முகப்பு வழிபாட்டுத் தலங்கள்தேடல் முடிவுகள்
கோயில்கள் நம் நாட்டில் ஆதிஅந்தமற்ற இறைத் தத்துவம் போல என்று தொடங்கியது என்றறிய அரியனவாக உள. கோயில் அரசனது அரண்மனையைக் குறிப்பதாக தொடக்கத்தில் கருதப்பட்டது. பிற்காலத்தில் தேவகோட்டங்களைக் குறிப்பதாகவும் வழங்கலாயிற்று. இரண்டும் கலந்த நிலையில் கோயில்கள் வழக்கிலிருந்ததை அதாவது அரசனின் நிர்வாகம், கட்டளை, இறைப் பணிகளை நிறைவேற்றும் பணித்தலமாகவும், இறையுணர்வு மேலோங்கிய நிலையில் கலைக்கும், சமயத்துக்கும் இருப்பிடமாகவும் அவை இருந்ததையும் கல்வெட்டுகள் நமக்குக் காட்டி நிற்கின்றன.
தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் வாழ்வில் கோயில் இரண்டற கலந்த உணர்வாகும். மனித வாழ்வின் தொடக்...
கோயில்கள் நம் நாட்டில் ஆதிஅந்தமற்ற இறைத் தத்துவம் போல என்று தொடங்கியது என்றறிய அரியனவாக உள. கோயில் அரசனது அரண்மனையைக் குறிப்பதாக தொடக்கத்தில் கருதப்பட்டது. பிற்காலத்தில் தேவகோட்டங்களைக் குறிப்பதாகவும் வழங்கலாயிற்று. இரண்டும் கலந்த நிலையில் கோயில்கள் வழக்கிலிருந்ததை அதாவது அரசனின் நிர்வாகம், கட்டளை, இறைப் பணிகளை நிறைவேற்றும் பணித்தலமாகவும், இறையுணர்வு மேலோங்கிய நிலையில் கலைக்கும், சமயத்துக்கும் இருப்பிடமாகவும் அவை இருந்ததையும் கல்வெட்டுகள் நமக்குக் காட்டி நிற்கின்றன.
தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் வாழ்வில் கோயில் இரண்டற கலந்த உணர்வாகும். மனித வாழ்வின் தொடக்கமும் முடிவும். அதன் நிலையும் பல நம்பிக்கைகளையும், சடங்குகளையும் கொண்டுள்ளது. இவையனைத்தும் நிறைவேற்றும் பொதுமைக் களமாக கோயில்கள் பண்டிலிருந்து திகழ்ந்து வருகின்றன.
இறையுணர்வு, சமயநம்பிக்கை வாழ்வின் தத்துவம் ஆகியனவற்றை தாங்குதளமாகக் கொண்டு விளங்கும் கோயில்கள் அவை மக்களிடையே பெற்றிருந்த முக்கியத்துவம் கருதியே கலை, பண்பாட்டுக் கருவூலங்களாகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசர்களால் மாற்றப்பட்டன. தம் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தி வென்ற நிலத்தில் தம் ஆதிக்கத்தை ஏற்குமாறு அம்மக்களின் மனதை வெல்ல ஒரு கோயிலை கட்டுவது மரபு. அங்ஙனம் கட்டப்பட்ட கோயில்கள் படைப் பாசறையாகவும் திகழ்ந்திருக்கலாம். ஒவ்வொரு கோயிலும் அது திகழும் ஊரின் அரசு அலுவலகமாக விளங்கின. அரச ஆணை, ஊர் பிரிவு, நாட்டு பிரிவு, நிலவுடைமை, இறையிலி முதலிய செய்திகளை தாங்கி நிற்கும் கல்வெட்டுகள் என்னும் வரலாற்று ஆவணங்கள் மிகுந்துள்ள இடமே கோயிலாகும்.
"ஒரு தலத்திலுள்ள மக்களின் சமய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற உயிர்த்துடிப்புள்ள இடமாகக் கோயில் விளங்கியது மட்டுமன்றி. அது அவ்வூர் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களிலும் பங்கு கொண்ட சமூக நிறுவனமாக விளங்கியது. கோயில் தானே நிலப் பிரபுவாகவும். முதலாளியாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்ததால் இருந்தது. கோயிற் பண்டாரம் களஞ்சியம்) வங்கி போல அமைந்து வைப்புப் பணங்களைப் பெற்றும், கடனுதவி அளித்தும் மக்களுக்கு உதவியது. கிராமக் கைத்தொழில்களின் பெருக்கத்திற்கு உதவியது. அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய வரிகள் கோயில்களால் அளவிடப்பட்டன. தனிப்பட்டவர்கள் தமது நிலங்களுக்குச் செலுத்தவேண்டிய வரிகளும் மன்னரால் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. இவற்றைவிடக் கோயில்களும் மக்களிடமிருந்து வழக்கமான கடமைப் பணத்தையும் பெற்றன. ஊரிலேயுள்ள பெரிய நிலவுடைமை நிறுவனம் என்ற முறையில் கோயில், ஊரின் விவசாயத்தில் ஊக்கங் காட்டியது. வயல்களிற் பயிர் செய்விப்பதோடமையாது புதிய நிலங்களையும் உழவுக்குட்படுத்தியது. பாழ்பட்ட நிலங்களுக்குப் புனர் வாழ்வு அளித்தது. கோயிற் பண்டாரமானது வங்கி போலக் கடமையாற்றியபடியால், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும், ஊராட்சி மன்றங்களுக்கும், வட்டியுடனும், வட்டியின்றியும் உசிதம் போல உதவியது. விவசாயிகள் தமது தொழிற்றேவைகளுக்காகக் கடன் பெற்றனர். தமது பெண்களுக்குச் சீதனம் கொடுப்பதற்குக் கூடச் சிலர் கோயிலிலிருந்து கடன் பெற்றனர். நாட்டின் பொருளாதார வாழ்வில் கோயில் நடுநாயகமாக வீற்றிருந்தது" என்று வரலாற்றறிஞர் டி.வி. மகாலிங்கம் கோயில்களின் பல்வேறு செயல்களின் பரிமாணங்களைப் பற்றிக் கூறுகிறார். அறிஞர்தம் கூற்றிலிருந்து ஒரு கோயில் ஆய்வு என்பது அந்நிலத்தின் சமயம், பண்பாடு, கலையுணர்வு, அரசியல், சமூகநிலை, பொருளாதாரநிலை ஆகியவற்றையும் இணைத்து ஆயும் ஒரு வரலாற்று நெறியாக விளங்குவதை உணரலாம்.
“திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்
திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்
பருக்கோடிப் பத்திமையாய பாடா ஊரும்
பங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும்
விருப்போரு வெண்சங்கம் ஊதா ஊரும்
விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பரித்திட்டு உண்ணா ஊரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவிநாடே“
மேற்கண்ட தேவாரப் பாடல் கோயில்கள் பண்டு பெற்றிருந்த உயர்நிலையை சுட்டுவனவாகும். "கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதும் தமிழக மக்களின் வழக்கிலுள்ள மொழியாகும்.
கோயில்கள் ஏன்? எனின், அகஞ்சார்ந்த ஆன்ம அறிவை, கலையோடும், உணர்வோடும். சடங்குகள் வழியே வெளிப்படுத்தும் ஊடகமாய் புறஞ்சார்ந்து நிற்கும் காலப்பெட்டகமாம். அவையே நம் மரபின் ஆதாரங்கள்; வரலாற்று ஆவணங்கள்; நம்மை முன்னும் பின்னும் காட்டி நிற்கும் நிலையான நம்பிக்கையின் பருப்பொருட்கள். அறநெறிகளின் ஆணிவேர்கள் இங்கிருந்தே தொடங்குகின்றன. வழிபாடும், சடங்குகளும், நம்பிக்கைகளும் மட்டுமல்லாது புறப்பொருளாய் நின்று மக்கள் வாழ்வின் பயணநிலைப்பாடுகளை தொகுத்து நிற்கும் மெய்ப்பாட்டு தத்துவ உருவே கோயிலாகும். இதனை நன்குணர்ந்த நம் பண்டைய அரசர்கள் தங்கள் அரண்மனைகளை விட உறுதியாகவும், நுணுக்கமுடனும் கோயில்களை அமைத்தனர். வாழ்வியல் நெறிமுறைகளை உணர்த்தி நிற்கும் கோயில்கள் சமூகத்தின் உயிர்நாடியாய் அன்று விளங்கிய காரணத்தால் அரசர்கள் மிகுசிரத்தையுடனும், கலையார்வத்துடனும் இறையுணர்வுடனும் கோயில்களை அமைத்தனர். அதனால் தான் பல அரண்மனைகள் சுவடழிந்த நிலையில், ஆனால் கோயில்கள் இன்றும் நம் வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. பண்டு அரண்மனைகளை வடிவமைத்த சிற்ப சாத்திரம் நன்கறிந்த நூலறிவாளர்களே கோயில்களில் சிற்பங்களையும், கலை வடிவங்களையும் அமைத்தனர்.
தென்னிந்தியாவில் பல்லவ பாண்டிய மற்றும் சோழப் பேரரசுகள் கி.பி.6ம் நூற்றாண்டிலிருந்து கோயிற் கலைப் பணிகளைத் தொடங்கின என்று கூறலாம். வல்லமை மிகுந்த பேரரசுகள் அதிக பொருட்செல்வத்தினால் ஈடுபாட்டோடு எடுப்பித்த கோயில்கள் இன்றும் அதன் சிற்பக்கலை, கட்டடக் கலை, ஓவியம், கல்வெட்டின் மொழிச் சிறப்பு ஆகியவற்றால் தன்னிகரற்று எழிலோடு விளங்குகின்றன. கோயில்களின் பராமரிப்பு இன்று இன்றியமையாததாக உள்ளது. பராமரிப்புப் பணிகளோடு, அவற்றை ஆவணப்படுத்துவதே கோயில் ஆய்வின் நோக்கமாகும்.
உலகிலே மனிதன் தோன்றிய நாள் முதல் அவனுடைய வாழ்விலே இன்றியமையாத நிலை வகிப்பவை தெய்வங்களுக்கு எடுக்கப்படும் ஆலயங்கள் கோயில்கள். இவ்வாலயங்கள் ஏன் தோன்றின? இயற்கையாகிய அன்னை, பல சக்திகளாகத் தோன்றி மனிதனை வாழ வைக்கிறாள். கதிரவனும், வெண்ணிலவும், நீரும், நிலமும், தீயும், காற்றும் இன்றேல் வாழ்வு இல்லை. சக்திகளை எப்பொழுதும் தனக்கு நல்வாழ்வு மலர வேண்டி மனிதன் வணங்கினான். இச்சக்திகளைப் பல்வேறு உருவங்களில் கண்டு, அவற்றிற்கு கோயில் எழுப்பி நாள்தோறும் வழிபட்டான்.
புராண இதிஹாசங்களின் அடிப்படை
உலகிலே மக்கள் பல குடிகளாகப் பிரிந்து பல பகுதிகளிலே வாழ்ந்தார்கள். அவ்வப்போது அக்குடிகளிலே ஒப்பற்ற தலைவர்கள் தோன்றி மனித வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக உயர்த்தினார்கள். அத்தலைவர்களைத் தங்கள் வாழ்வை மலர வைத்த தெய்வங்களாகவே, அக்குடிமக்கள் கருதினர். இவ்வாறு இந்திரன், கண்ணன், ராமர், புத்தர், மாவீரர், போன்ற தெய்வங்கள் நம்மிடையே தோன்றியுள்ளார்கள். இத்தெய்வங்கள் எல்லாம் தோன்றிய இடங்களைப் புண்ணிய பூமியாகக் கருதி அங்கு ஆலயங்களை மக்கள் எழுப்பினார்கள். இத்தெய்வத் தோற்றங்களில் உள்ள சம்பவங்கள்தான் புராணங்களாகவும், இதிஹாசங்களாகவும் பரிணமித்தன. இவற்றின் அடிப்படையிலே அனேக ஆலயங்கள் தோன்றியுள்ளன.
இவ்வாறு தென்னகத்திலே பல கோயில்கள் தொன்று தொட்டு விளங்கி வருகின்றன. அவற்றிலே முருகப்பெருமானுடைய கோயில்கள் சிறந்து திகழ்கின்றன. திருவனந்தபுரத்தில் ஆடகமாடத்து அறிதுயிலமர்ந்தோன் கோயிலும், திருஅரங்கத்துள்ள திருவமர்மார்பன் கிடந்த கோயிலும், வீங்கு நீரருவி வேங்கடத்தின் உச்சி மீமிசை செங்கண் நெடியோன் நின்ற கோயிலும் தொன்றுதொட்டு சிறந்து விளங்கும் கோயில்களாகும்.
"தேவியை வவ்விய தெண்னிலங்கைத் தசமாமுகனர்
பூவிலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலுஞ் சிலையணர்னல் செய்த இராமேச்சுரம்' - சம்பந்தர்
என்று இராமபிரானால் பூசிக்கப்பட்ட இராமேச்சுரம். இதுபோன்ற பலப்பலக் கோயில்களும் தொன்றுதொட்டே தென்னகத்தில் ஏராளமாக இருக்கின்றன.
நாடாண்ட மன்னர்கள் காடுகளை அழித்து, நீர்வளம் பெருக்கிக் குடிநிறுத்திக் கோயில் எடுப்பதும், தமிழகம் கண்ட மரபாம். தமிழகத்தைச் சிறப்போடு ஆண்ட கரிகாற் பெருவளத்தான் உறந்தையில் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கிக் கோயிலோடு குடி நிறுவினான்” என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
பக்தி
மன்னர்கள் பக்திப் பெருக்காலே கட்டிய கோயில்கள் பல உண்டு. மாமல்லபுரத்திலே உள்ள கற்கோயில் ஒன்றில் "பக்திப் பெருக்கினாலும், பரமனைப் பூஜிக்க வேண்டும் என்ற அவாவினாலும் இக்கோயிலைத் தோற்றுவித்தேன்” என்று (பக்திப் பிரஹவேன மனசா பவம் பூசஷண லியா) ஒரு மன்னன் கல்வெட்டில் கூறியுள்ளான்.
குடிகளுக்காக
குடிமக்களுடைய தேவைகள் எல்லாம் பூர்த்தியடைய வேண்டியும் அரசர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இந்த சிவபெருமானினி ஆலயம் பிரஜைகளுடைய தேவைகள் பூர்த்தியாவதன் பொருட்டு அவனால் கட்டப்பட்டது என்றும், இது உலகின் நன்மைக்காகக் கட்டப்பட்டது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இவ்வாறு எழுப்பப்பட்ட கோயில்கள் அரசனுடைய பெயருக்கும் புகழுக்கும் ஏற்பக் கட்டப்பட்டன என்றும் அறிகிறோம். யசளப் சத்ருஸம் ஆத்மன. பவனம் ஏதத் உத்தாபிதம். என்று காஞ்சி கைலாயநாதராலயத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. அதேபோன்று முதல் இராஜராஜ சோழனுடைய பெயருக்கும் புகழுக்கும் ஏற்ப தசஷிணமேருவெனக் கட்டப்பட்டதுதான் தஞ்சை இராஜராஜேச்சுரம்.
வெற்றிக்காக
தாங்கள் அடைந்த வெற்றியின் நினைவாகப் பல மன்னர்கள் கோயில்களை எழுப்பியுள்ளனர். இரண்டாம் விஜயாதித்யன் என்ற கீழைச்சாளுக்கிய மன்னன், சுமார் 12 ஆண்டுகள், உருவிய வாளுடன் 108 போர்முகங்களில், சமர் தொடுத்து வெற்றி கண்டான். இவ்வெற்றிக்குச் சான்றாகத் தான் போரிட்ட 108 இடங்களிலும் இம்மன்னன் கோயில்களை எழுப்பியிருக்கிறான். சோழப்பேரரசின் மறுமலர்ச்சிக்குக் காரணமான விஜயாலயனர், தஞ்சாபுரியைக் கைப்பற்றி, அங்கு நிசும்பசூதனிக்குக் கோயில் எடுப்பித்தாண் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.
தமிழக மன்னர்களில் தலைசிறந்த வெற்றி கண்டவன் இராஜேந்திரசோழன். இவன் கடல் கடந்து கடாரத்தையும், மற்றும் பல தீவுகளையும் வெற்றிகொண்டான். இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை இராஜேந்திர சோழனின் வெற்றிக்கொடி பறந்தது. புலவர்கள் எல்லாம் "தண்டதேவிக் கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன்” என்று போற்றினர். இம்மாபெரும் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு நகரையே நிருமாணித்து அங்கே அழியாத வெற்றிக்கோயில் ஒன்றைத் தோற்றுவித்தான். அதுவே கங்கைகொண்ட சோழிச்சுரம். இவன் போன்று மூன்றாம் குலோத்துங்க சோழனும் தன் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு பெரும் கோயில் திரிபுவனத்திலே நிறுவினான். மூன்று உலகங்களையும் வெற்றி கண்டவன் என்ற பொருளில் திரிபுவனவீரன்’ என்று இவன் பட்டம் கொண்டான். எனவே, அக்கோயிலுக்கும் திரிபுவனவிரேச்சுரம் என்று பெயர் அளித்தான். இவ்வாறு வெற்றிச்சின்னங்களாகத் தோன்றிய கோயில்கள் பலப்பல.
தேவியர் எடுத்த கோயில்கள்
மன்னனோடு வீரசிம்மாசனத்தே அமர்ந்திருந்த அரசமாதேவியர் பலரும் ஒப்பற்ற கோயில்களை எழுப்பியுள்ளனர். காஞ்சிபுரத்தில் சிறந்த கலைஞனாக ஆண்ட பல்லவ மன்னன் இராஜசிம்மன் என்பவன், இவனுடைய மாதேவி. ரங்கபதாகை என்பாள் அழகின் சிகரம் போன்றவள், மகளிர்களுக்கு எல்லாம் ஒப்பற்ற கொடி போன்றவள். அவள் இராஜசிம்மன் தோற்றுவித்த கைலாயநாதர் கோயிலின் முன்பு எழில் மிகுந்த சிறு ஆலயம் ஒன்றைக் கட்டினாள்.
நிர்மாபிதம் இதம் தாம தயா சந்திர சிகாமனே: பதாகயேவ நானோம் ரம்யம் ரங்கபதாகயா.
என்று கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்ய மன்னனின் தேவி லோகமஹாதேவி என்பவள். அம்மன்னன் காஞ்சியின் மீது மூன்று முறை படையெடுத்தான். அதன் நினைவாக லோகமஹாதேவி, பட்டடக்கல் என்ற இடத்திலே ஒரு சிவன் கோயில் எடுப்பித்தாள். அக்கோயிலுக்கு லோகமஹாதேவீச்சுரம் என்று பெயர். இப்போது விரூபாசஷர் கோயில் என்று வழங்கப்படுகிறது. சோழப் பேரரசன் இராஜராஜனுடைய தமக்கை குந்தவைப் பிராட்டியார். இத்தேவி கோயில்கள் கட்டுவதில் இராஜராஜனுக்குப் பெரும் ஊக்கம் அளித்து வந்தாள். இத்தேவியின் அன்புப்பணிக்கு எடுத்துக்காட்டாகத் தஞ்சைக் கோயிலில் "நாம் கொடுத்தனவும் நம் அக்கந் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லில் வெட்டுக" என்று தமக்கையின் பெருமையை இராஜராஜன் கூறியுள்ளான். இவ்வரசனுக்கு தந்திசக்திவிடங்கி என்ற தேவி இருந்தாள். அவளுக்கு லோகமஹாதேவி என்று மற்றொரு பெயரும் உண்டு. இவ்வரசியார் திருவையாற்றில் ஐயாரப்பர் கோயிலில் ஒராலயம் எழுப்பியுள்ளார். அதற்கு லோகமஹாதேவீச்சுரம்' என்று பெயர்.
பள்ளிப்படை
உலகிலே நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபட்ட பெரியார்களுக்கும், போர்முகத்தில் அரும்போர் செய்து வீரமரணம் எய்திய வீரர்களுக்கும் நினைவாக கல் நடுதல் தென்னக மரபு. சங்க இலக்கியங்களில் "பீடும் பெயரும் பொறித்து" கல்நட்டு அதைப் போற்றுவது குறிக்கப்படுகிறது. இதை வீரக்கல் என்றும் குறிப்பர். இதைப்போன்று இறந்துபட்டவர்களைப் புதைத்தலைப் பள்ளிப்படுத்தல் என்பர். அவ்விடத்தே கோயில் எடுப்பது நல்மரபாகும். இவற்றிற்குப் பள்ளிப்படை என்று பெயர். இவ்வாறு ஏற்பட்ட பள்ளிப்படைகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. காளஹஸ்தி அருகில் தொண்டைமாநாடு என்ற ஊரில் முதலாம் ஆதித்த சோழன் இறந்து போனான். அவன் இறந்த இடத்தில், அவன் மகனான பராந்தக சோழன் பள்ளிப்படையாக ஒரு கோயிலை எழுப்பினான். திருநல்லம் என்ற கோனேரிராஜபுரத்தில், கண்டராதித்தரின் ஞாபகமாக அவர் மனைவியார் செம்பியண் மாதேவியார் ஒரு பள்ளிப்படை எழுப்பினார். இதேபோல் சுந்தரசோழன், விக்ரமசோழன் முதலிய பல மன்னர்களுக்குக் கோயில் நிறுவப்பட்டன. இறந்துபட்ட தம் கணவரோடு உயிர் நீத்த மனைவியர்க்கும் கல்நட்டு வழிபடுவது ஒரு மரபு. இதையே மாசதிக்கல் என்பர்.
பெயர்கள்
இவ்வாறு தோன்றிய கோயில்களை மக்கள் பல பெயர்களால் அழைத்தார்கள். கோயில், நியமம், நகரம், கோட்டம், பள்ளி என்ற பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
நுதல் விழிநாட்டத்து இமையோனி கோயிலும்
உவனச் சேவலுயர்த்தோணி நியமமும்,
மேழிவலுனயர்த்த வெள்ளை நகரமும்,
கோழிச்சேவற் கொடியோனி கோட்டமும்'
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. தளி, தானம், என்ற சிறப்புப் பெயர்களும், உண்டு. சிவபெருமானுக்கு எடுத்த கோயில்களை ஈச்சுரம் (ஈஸ்வரகிருஹம்) என்றும், விஷ்ணு கோயிலை விண்ணகரம் (விஷ்ணுக்ருஹம்) என்றும் கல்வெட்டுகள் குறிக்கும். இதுபோன்று இன்னும் பல பெயர்களும் உண்டு. செங்கல்லில் கட்டப்படும் கோயிலுக்கு மண்தளி என்றும், கல்லால் கட்டப்படும் கோயிலுக்குக் கற்றளி என்றும் பெயர். அரசர்களும், அரசமாதேவியரும் தாங்கள் கட்டிய கோயில்களுக்குத் தங்கள் பெயரைச் சேர்த்து வைப்பது வழக்கம். லளிதாங்குரண் எண்பது மஹேந்திர பல்லவனுடைய பட்டங்களில் ஒன்று. எனவே இவர்ை எடுத்த கோயிலுக்கு 'லளிதாங்குர பல்லவேச்வரக்ருஹம்' என்று பெயர். ராஜசிம்மன் தோற்றுவித்த கோயிலுக்கு ராஜசிம்மேச்சுரம்' என்றும் பரமேச்வரவர்மன் தோற்றுவித்த கோயிலுக்குப் பரமேச்வர மகாவராக விஷ்ணுக்ருஹம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ராஜராஜேச்சுரம், பீமேச்சுரம், லோகமகாதேவீச்சுரம் முதலிய அனைத்தும் இவ்வாறு தோன்றியவைதாம்.
வகைகள்
கோயில்கள் பலவாறு கட்டப்பட்டன. கட்டட அமைப்பை ஒட்டியும் இவை பலவாறு பெயர் பெற்றன. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பர் பெருமான் அவர் தன் பதிகத்தில் பலவிதமான கோயில்களைப் பாடியிருக்கிறார்.
"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடெட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழிற்குழ் ஞாழற்கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில்
மணிக்கோயில் ஆலக்கோயில், திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே"
இத்துடன் பூங்கோயில், தூங்கானைமாடம் முதலிய கோயில்களையும் அப்பெரியார் குறிக்கிறார். குடிசையைப் போன்ற கோயில்களுக்கு 'குடிசைக்கோயில் என்றும், கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் இருக்கும் கோயில்களுக்கு மாடக்கோயில்கள் என்றும், தூங்குகிற யானையைப் போன்ற அமைப்புடைய கோயில்களுக்குத் 'துங்கானைமாடம் என்றும் பெயர். விமானங்களின் சிகர அமைப்பைக் கொண்டு திராவிடம், வேசரம், நாகரம் என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். விமானங்களின் மேலுள்ள சிகரங்கள் எட்டுப் பட்டைகள் உடையவையாயின் அவற்றிற்கு திராவிட சிகரம் என்று பெயர். நான்கு பட்டையுடையதாயின் நாகரம் என்றும், வட்டமாக இருப்பின் வேசரம் என்றும் அழைப்பர். இந்தியாவின் வடபகுதியில் உள்ள கோயில் அமைப்பை நாகரம் என்றும் தென்பகுதியில் உள்ளதைத் திராவிடம் என்றும் இடையில் உள்ளதை வேசரம் என்றும் சில நூல்கள் குறிக்கின்றன.