முகப்பு வரலாற்றுச் சின்னங்கள் குடைவரைக் கோயில்கள்
தமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை, காலத்தின் கட்டாயத் தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், சிறப்பாக மகேந்திரவர்மன் செங்கல் முதலியவற்றைப் பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்துள்ளான்.
பல்லவர் கோயில்களில் மிகவும் தொண்மையானவை மகேந்திரவர்மன் கா...
தமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை, காலத்தின் கட்டாயத் தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், சிறப்பாக மகேந்திரவர்மன் செங்கல் முதலியவற்றைப் பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்துள்ளான்.
பல்லவர் கோயில்களில் மிகவும் தொண்மையானவை மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. இம்மன்னன் தன் நாட்டின் பல பகுதிகளில் மலைகளைக் குடைவித்து கோயில்கள் அமைத்திருக்கிறான். அவற்றில் மண்டகப்பட்டு என்ற ஊரில் திருமாலுக்கும், நான்முகனுக்கும், சிவபிரானுக்கும் ஆகக் குடைவித்த கோயிலொன்று உண்டு. "இக்கோயில் மரமின்றி, சுதையின்றி, உலோகமின்றி, செங்கலின்றி தோற்றுவித்தேன்” எனக் கூறுகிறான். ஆதலின் இதற்கு முற்பட்ட கோயில்கள் இவை அனைத்தையும் கொண்டு அமைக்கப்பட்டன என்பது தெளிவு.
மகேந்திரன் காலக் குடைவரைக் கோயில்கள் நீண்ட சதுரமான மண்டபம் போல் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை “மண்டபக் கோயில்கள்” என்றும் அழைக்கலாம். பெரும்பாலானவற்றில் வாயிற்காவலர் சிலைகள் மட்டும் உள்ளன. திருச்சியில் மலையின் மேல் இவன் குடைவித்த கோயில் ஒன்று உள்ளது. அதில் “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான்" ஆன கங்காதரமூர்த்தியின் எழில் சிற்பம் சிறப்பாக உள்ளது. இவன் குடைவித்த பல கோயில்களில் தனது பட்டங்களைக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளான். இவன் தோற்றுவித்துள்ள குடைவரைக் கோயில்கள் மண்டகப்பட்டு, மாமண்டூர், பல்லாவரம், வல்லம், திருச்சி, சிங்கவரம் ஆகிய பல ஊர்களில் உள்ளன.
இவனுக்கு அடுத்து வந்த முதலாம் நரசிம்மவர்மனாகிய மாமல்லன் மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைக் கோயில்களையும், ஒற்றைக் கற்கோயில்களையும் செய்தவன் என்று இதுகாறும் கருதிவந்தனர். இக்கருத்து தவறு என இப்போது கண்டு இவற்றைத் தோற்றுவித்தவன் இரண்டாம் நரசிம்மவர்மனாகிய இராஜசிம்மனே என்று காட்டப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலில் “வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையனின்" கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆதலால் இக்குகைக் கோயில் அவன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். மாமல்லபுரத்தில் பல குகைக் கோயில்களும், ஒற்றை கற்கோயில்களும், சில கட்டடக் கோயில்களும் உள்ளன. குகைக் கோயில்களில் பெரும்பாலானவை மண்டபக் கோயில்களாக விளங்குகின்றன. இங்குள்ள குகைக் கோயில்களில் சிறப்புடையவையாக நான்கு குகைக் கோயில்களைக் கூறலாம். 'ஆதிவராகக் குகை’, மகிஷமர்த்தினி குகை', 'வராகக்குகை, மும்மூர்த்திக் குகை ஆகிய இந்நான்கு மண்டபக் கோயில்களிலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. வராகக் குகையும், ஆதிவராகர் குகையும் திருமாலுக்கு உரியவையாகும். மகிஷமர்த்தினி குகை சிவபிரானுக்குரியது. மும்மூர்த்திக்குகை என்று அழைக்கப்படுவது முருகப்பிரானுக்கும், திருமாலுக்கும், சிவபிரானுக்கும் எடுக்கப்பட்டது. இதன் அருகில் கொற்றவையின் உருவமும் உண்டு.
மாமல்லபுரத்துக்கு அருகில் சாளுவன் குப்பம் என்ற இடத்தில் இரண்டு குகைக் கோயில்களுள்ளன. ஒன்றில் வெளிமுகப்பு முழுவதிலும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது. ஆதலின் இதை ஊரார் ‘புலிக்குகை' என்பர். இது குகைக் கோயில்களின் அமைப்பிலேயே வியத்தகு வடிவுடையது. மாமல்லபுரத்தைத் தவிர தளவானூர் என்ற இடத்தில் உள்ள குகைக் கோயிலும் இம்மன்னன் காலத்தது. பின்னர் வந்த தந்திவர்மன்’ என்ற மன்னன் காலத்திலும் ஒரு சில குடைவரைக் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
கடல் மல்லை என்ற வைணவத் தலம் பூதத்தாழ்வாரால் குறிப்பிடப் பெற்றுள்ளது; எனவே, அது மிகவும் தொன்மையானது. பல்லவர்கள் காலத்தில் குடைவரைக் கோயில்கள் பல எழுந்தன. அவை எந்த அளவு வரலாற்றுக்குத் துணை புரிகின்றன என்பதைச் சிறிது காண்போம்.
பல்லவர்களை முன்னோடிகளாகக் கொண்டு, பாண்டியர்கள், முத்தரையர்கள், அதியமான்கள், சேரமன்னர்கள், கீழைச் சாளுக்கிய மன்னர்கள் தத்தம் நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் குடைவரைக் கோயில்களை அமைத்துள்ளனர். பல்லவர் பாணியைப் பின்பற்றிச் சங்கரன் கோயிலிலிருந்து கோவில்பட்டிக்குச் செல்லும் வழியிலுள்ள வெட்டுவான் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு முதலாவது குறிப்பிடத்தக்கது முருகன் கோயில். அந்தக் குடைவரைக் கோயிலையொட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். அடுத்துக் காணப்படுவது வெட்டுவான் கோயில்; இது முருகன் கோயிலுக்குப் பின்னால் மலையின் ஒரு பகுதியில், மலையிலிருந்து வேறுபடுத்திய நிலையில் கற்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுவான் கோயிலில் முன் பகுதியாகிய முகமண்டபம் கட்டட அமைப்பில் முடிவு பெறாமல் உள்ளது. இந்தக் கோயில் கருவறையின் மேல் எட்டுப்பட்டைகள் கொண்ட விமானம் அணி செய்கிறது ; பட்டைகள் தோறும் கூடுகள் அமைந்துள்ளன. விமானத்திலுள்ள கூடுகள் அல்லது சைதன்ய பலகணிகளில் யாளி, சிங்கமுக உருவங்கள் செதுக்கப்பட்டும், வளைந்து செல்லும் பூவேலைப்பாடுகளும் நிறைந்து, கட்டடக் கலைக்குச் சிற்பங்கள் அலங்காரக் கூறுகளாகப் பயன்படுகின்றன.
குடைவரைக் கோயில்கள் அல்லது குகைக் கோயில்கள் என்ற நோக்கில், தமிழ்நாட்டில் பல்லாவரம், திருச்சி, சித்தன்னவாசல், திருமெய்யம் போன்ற ஊர்களில் உள்ள குகைக் கோயில்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
சமயச் சார்பு
மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட மண்டகப் பட்டு கோயில் பிரமன், சிவன், வி்ஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அற்புதமாக அமைக்கப் பட்டதாகும். அந்தக் குடைவரை கோயில் திருக்கழுக்குன்றத்திலுள்ள வேதகிரி மலையின் உச்சிக்கோயிலிலிருந்து கீழே இறங்கி வரும் வழியிலே மலைநடுவில் கிழக்குத் திசைநோக்கியதாக, உள்ளது; அக்கோயிலில் மும்மூர்த்திகளுக்கு அமைக்கப்பட்ட மூன்று கருவறைகளையும் துவார (வாயில்காக்கும்) பாலகர்களால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த மண்டபத்தையும் காணலாம்.
திருச்சிக்கு வட மேற்கிலுள்ள நாமக்கல் பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களாகிய அதியர் இரண்டு குடைவரைக் கோயில்களைத் திருமாலுக்கு எனக் கட்டினர். புதுக்கோட்டைப் பகுதியில் பல குடைவரைக் கோயில்களை முத்தரையர், இருக்குவேளிர் போன்றவர்கள் குடைவித்தனர். இவற்றுள் சித்தன்னவாசல் சமணப் பள்ளியாக ஆயிற்று. மற்றவை சைவ, வைணவ, சக்தி சமயச் சார்புடையவையாகும்.
சிறப்பு மிகுந்தவை
புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள குன்னக்குடி (மூன்று குடைவரைக் கோயில்கள்), மிகச் சிறப்பான ‘பிள்ளையார்பட்டி’, அரிட்டா பட்டி, திருமலை போன்ற இடங்களிலும், மதுரைக்கு அருகில் மாங்குடி, ஆனைமலை (இரண்டு குடைவரைக் கோயில்கள்), திருப்பரங்குன்றம், மலையடிக் குறிச்சி, வீரசிகாமணி, ஆனையூர், திருமலைபுரம், சொக்கம்பட்டி, திருச்செந்தூர் ஆகிய குடைவரைக் கோயில்கள் கண்டு வியக்கத்தக்கவை, கழுகுமலைக் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது.
குமரி மாவட்டத்தில் திருநந்திக் கரை, துவரங்காடு, சிவகிரி, அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி போன்ற இடங்களில் காணப்படும் குடைவரைகள் ஆய்வேளிர் மரபினரால் அமைக்கப்பட்டவை ; எனினும் பாண்டியர் பாணியில் அமைந்தவை.