகனங்கள் கனப்பொள்ளலாகச் செய்யப்பட்டவை.
தேன்மெழுக்கு முறை
செப்புப் படிமங்களைச் செய்யும் கலை இன்றும் தமிழகத்தில் நிலைத்துள்ளது. எந்த உருவைச் செய்ய வேண்டுமோ அவ்வுரு போல் முதலில் தேன் மெழுகினால் செய்வர். மெழுகினால் ஆன உருவின் மேல் புற்றுமண் பூசி நிழலிலே உலர வைப்பர். இதன் பின்புறத்தே தலையிலும், இடையிலும், அடியிலும் துளைகள் இருக்கும். இது நன்கு உலர்ந்த பின்னர் தீயிலே இடுவர். மண்ணின் உள்ளே மெழுகிருந்த பகுதி அச்சாக நிற்கும். பெரும்பகுதி செம்பும், மிகச்சிறிய அளவில் பித்தளை, தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றையும் கலந்து உருக்கி அச்சின் பின் நடுவிலுள்ள துளையின் வழியாக ஊற்றுவர். தலையிலும் அடியிலும் உள்ள துளையின் வழியாக உலோகக் குழம்பு வெளிப்படும். அப்பொழுது அச்சு முழுவதும் உலோகம் பரவி இருக்கிறது என்று அறிவர். இதைக் குளிர வைப்பர். ஊற்றிய உலோகம் கெட்டியாகும். பின்னர் அச்சை உடைத்து வார்ப்பை வெளியில் எடுப்பர். பின்னர் சிற்றுளி கொணர்டு திறனுக்கு ஏற்பச் செதுக்கி எழிலுற அமைப்பர். இம்முறையை தேன் மெழுக்கு முறை' என்பர். இவ்வாறு செய்யப்பட்ட உருவம் முழுவதும் கனமாக இருக்கும். ஐந்து உலோகக் கலவை ஆனதால் பஞ்சலோகம்’ என்பர்.
பொள்ளல் முறை
நடுவில் பொள்ளல் உடையதாகச் செய்யவேண்டின், முதலில் மண்ணைப் பிடித்து, அதன்மேல் மெழுகால் உருவை அமைத்து, அதன்மேல் மண் பூச வேண்டும். இதைத் தீயிலிட்டால் வெளியேயும் உள்ளேயும் மண் உருவு இருக்க, இடையிலுள்ள மெழுகு மட்டும் உருகிவிடும். இவ்வச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றினால் கனப்பொள்ளலான உருவம் கிடைக்கும்.
தமிழகத்தில் செப்பு உருவங்கள் செய்யும்போது மண்ணாலான அச்சை உடைத்து விடுவதால் மற்றுமொரு உருவம் அதே அச்சிலிருந்து செய்யமுடியாது. அதற்கு மீண்டும் மெழுகினால் உருவம் பிடித்து, மண் இட்டு, அச்சு செய்து பின்னர்தான் மற்றொரு உருவம் பெறமுடியும். இவ்வாறு ஒவ்வொரு உருவத்திற்கும் தனித்தனியாக அச்சு செய்வதால் இது சிறந்த கலையாகப் போற்றப்படுகிறது. தமிழகக் கலைக்கும், இந்தியாவின் வடபாற் கலைக்கும் மற்றுமொரு வேறுபாடும் உணர்டு. தமிழகத்தில் மெழுகினால் செய்யப்பட்ட உருவம் எளிமையாகவே அமைக்கப்படும். நுண்ணிய வேலைப்பாடுகள் அந்நிலையிலே இருக்கமாட்டாது. உலோகத்தால் உருவத்தை வார்த்த பிறகு நுணர்ணிய வேலைப்பாடுகள், ஸ்தபதியின் ஆற்றலுக்கேற்ப உளி கொண்டு செதுக்கி அமைக்கப்படும். ஆனால் இந்தியாவின் வடபாகத்தில் மெழுகாலான உருவிலேயே நுண்ணிய வேலைப்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும். உருவம் வார்த்த பின்னர் அதிக செதுக்கும் வேலை இருக்காது.
தமிழகத்து நூல்களில் சிறந்த குறிப்பு ஒன்று காணப்படுகிறது. ஓர் ஊரில் தெய்வ உருவை செம்பினால் செய்ய விழையும்போது, மெழுகினால் செய்த உருவை அலங்கரித்து ஊர் முழுவதும் வலமாக எடுத்துச் செல்வர். பின்னரே மண்ணிட்டு அச்சு செய்வர். இவ்வாறு ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் ஊரார்களின் ஒப்புதலையும், அவர்கள் விரும்பினால் வேண்டிய மாற்றங்களையும் செய்ய வாய்ப்புண்டு. உருவம் முழுவதும் வார்த்து செதுக்கியமைத்து அதன் பின்னர் அவற்றை உரிய பீடங்களிலே அமைக்கும்போது பல இரத்தினக் கற்களைப் பீடத்திலிட்டு பின்னர் தெய்வ உருவை அப்பீடத்தில் பொருத்துவர். இதற்கு இரத்தின நியாசம் செய்தல்" என்று பெயர். எவ்வாறு கருவறையில் தெய்வச் சிலைகளை பிரதிஷ்டை செய்கிறோமோ, அதுபோல செப்பு உருவங்களுக்கும் பிரதிஷ்டை செய்வதாய் இச்செயல் அமையும்.
உருவைத் தெய்வமாக மாற்றும் கடைசிச் செயல் கண் திறப்பது ஆகும். கலை நிறைந்த ஸ்தபதி உளியால் கணிணைச் செதுக்கியவுடன் அச்சிலை தெய்வமாகக் கொள்ளப்படும். கண் திறப்பது சிறந்த விழாவாகக் கொண்டாடப்படும். அப்பொழுது அவ்வழகிய செப்புத் திருமேனியை வடித்த ஸ்தபதிக்கு பட்டாடைகள் அளித்து மலர்மாலைகள் அணிவித்து பொன்னும் பொருளும் கொடுத்து கெளரவிப்பர், கலைக்கு முதலிடமளித்த நாடல்லவா!
இவ்வாறு செய்தளிக்கப்பட்ட செப்புத் திருமேனிகள்தான் தமிழகக் கோயில்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன.