புதிய கற்காலம் என்பது உணவினைத் தேடி அலைந்த மனிதன் உணவினை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்ட (Food Producers) காலமாகும். உணவினை உற்பத்தி செய்வதற்கு முதல் உத்தியாக அவன் ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கினான். தொல் பழங்கால மனிதனின் நிலையான குடியிருப்புகளே புதிய கற்காலத்தின் பரிணாம வளர்நிலையாகும். புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) ...
புதிய கற்காலம் என்பது உணவினைத் தேடி அலைந்த மனிதன் உணவினை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்ட (Food Producers) காலமாகும். உணவினை உற்பத்தி செய்வதற்கு முதல் உத்தியாக அவன் ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கினான். தொல் பழங்கால மனிதனின் நிலையான குடியிருப்புகளே புதிய கற்காலத்தின் பரிணாம வளர்நிலையாகும். புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) என்ற ஒரு வகைக் கல்லினால் செய்யப்பட்டுள்ளன. கற்களால் உளிகள், சம்மட்டிகள் போன்றவைகளை ஒழுங்காகச் செதுக்கி அவற்றிற்கு மெருகூட்டியுள்ளனர் என்பது திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது தெரிய வந்தது. புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினவாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. கால்நடை வளர்ப்பிலும், செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு. 7000 அளவில், இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின. புதிய கற்காலப் பண்பாடு நிலவிய எல்லா இடங்களிலும், இதற்குரிய சிறப்பியல்புகள் ஒரே ஒழுங்கிலேயே தோன்றியதாகக் கூற முடியாது.
இவர்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில் அமர்ந்துவிட்டனர். இக்கற்காலத்தில்தான் மனிதன் நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டுள்ளான் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆடைகளை நெய்துள்ளனர். ஆடு, மாடுகளை வளர்த்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வாழ்க்கை வசதிக்கான பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எடைக்கற்கள், அம்மி, குழவிகள், கற்சட்டிகள் இவற்றுள் அடங்கும். இவர்களிடம் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் காணப்பட்டது.
தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000- 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.