முகப்பு சிற்பங்கள் தந்தச் சிற்பங்கள்
பல பொருட்களைக் கொண்டு சிற்பங்கள் செய்யினும், விலை உயர்ந்ததும், கிடைத்தற்கு அரியதுமான யானைத் தந்தத்தால் சிலை செய்வது என்பது தனி மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது. எனவே தான் ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று கூறுவர். சிற்பம் செய்யும் பத்துப் பொருள்களில் ஒன்றாகத் தந்தத்தையும் திவாகர நிகண்டு என்னும் நூல் குறிப்பிடுகிறது.
தந்தக் கட்டில்
சிற்பமேயன்றி மன்னர்கள் உறங்கும் கட்டில்களும், இறைவன் துயிலும் கட்டில்களும் பல்லக்குகளும் தந்தத்தால் செய்யப்பட்டன. அவற்றில் சிறுசிறு உருவங்களும் செய்விக்கப் பட்டன. ப...
பல பொருட்களைக் கொண்டு சிற்பங்கள் செய்யினும், விலை உயர்ந்ததும், கிடைத்தற்கு அரியதுமான யானைத் தந்தத்தால் சிலை செய்வது என்பது தனி மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது. எனவே தான் ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று கூறுவர். சிற்பம் செய்யும் பத்துப் பொருள்களில் ஒன்றாகத் தந்தத்தையும் திவாகர நிகண்டு என்னும் நூல் குறிப்பிடுகிறது.
தந்தக் கட்டில்
சிற்பமேயன்றி மன்னர்கள் உறங்கும் கட்டில்களும், இறைவன் துயிலும் கட்டில்களும் பல்லக்குகளும் தந்தத்தால் செய்யப்பட்டன. அவற்றில் சிறுசிறு உருவங்களும் செய்விக்கப் பட்டன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பயன்படுத்திய கட்டில் பற்றி நக்கீரரால் நெடுநல்வாடையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்கட்டில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து போரில் இறந்துபட்ட யானையின், தாமாக விழுந்த கொம்புகளைக் கொண்டு செய்யப் பட்டதாம். சிங்கம் முதலிய விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற காட்சிகள் பொறிக்கப் பட்ட தகடுகள் அக்கட்டிலில் பொருத்தப்பட்டனவாம். சேர மன்னன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் கட்டில் பற்றிப் பதிற்றுப் பத்து கூறுகிறது.
அருங்காட்சியகச் சிற்பங்கள்
தந்தத்தால் ஆகிய சிற்பங்கள் பல, மேலை நாட்டு அருங்காட்சியகங்களிலும், திருவரங்கம் கோயில் அருங்காட்சியகத்திலும் காணப் படுகின்றன.
லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்
இலண்டன் பிரி்ட்டிஷ் அருங்காட்சியகத்தில் தற்போது வைக்கப் பட்டுள்ள குழந்தைக் கிருஷ்ணர் தந்தச் சிற்பம் நேர்த்தியான அழகுடையதாகும். இதில் கிருஷ்ணன் ஆலிலையில் படுத்துக் கொண்டு பாத விரலைச் சுவைப்பது போல் உள்ளார். இலண்டனில் தனியார் சேகரிப்பில் இராமாயணத் தொடர்பான சிற்பங்கள் உள்ளன. இதில் இராமன் ஆசனத்தில் அமர்ந்திருக்க இலக்குவன் அவனருகில் நின்று கொண்டிருக்கிறான்.
விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம்
விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் சிவன்- பார்வதி திருமணக் கோலத் தந்தச் சிற்பம் உள்ளது. நின்ற நிலையிலுள்ள இவ்விறை உருவங்கள் கிரீடம், காதணி மற்றும் பிற ஆபரணங்களுடன் திகழ்கின்றன. சிவன்- பார்வதிக்குப் பின்னால் மகாவிஷ்ணு நிற்கிறார். தல விருட்சம் உள்ளது. இது பதினேழாம் நூற்றாண்டின் மதுரை நாயக்கர்களின் கல் திருமேனிகளைப் பெரிதும் ஒத்துள்ளது. இச்சிற்பத் தொகுதியில் உள்ள ஆடை அலங்காரம் மிக நேர்த்தியாக மடிப்புகளுடன் காணப்படுகிறது. விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள தந்தச் சீப்பில் உள்ள சிற்பமொன்றில் ஒரு தம்பதியர் நான்கு பணிப் பெண்கள் சூழ உள்ளனர். பணிப் பெண்களின் கைகளில் மலரும், பறவையும் காணப்படுகின்றன. தனியார் பாதுகாப்பில் உள்ள தந்தச் சீப்பு ஒன்றில் ஒரு ஆண் பஞ்சு மெத்தையில் படுத்துள்ளான். தனது மனைவியின் தலைமுடியைக் கோதுகிறான். அப்பெண் அவனது கால் ஒன்றினை வருடிக் கொண்டிருக்கிறாள். கட்டிலுக்கடியில் பூனை ஒன்றுள்ளது.
வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம்
வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகத்தில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சிற்பம் உள்ளது. இது 27 சென்டி மீட்டர் உயரமுள்ளது. இச்சிற்பத்தில் அழகான தலைப்பாகை, நீண்ட காது வளையம், ஆபரணங்கள் செறிந்த ஆடை, இடது கையில் கத்தி ஆகியவை நேர்த்தியாக அமைந்துள்ளன.
எடின்பர்க் ராயல் ஸ்காட்டிஷ் அருங்காட்சியகம்
எடின்பர்க்கில் ராயல் ஸ்காட்டிஷ் அருங்காட்சியகத்தில் தம்பதியர் உருவங்களில் ஒரு பெண் ஆடவனுக்கு வெற்றிலை மடித்துத் தருவது போன்ற சிற்பங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஆண்களும், பெண்களும் ஆதி வாசிகளைப் போன்று இலைகளை ஆடையாகத் தரித்துள்ளனர். ஒரு பெண்ணின் கால் பாதத்திலிருந்து ஒரு பணியாள் முள் எடுக்கின்றான். பாரீஸ் அருங்காட்சியகத்தில் உள்ள தந்தச் சிற்பம் ஒன்றில் நாயக்க மன்னர் ஒருவரின் முன்னால் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண் தன் கைகளில் பறவை மற்றும் பழம் ஏந்தியுள்ளாள். மன்னரின் தலைப்பாகையும் ஆடையும் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டுள்ளன.
வெர்ஜீனியா அருங்காட்சியகம்
வெர்ஜீனியா அருங்காட்சியகத்தில் ஆண், பெண் இருவருடைய தந்தச் சிற்பங்கள் உள்ளன. அவர்களது ஆடை, ஆபரண அலங்காரங்கள் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. ஆண் ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் மலரும் வைத்துள்ளான். அவனது தலைப்பாகை நாயக்க மன்னர்களது கிரீடத்தை ஒத்துள்ளது. பெண்ணின் ஆடைகள் விலையுயர்ந்த அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
சான்பிரான்ஸிஸ்கோ ஆசியன் அருங்காட்சியகம்
சான்பிரான்ஸிஸ்கோ ஆசியன் அருங்காட்சியகத்தில் திருவரங்கம் கோயில் போன்று கட்டப்பட்ட அமைப்பில் திருவரங்கம் அரங்கநாதர் துயில் கொண்டிருப்பது போல் அழகிய தந்தச் சிற்பம் உள்ளது. மேல் பகுதியில் நின்று கொண்டிருப்பது போன்று சிற்பம் வடிக்கப் பட்டுள்ளது. அதற்குக் கீழே விஷ்ணு அனந்த சயனத்தில் உள்ளார். அதற்குக் கீழ் உற்சவர் தேவியருடன் காட்சி தருகின்றார். துவார பாலகர்களும் கணபதியும் இடம் பெற்றுள்ளனர். இத்தந்தச் சிற்பம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. இச்சிற்பம் பதினேழாம் நூற்றாண்டில் செய்யப் பட்டதாகும்.
திருவரங்கம் கோயில் அருங்காட்சியகம்
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தந்தத்தினால் ஒப்பற்ற சிற்பங்களை உருவாக்கச் செய்துள்ளார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திலும், அழகர் கோயிலிலும் திருவரங்கத்திலும் ஏராளமான சிற்பங்கள் தந்தத்தால் செய்விக்கப்பட்டன. இவற்றில் சில திருவரங்கம் கோயில் அருங்காட்சியகத்திலும் இன்னும் சில மதுரைக் கோயில் காட்சிக் கூடத்திலும் உள்ளன. இந்தத் தந்தச் சிற்பங்களிலும் சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. கிருஷ்ணர், இராமர் உருவங்களும் காணப்படுகின்றன. இவை தவிர ஆண் பெண் பாலியல் தொடர்பான சிற்பங்களும் இக்காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உருவச் சிலைகளில் திருமலை நாயக்கர் உருவமும் கிடைத்துள்ளது. திருவரங்கம் கோயிலில் உள்ள திருமலை நாயக்கர் உருவம் மிக அழகு வாய்ந்ததாகும். இங்கு, சில ஐரோப்பியருடைய தந்தச் சிலைகளும் உள்ளன. இதில் ஒருவர் வாள் வைத்துள்ளார். அவருக்கு அருகில் நாய் உள்ளது. கந்தர்வர்கள், விண்ணோர்களுடைய உருவங்கள், இறக்கைகளைக் கொண்ட ஏஞ்சல்ஸ் போன்ற அமைப்பில் உள்ளன. இது நாயக்கர் காலத்து மேலை நாட்டுக் கலைத் தொடர்பைக் காட்டுகிறது. முத்து விசயரங்க சொக்கநாதர் என்பவர் திருவரங்கத்து அரங்கன் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார். அக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்த அம்மன்னர் அங்கு ஐந்து அடி உயரமான தனது உருவச் சிலையையும், தன் மனைவி மற்றும் மகனது உருவச் சிலைகளையும் தந்தத்தால் செய்து வைத்துள்ளார். இன்றும் இவ்வுருவங்களுக்குத் தனியாகப் பரிவட்ட மரியாதை நடந்து வருகிறது.
பிற தந்த சிற்பங்கள்
கோயில்களிலும் அரண்மனைகளிலும் தந்தப் பல்லக்குகளும், இருக்கைகளும் நேர்த்தியான வேலைப்பாடுடைய சிற்பங்களால் அமைக்கப்பட்டன.
பல்லக்குகள் இருக்கைகள்
சில இருக்கைகளில் கால்கள் சிற்பத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றில் யாளிகளின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. யாளிகள் கண்களைத் திறந்தும்,வாயைப் பிளந்தும், கொம்புகளுடனும் காணப் படுகின்றன. இருக்கைகளின் கால்கள் சிம்ம உருவத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். தந்தத்தாலான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பல்லக்குகள் இன்றும் திருக்கோட்டியூர், கல்லிடைக் குறிச்சி, உத்தமபாளையம், மதுரை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் காணப்படுகின்றன. குறைந்த பராமரிப்பின் காரணமாக ஒதுக்குப் புறத்தில் வைக்கப்பட்டுள்ளன.