தொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்க...
தொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்கு கற்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டதாலும், அவைகளை வேட்டையாடுவதற்கேற்ற கருவிகளாக மாற்ற மனிதன் முதலில் சிந்திக்கத் தொடங்கியதாலும் அக்காலம் கற்காலம் என அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் அத்திரம்பாக்கம் என்ற இடம் தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
தமிழகத்தில் அத்திரப்பாக்கம், குடியம், பரிகுளம், பல்லாவரம் உள்ளிட்ட பல தொல் பழங்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. தொல் பழங்கால மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு இவ்விடங்களை அகழாய்வு செய்வதன் மூலம் தமிழக தொல் பழங்கால வரலாற்றை அறிய இயலுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் பரிகுளம் என்னும் தொல் பழங்கால வாழ்விடத்தை அகழாய்வு செய்ததன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் தொல் பழங்காலம் தொடங்கியதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய பல தொல் பழங்கால இடங்களை கண்டறிந்து அகழாய்வு செய்வதன் மூலம் இக்காலத்தை இன்னும் முன்னதாக கொண்டு செல்ல வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.