முகப்பு கல்வெட்டுகள் தமிழி / தமிழ்-பிராமி
ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வரிவடிவம் அறிஞர்களால் பிராம்மி என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பிராகிருத, பாலி மொழிகளில் ‘பம்மி’ என்றும், சமசுகிருதத்தின் ‘பிராம்மி’ என்றும் இது பெயர் பெற்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை எழுத எழுதப்பயன்பட்ட இவ்வரிவடிவம், கால ஓட்டத்தில் பல்வேறு வளர்நிலைகளுக்குட்பட்டதால், 18-19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது, தமிழர்களாலும், ஏனைய இந்திய மக்களாலும் முழுதாக மறக்கப்பட்டு படிக்க இயலாத நிலையை எட்டியது. கி.பி. 1800 களில், வடஇந்தியாவில் மௌரியப் பேரரசன் அசோகனால் எழுதுவிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஒன்று அதற்கு இணையான கிரேக்க எழுத்து வரிவடிவிலும் எழுதப்பட்டிருந்ததால், அதன்வழி, இவ்வெழுத்தும் படிக்கப்பட்டது...
ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வரிவடிவம் அறிஞர்களால் பிராம்மி என்ற பெயரால் வழங்கப்படுகிறது. பிராகிருத, பாலி மொழிகளில் ‘பம்மி’ என்றும், சமசுகிருதத்தின் ‘பிராம்மி’ என்றும் இது பெயர் பெற்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை எழுத எழுதப்பயன்பட்ட இவ்வரிவடிவம், கால ஓட்டத்தில் பல்வேறு வளர்நிலைகளுக்குட்பட்டதால், 18-19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது, தமிழர்களாலும், ஏனைய இந்திய மக்களாலும் முழுதாக மறக்கப்பட்டு படிக்க இயலாத நிலையை எட்டியது. கி.பி. 1800 களில், வடஇந்தியாவில் மௌரியப் பேரரசன் அசோகனால் எழுதுவிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் ஒன்று அதற்கு இணையான கிரேக்க எழுத்து வரிவடிவிலும் எழுதப்பட்டிருந்ததால், அதன்வழி, இவ்வெழுத்தும் படிக்கப்பட்டது.
பெயர் வரலாறு
முதலில் அசோகன் கல்வெட்டுகளில் இவ்வரிவடிவம் படிக்கப்பட்டதால், இது அசோகன் பிராம்மி என்று சுட்டப்பட்டது. இவ்வெழுத்து வகைக்கும், தமிழகத்தில் கிடைத்த எழுத்து வகைக்கும் இருந்த ஒற்றுமை காரணமாகவும், அதே வேளையில் தமிழக எழுத்துகளில் சில வேற்றுமைகள் இருந்ததனாலும், இவ்வேறுபாட்டைக் குறிக்கும் வகையில் ‘தமிழ்பிராம்மி’ என்று அறிஞர்களால் அழைக்கப்படலாயிற்று. தொல்லெழுத்தறிஞர்கள் தம் ஆய்வின்போது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தகும் சமண நூலான ‘சமவாயங்க சுத்த’ என்பதில் இடம்பெற்றிருந்த 18 வகை எழுத்துகளில் ஒன்றான ‘தாமிழி’ என்ற சொல், தமிழ்மொழிக்கான எழுத்துகளையே குறித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில அறிஞர்கள் இதனைத் ‘தமிழி’ என்று குறித்தனர். கி.பி. 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெளத்த நூலான ‘லலிதவிஸ்தரத்தில், புத்தர் பயின்ற மொழிகள் என்ற வகையில் செய்யப்பெற்ற பட்டியலில், ‘திராவிடி’ என்றொரு எழுத்துவகை குறிக்கப்படுதலின், அது தமிழ்மொழிக்கான எழுத்துவகையினையே குறித்தாதல் வேண்டும் என்றும் கருத்துரைத்தனர். இவை இவ்வாறிருக்க, தொன்மைத் தமிழ் எழுத்து பல்வேறு வளர்நிலைகளை கடந்து வந்துவிட்ட வழியில் வட்டெழுத்து, தமிழ் எனப் பல பெயர்களால் சுட்டப் பெற்றது. ஆதலினாலும், அவற்றில் ஒன்று ‘தமிழ்’ என்று வழங்கப் பெறுவதாலும், மிகப்பழைய தமிழ் எழுத்துகளைத் ‘தொல்தமிழ் எழுத்து என்று பெயரிட்டழைக்கலாம். ஆனால் தொல்லெழுத்தறிஞர்கள் பலரும் தமிழ் பிராம்மி என்ற சொல்லையே தொல் தமிழ் எபத்துகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்.
தோற்றம்
இவ்வெழுத்துகள் முதலில் யாரால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதில் பெரும் கருத்து வேறுபாடு உள்ளது. அசோகன் பிராம்மியிலிருந்தே இவ்வரிவடிவம் பெறப்பட்டது என்பாரும், தமிழர்களால் முதலில் அறிமுகம் செய்யப் பெற்றுப் பின்னர் அசோகனால் உள்வாங்கப்பட்டுப் பயன் படுத்தப்பட்டது என்பாரும் உளர். மேலும் இவ்வெழுத்துக்களை உருவாக்கியவர்கள் தமிழர்களே என்றும், வேறொரு எழுத்துவகையிலிருந்து உள்வாங்கப்பட்டவை என்றும் இருவேறு கருத்துகளும் உள்ளன. தமிழர்களே உருவாக்கினர் என்ற கருத்திலும், இந்தியாவின் மிகப்பண்டைய, படிக்கப் படாத ஓவிய / ஒலியெழுத்து வகையிலமைந்த ஹரப்பா நாகரிக எழுத்திலிருந்து உருவாக்கப்பட்டது என்றும், தமிழக அகழாய்வுகளில் கிடைக்கும் மண்பாண்டங்கள் மற்றும் சில தொல்பொருட்கள் மீதும் கீறப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து வளர்ந்ததே என்றும் இருவகைக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. வெளிநாட்டு எழுத்து வகையிலிருந்து உள்வாங்கப்பட்டது என்று கருத்தில், உலகில் பல்வேறு பண்டைய வரி வடிவங்களை ஆராய்ந்து முடிவில் வடசெமிட்டிக் எழுத்து வகையினை அடிப்படையாகக் கொண்டே இவை உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். செமிட்டிக் எழுத்துவகையில் 22 மெய்யெழுத்து வரிவடிவங்கள் கி.மு. 1000 வாக்கில் வழக்கில் இருந்துள்ளது. பின்னர் கி.மு. 800 வாக்கில் சிரிய பாலஸ்தீனப் பகுதியில் உயிரெழுத்து வடிவங்கள் வழக்கிற்கு வந்துள்ளன. தொல்தமிழ் எழுத்து வரிவடிவங்கள் பகுதி உயிர்மெய் வகையாகவும் பகுதி உயிர்வகையாகவும் விளங்குகின்றன. பாரசீக வளைகுடா வழியாக வணிகத்தொடர்பின் வழி அறியப்பட்டு, இவ்வரி வடிவங்களின் பரவல் நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு அறியப்பட்ட இவ்வரிவடிவங்கள், தமிழ்மொழிக் கேற்ப ஒற்றுமையுடையனவாகவும் (identical) அதே வரிவடிவினவாகவும் (Similar) சிறிய குறியீடுகளால் வேறுபடுத்தப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்டனவாகவும் (hormonised) தமிழர்களால் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதலாம். எவ்வாறிருப்பினும், கி.மு. 6 – 5 ஆம் நூற்றாண்டு வாக்கில், தமிழகம் முழுவதும் தமிழ்மொழியை எழுதுவதற்கு இவ்வரிவடிவம் மிகுந்த அளவில் அனைத்துத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை.
தனித்தன்மை
அசோகனால் பயன்படுத்தப்பட்ட எழுத்து வகையில் உயிர் எழுத்துகள் 52ம், வல்லின எழுத்துகள் ஐந்திற்கும் வர்க்க எழுத்துகளுடன் 20 உம், இடையின, மெல்லொலி எழுத்துகள் 9 –உம், மூன்று வகை சகரங்களும் ‘ஹ’ ன்றும் ஆக 34 எழுத்துகள் அடிப்படை எழுத்துகளாக இருக்க, தமிழகத்தில் தமிழை எழுதப் பயன்படுத்தப்பட்ட வரிவடிவில் உயிரெழுத்துகள் 12ம் மெய்யெழுத்துக்கள் 18 ம் ஆக 23 அடிப்படை எழுத்துக்கள் உள்ளன. மெய்யெழுத்துகளில், ழ, ளகர, றகர, னகரங்கள் தமிழுக்கேயுரிய சிறப்பெழுத்துகளாக உள்ளன. அசோகன் எழுத்து வகை பிராகிருத, பாலி மொழிகளுக்கேற்றவாறும், தமிழ் எழுத்துவகை தமிழை எழுதுவதற்கேற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அசோகன் கூட்டெழுத்துகளையும், அனுங் வாரம் என்றும் குறை மாத்திரை எழுத்துகளையும் பயன்படுத்தியிருக்க, தமிழ் கூட்டெழுத்தைப் பயன்படுத்தவில்லை. மெய்யைக் குறிக்க தமிழில் புள்ளி பயன்படுத்தப்பட்டதும் அதன் தனித்தன்மை.
தொல்தமிழ் காணப்படும் இடங்கள்
தமிழகத்தில் இயற்கையாக அமைந்த மலைக் குகைகளில் அமைந்த பாறைகளிலும், முகப்புகளிலும், சமண சமயத்தார் பயன்படுத்தும் கற்படுக்கைகளுக்கு அருகிலும் இவ்வகை எழுத்திலமைந்த கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. சங்க காலச் சேரர் பாண்டியர் வெளியிட்ட காசுகளிலும், தமிழக அகழாய்வுகளிலும், மேற்பரப்பு ஆய்வுகளிலும் கிடைத்த முழு / உடைந்த மட்பாண்டங்களிலும் இவ்வெழுத்துகள் இடம்பெறுகின்றன. இத்தகைய மண்பாண்டப் பொறிப்புகள், கடல்கடந்த நாடுகளிலும் கிடைத்திருப்பது தமிழரின் பரவலுக்குச் சிறந்த சான்றாகவும் உள்ளது. செங்கடற் பகுதியிலமைந்த எகிப்தியத் துறைமுகங்களான குவைசர் அல் காதிம், பெரணிகே ஆகியவற்றில் நடந்த அகழாய்வுகளிலும், தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள குவந்லுக் பத் என்ற இடத்தில் கிடைத்த பொன் உரைகல் ஒன்றின்மிதும் இவ்வெழுத்தில் அமைந்த தமிழ்ப் பெயர்ப் பொறிப்புகள் கிடைத்துள்ளன.
ஏறத்தாழ 800 ஆண்டுகால தொல்தமிழ் எழுத்து
இன்றைய சான்றுகளின் அடிப்படையில் கி..மு. 600 வாக்கிலேயே தொல் தமிழ் எழுத்துகள் தமிழகத்தில் வழக்கிற்கு வந்துவிட்டன என்று தெரிகிறது. இதன் அடுத்த கட்ட மாற்றம் கிபி. 3-4 ஆம் நூற்றாண்டுகளில் தான் நிகழ்ந்துள்ளது. இடைப்பட்ட ஏறத்தாழ 800 ஆண்டு காலத்தில் குறைந்த அளவு 500 ஆண்டுகளாவது இவ்வரி வடிவங்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அவற்றை மாற்றம் என்று கூறுவதைவிடச் செம்மைப்படுத்துதல் மற்றும் நிலைப்படுத்துதல் என்று கூறலாம். உள்வாங்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட காலத்தில் உயிருக்கும், மெய்க்கும், உயிர்மெய்க்கும் தனித்தனியான வரையறுக்கப்பட்ட வரிவடிவங்கள் நிலைபெறவில்லை. தமிழ்மொழிக்கு ஏற்ப வடிவமைக்கப் படும் போது முதல் அடிப்படை எழுத்து மெய்யைக் குறிக்கும்; உயிரைக் குறிக்காது; அடுத்த கட்டத்தில் அகரத்தைக் குறிக்கத் தலையில் ஒரு கோடிடப்பட்டது; அந்த வடிவமே ஆகாரத்தையும் குறித்தது பின்னர் ஆகாரத்தைக் குறிக்க (நெடில்)த் தலையில் இரண்டு கோடிடப்பட்டது. அப்போது அடிப்படை வடிவம் அகத்தை (குறில்) மட்டும் குறித்தது. இப்போது மெய்யைம், அகரத்தையும் (குறில்) வேறுபடுத்திக் காட்ட மெய்க்குப் புள்ளி இடப்பட்டது. இதுபோல 5 அடிப்படை உயிர்வரி வடிவங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் குறில், நெடிலை வேறுபடுத்திக்காட்ட புள்ளியும், சிறு கோடுகளும் இணைக்கப்பட்டன. ஐகார, ஔகாரங்கள் இரண்டு வரிவடிங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இத்தகைய வளர்ச்சிப் படிநிலைகளைத் தாண்டியே தொல்தமிழ் எழுத்து வடிவம் நிலைப்பட்டது. இத்தகைய படிநிலைகளைத் தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பகுதியிலமைந்த பௌத்தத் தலமான பட்டிபுரோலு ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளிலேயே காணமுடிகிறது. இந்த வளர் நிலைகளே – இதுபோன்ற எந்த மாற்றங்களையும் தன்னுள் கொண்டிராத அசோகன் பிராம்மிக்கு முன்னால் தொல்தமிழ் எழுத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாகிறது என்பது கூடுதல் செய்தி.