பழைய கற்காலம் என்பது தொல் பழங்காலத்தில் உணவைத் தேடி அலைந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும், அதனை உண்பதற்காகவும் கல்லால் ஆன கருவிகளைத் உருவாக்கிப் பயன்படுத்திய காலப் பிரிவாகும். கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதி பழைய கற்காலமாகும். பழைய கற்காலம் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலக்கட்டமாகும். பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்திற்கு அண்மையில் கற்களினாலான கோடரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் சில கிடைத்துள்ளன. இக்கருவிகள...
பழைய கற்காலம் என்பது தொல் பழங்காலத்தில் உணவைத் தேடி அலைந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும், அதனை உண்பதற்காகவும் கல்லால் ஆன கருவிகளைத் உருவாக்கிப் பயன்படுத்திய காலப் பிரிவாகும். கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதி பழைய கற்காலமாகும். பழைய கற்காலம் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலக்கட்டமாகும். பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்திற்கு அண்மையில் கற்களினாலான கோடரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் சில கிடைத்துள்ளன. இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. தமிழகத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்திலும், பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பழங்கற்கால மக்கள் தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர் என்று அறியலாம். மேலும் பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் கற்காலம் என்பது சுமார் கி.மு. 15,10,000 தொடங்கி கி. மு 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகள், மேற்பரப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றின் காலங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் செய்யப்பட்ட பல அகழ்வாய்வுகளிலிருந்து வெளி வந்த செய்திகள் இக்கால அளவுகளின் முறையை மாற்றி அமைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளன. இப்பணியில் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். முதலில் புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னையில் பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டெடுத்து, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என்று கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உள்நாட்டு ஆய்வாளர்களும் களஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர். புரூஸ்புட், பர்கிட், எச்.டி. சங்காலியா, வி.டி. கிருஷ்ணசாமி போன்ற பலர் இப்பணியில் ஈடுபட்டனர். 1916ல் புரூஸ்புட் தருமபுரி பகுதியிலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் சில கற்கருவிகளை கண்டெடுத்தார். இதன் பின்னர் வந்தவர்கள் இவற்றைக் கல்லாயுதங்கள் என்று கருத்து தெரிவித்தனர். தற்போது இவற்றைப் போன்ற கல்லாயுதங்கள் வரட்டனபள்ளி அருகிலும் கப்பல்வாடியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பழைய கற்காலத்தைச் சார்ந்தவை என்பது தெரியவருகின்றன. இதற்கு முன்னர் குடியம் குகைப்பகுதியில் சுமார் 30 இடங்களில் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்பட்டறைகளும், வாழ்விடங்களும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.