தமிழ்நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையே கிரந்தம் என்பது. கிரந்தம் என்பது சமஸ்கிருத இலக்கியத்தைக் குறிக்கும். அந்த இலக்கியத்தை எழுத பயன்படுத்தப்பட்ட எழுத்தும் கிரந்தம் என்று அழைக்கப்பட்டது. தென் இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் இந்த எழுத்து முறையே சமஸ்கிருத மொழியை எழுத பயன்படுத்தப்பட்டது.
மலையாளம் தனி மொழியாக வளர்ந்தபோது சமஸ்கிருத எழுத்தையும் இலக்கணத்தையும் எடுத்துக்கொண்டு வட்டெழுத்தின் இயல்பையும் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட எழுத்து தான் ஆர்ய எழுத்து எனப்பட்டது. மலையாள மொழியை எழுத பயன்படுத்தப்பட்டது.
துளுமொழியும் இவ்வாறே செய்தாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிரந்தம் அப்படியே எழுதப்பட்டு வந்திருக்கிறது. ஏனென்றால் கிரந்த எழுத்து தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையில் கிரந்த எழுத்து என்பது பல்லவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது ஆய்வுக் குரியதாகும்.
சமஸ்கிருத மொழியை எழுதுவதற்கு தமிழ்மக்கள் வழங்கிய எழுத்து எனக் கூறும் ஆய்வாளர்கள், ஆந்திராவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இக்ஷவாகு மன்னர்களால் இந்த எழுத்து பயன்படுத்தப்பட்டதை நாகார்ஜுன் கொண்டா அமராவதியிலுள்ள கல்வெட்டுக்களில் காணமுடிகிறது என்றும் கூறுகின்றனர். அதோடு அவர்களுக்கு அடுத்தபடியாகப் பல்லவர் பயன்படுத்தினர் என்றும் கூறுகின்றனர். ஆனால் கிரந்த எழுத்துக்களில் உயிர் எழுத்துக்களும் மெய்எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே என்பதை கிரந்த எழுத்துக்களை அறிந்தவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.
நாகார்ஜுன் கொண்டாவிலும் அமராவதியிலும் காணப்படும் கல்வெட்டுக்ள் பல்லவர்களின் சமகாலக் கல்வெட்டுக்களாகவோ அல்லது பிந்தையதாகவோ இருத்தல் வேண்டும். ஆராய்தற்குரிய முக்கிய அம்சமாகும் இது.
சமஸ்கிருதமொழி செம்மொழியாக ஆக்கப்பட்டது வேத இலக்கியங்களாகிய பிராமணங்களுக்குப் பிறகும் உபநிடத நூல்களுக்கு தொடக்க காலத்தில்தான்.
வேத இலக்கியங்களில் வினைச் சொற்களின் அமைப்பு, பிராகிருத மொழியின் தாக்கம் இந்தோ ஆரிய மொழிகளின் மத்திய காலத்தியத் தாக்கம், இலக்கண மற்றதன்மை, கல்வியறிவில்லா ஆசிரியர்களால் பாடப்பட்ட தன்மை, போன்றவற்றைச் சுட்டிக்காட்டி வளர்ச்சியை ஏற்படுத்தியவர். பாணினி அவரது மாணவர்களாகிய பதஞ்சலி காத்யாயனர் ஆகியோர் குறைகளை நீக்கி இலக்கிய மொழியாக வளர்த்தனர். செம்மொழியாக வளர்ந்து (Classical Language) வளம் பெற்றது. இவ்வாறு கற்றவர்களால் சரியான மொழியாக்கப்பட்டது.
இவ்வாறு சமஸ்கிருதம் செம்மொழியாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு மெய்யெழுத்திற்கும் வர்க்க எழுத்துக்களுடன் கூடிய கிரந்த எழுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
கிரந்த எழுத்து பிராமியிலிருந்து தோன்றியது என்றும் சாதவாகனர் காலத்தில் வடமொழி சொற்களுக்கு உருவளித்து நின்ற எழுத்துக்கள் மூலம் தோன்றியது என்றும் பல்லவர்கள் உருவாக்கிய எழுத்து என்றும் பல கருத்துக்கள் உலவுகின்றன.
கிரந்தம் – என்ற சொல் வட மொழி நூலையும், சொற்களையும் எழுத்துக்களையும் – குறித்தது. தமிழகம் முழுவதும் கிரந்தம் பரவியது. நாகரி எழுத்தின் பயன்பாடு குறைவாகவே இருந்தது. பின்னர் விஜய நகர மன்னர்கள் காலத்தில்தான் சமஸ்கிருதம் எழுத நாகரியின் பயன்பாடு அதிகரித்தது.
தமிழ்நாட்டில்….
சாசனங்கள் கிரந்த எழுத்திலும், கிரந்தம் மற்றும் வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்து ஆகியவற்றில் கிடைக்கின்றன. சாசனம் என்பது பொதுச் சொல். அது இருவகைப்படும்.
- கல்லில் வெட்டப்படுவது கல்வெட்டு - சிலாசாசனம்
- செப்பேட்டில் வெட்டப்படுவது – தாம்ரசாசனம்
தெற்கே உதயமான கிரந்தம் நான்கு கட்டமாகப் பிரிக்கப்படுகிறது.
- Archaic
- Transitional
- Medieval
- Modern
இவற்றுள் முதல் பகுதியாகிய Archaic என்பது முதலாம் மகேந்திரவர்மனின் மண்டகப்பட்டு, சீயமங்கலம், தளவானூர், திருச்சி மலைக்கோடடை ராஜசிம்ம வர்மனின் காஞ்சி கைலாச நாதர் கோயில் கல்வெட்டு, தர்மராஜர் ரதம் கல்வெட்டுகள், சாளுவன் குப்பம் கல்வெட்டுகள் போன்றவை பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மனின் வைகை கரைக் கல்வெட்டு, ஏனாதி கல்வெட்டு, பாண்டியன் ஜடிலவர்மன் பராந்தக நெடுங்சடையனின் ஆனைமலை, திருச்சிராப்பள்ளி, திருப்பரங்குன்றக் கிரந்தக் கல்வெட்டுகள் போன்றவை.
Transitional காலத்தைச் சேர்ந்த கூரம் செப்பேடு இது முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. காசாக்குடி, தண்டந்தோட்டம் செப்பேடுகள் இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்தவை.
பாண்டியன் பராந்தக வீர நாராயணன் காலத்தில் வெளியிட்ட தளவாய்புரம் செப்பேடும், உத்தமசோழனின் சென்னை அருங்காட்சியகச் செப்பேடும் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.
Medieval காலத்தைச் சேர்ந்த கிரந்த எழுத்துக்களில் சோழர்கால கல் வெட்டுகள், செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் ஆகும். ஜடவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுக்கள் தளவாய் அக்ரஹாரம் செப்பேடு, வரதுங்கராமன் செப்பேடுகள் ஆகியவற்றில் உள்ள கிரந்த எழுத்துக்கள் இவ்வகையைச் சேர்ந்தது.
கிரந்தக் கல்வெட்டுகள்
- முற்றிலும் கிரந்த எழுத்திலமைந்த சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகள்.
- மெய்க்கீர்த்திப் பகுதிமட்டும் கிரந்த எழுத்தில் உள்ள சமஸ்கிருதக் கல்வெட்டு.
- தமிழும் கிரந்த எழுத்துக்களும் கலந்து எழுதப்பட்டக் கல்வெட்டுகள்.
என்று பிரிக்கலாம்.
தமிழ்நாட்டிலுள்ள தொன்மையான சமஸ்கிருதக் கல்வெட்டு – சிவன் வாயலில் உள்ள சிம்மவர்மனின் கல்வெட்டாகும்.
அடுத்து மண்டகப்பட்டிலுள்ள குடைவரைக் கோயில் கல்வெட்டு மகேந்திரவர்மன் (முதலாம்) காலத்தைச் சேர்ந்தது செங்கலின்றி மரமின்றி உலோகமின்றி சுதையின்றி அமைக்கப்பட்ட கோயில் என்கிறது அந்த கிரந்தக் கல்வெட்டு. தளவானூரிலுள்ள ஒரே பொருளில் அமைந்த தமிழ் மற்றும் கிரந்த எழுத்தில் அமைந்த கல்வெட்டுகளில் கிரந்தக் கல்வெட்டு முக்கியமான கிரந்த எழுத்துக் கல்வெட்டு, அடுத்து மாமண்டூர், குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகள், திருச்சி மலைக் கோட்டையிலுள்ள பாடல் கல்வெட்டு கிரந்த எழுத்தில் அமைந்தது.
இதுபோன்றே ராஜசிம்மனின் மாமல்லபுரம் காஞ்சி கைலாசநாதர் கோயில், சாளுவன் குப்பம், தர்ம ராஜரதம் கல்வெட்டுகளில் உள்ள கிரந்த எழுத்துக்கள் பல்லவ கிரந்தம் என Archaic வகை எழுத்துக்களில் எழுதப்பட்டவையாகும்.