தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 90 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மொழி, பண்பாடு, சமூகம், அரசியல், கொடை, வழிபாடு, பொருளாதாரம், வேளாண்மை ஆகியவற்றைக் காட்டும் காலக் கண்ணாடியாக தமிழ்க் கல்வெட்டுகள் விளங்குகின்றன. தமிழ்க் கல்வெட்டுகளின் வளர்ச்சி கட்ட நிலையாக சோழர்கள் காலத்தைக் குறிப்பிடலாம். தமிழ் எழுத்துகளின் சீரிய வரி வடிவம் பெற்றது இக்காலத்தில் தான். மிக நீண்ட வரிகளையுடைய தொடர்க் கல்வெட்டுகள் கோயில்களில் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுகள் அக்கோயிலுக்கான நிர்வாகம், வழிபாடு, கொடை, வேளாண்மை, அரச ஆணை ஆகிய செய்திகளைக் கொண்டனவாக அமைந்துள்ளன. தமிழக வரலாற்றின் ஊற்றுக்கண் தமிழ்க் கல்வெட்டுகளிலேயே அமைந்துள்ளது.
தமிழ்க் கல்வெட்டுகள் எனப்படுபவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்லுகின்றன. இவை அம் மொழி, சமூகம் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய முக முக்கியமான ஆவணங்களாக திகழுகின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து இந்தியாவில் கிடைக்கப்பெற்ற 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் மொழியில்தான் உள்ளன.
இந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள்கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும்.