பெருங்கற்காலம் என்பது பெரிய கற்களைக் கொண்டு அமைப்புக்களை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். இத்தகைய அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டன. இவ்வாறான அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்களால், பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டன. இவ்வாறான பெருங்கல் நினைவுச் சின்னங்களை அமைத்த காலம் புதிய கற்காலத்திலும், செம்புக்காலம், வெண்கலக்காலம் உள்ளிட்ட அதனைத் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளிலும் மக்கள் அமைத்தனர். இதனால் இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனலாம் எனச் சிலர் கருதுகின்றனர்...
பெருங்கற்காலம் என்பது பெரிய கற்களைக் கொண்டு அமைப்புக்களை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். இத்தகைய அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டன. இவ்வாறான அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்களால், பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டன. இவ்வாறான பெருங்கல் நினைவுச் சின்னங்களை அமைத்த காலம் புதிய கற்காலத்திலும், செம்புக்காலம், வெண்கலக்காலம் உள்ளிட்ட அதனைத் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளிலும் மக்கள் அமைத்தனர். இதனால் இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
இக்காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புக்கள் கற்பதுக்கை (cist), கற்கிடை (dolmen), கற்குவை (cairn), பரல் உயர் பதுக்கை (cairn circle), தொப்பிக்கல் (hood stone), குடைக்கல் (umbrella stone), நெடுநிலை நடுகல் (menhir) எனப் பல வகைகளாக உள்ளன.
தமிழகத்தில் பெருங்கற்காலம் கி.மு. 1000 - 300 வரை நிலவியது. இக்காலத்திலேயே வேளாண்மையும், நிலத்திற்கான போர்களும் பெரிதும் நடந்தன. பெருங்கற்கால ஈமச்சின்னங்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்கள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றான குறிப்பிடத்தக்க ஈமச்சின்னமான நடுகல் பற்றிய பாடல்கள் எண்ணிக்கையில் அதிகம் காணப்படுகின்றன. பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான நடுகல் தொடர்ந்து கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்கள் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டக் கற்களைப் பற்றியதாகவே உள்ளன.
தொழில்கள்
பெருங்கற்காலத்தில் உலோக ஆபரணங்கள் செய்தல், மணிகள் தயாரித்தல், செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்றவற்றை கொண்டு ஆபரணங்களைச் செய்துள்ளதைப் பார்க்கும் போது இப்பல்வகை வினைஞர் கூட்டத்தை ஆதரிக்க வேளாண்மை செய்பவர்களும் அரசர்களும் பெருமளவு ஆதரவாக இருந்ததாகவே தெரிகிறது. இக்காலத்தில் மட்பாண்டத் தொழில் உச்சநிலை அடைந்து காணப்படுகிறது. ஈமத்தாழிகளைச் செய்யும் மட்பாண்டங்களும் மக்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் மட்பாண்டங்களும் இக்காலத்தில் தயாரிக்கப்பட்டன.
நம்பிக்கைகள்
பெருங்கற்கால மக்கள் வேல் (ஒருதலைச் சூலம்), சூல வழிபாட்டையும் மேற்கொண்டனர். இவை பிற்பாடு முருக வழிபாடாகவும் சிவன் துர்க்கை வழிபாடாகவும் மாற்றப்பட்டது. சக்தி வழிபாடு இக்காலத்தில் நிலவியதற்கு ஆதிச்சநல்லார் அகழாய்வில் கிடைத்த பெண் தெய்வ சிலையும், வேட்டைக்காரன் மலை பெண் தெய்வ ஓவியத்தையும் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
தமிழகத்தின் மிகப்பெரிய பெருங்கற்கால ஈமச்சின்னம் மற்றும் வாழ்விடம் அமைந்த பகுதி திருநெல்வேலியில் உள்ள ஆதிச்சநல்லூர் ஆகும். இங்கே பெருங்கற்கால ஈமத்தாழிகள் மற்றும் பானை ஓடுகள் பரந்த அளவில் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்றும் தமிழகத்தில் பரவலாக பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணக்கிடைக்கின்றன.