முகப்பு கல்வெட்டுகள் வட்டெழுத்து
பழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.
குறியீடு மற்றும் தமிழ்பிராமி எழுத்துகளைத் தொடர்ந்து வட்டெழுத்துக் கல்வெட்டுக்களை நாம் ஏறக்குறைய தமிழ்...
பழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.
குறியீடு மற்றும் தமிழ்பிராமி எழுத்துகளைத் தொடர்ந்து வட்டெழுத்துக் கல்வெட்டுக்களை நாம் ஏறக்குறைய தமிழ் நாடெங்கிலும் காண முடிகிறது. இந்த எழுத்து வட்ட வடிவில் தோன்றுவதால் இப்பெயர் பெற்றிருக்கிறது. பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் மையப்பகுதிகளிலும் வெளிப்புறம் பகுதிகளிலும் கிடைக்கின்ற வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தொண்டை மண்டத்தில் புறப்பகுகிளில் மட்டுமே கிடைக்கின்றன. சோழநாட்டில் முற்றிலும் பயன்படுத்தப் படவில்லை.
கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் மாற்றம் அடையத் தொடங்கியிருக்கும் வரிவடிவத்தைக் காணமுடிகிறது. அந்த வடிவம் வட்ட வடிவில் உருவம் எடுத்துள்ளது. பூலாங்குறிச்சி, அறச்சலூர், இந்தளூர், அரசலாபுரம், அம்மன் கோயில் பட்டி, பெருமுகை போன்ற இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுக்களைப் பார்த்தால் தமிழ் – பிராமி எழுத்துக்களில் மாற்றம் அடைந்திருப்பதுத் தெரியும். இதுதான் மாற்றம் ஏற்பட்ட முதல் கால கட்டமாகும். இந்த காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி விட்டது. தொடர்ந்து மக்களின் கல்விப்பயிற்சிக்கும் எழுத்துப் பயிற்சிக்கும் ஏற்ப எழுதும் பழக்கத்தின் மிகுதி ஏற்படுகின்றபோது எழுத்துக்களில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. எழுதுபொருள் ஓலைச் சுவடிகளாக இருந்தபடியால் அதன் தன்மைக் கேற்ப கீறல்களால் ஓலைகள் ஒடிந்து விடாமலிக்க சிறிது வளைத்து எழுத முற்பட்டதன் காரணமாக எழுத்துக்கள் வட்ட வடிவம் எடுத்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் பரவலாக சமணத் தலங்களிலும் சிவ விஷ்ணு கோயில்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இந்த எழுத்தைப் பார்த்த அறிஞர்களுக்கு மேற்கூறிய பூலாங்குறிச்சி, அறச்சலூர் முதலிய ஊர்களில் கல்வெட்டுக்களைக் கண்டு படிக்கும் வரை குழப்பம் நிலவியது.
ஹரபிரசாத் சாஸ்திரி அவர்கள் கரோஷ்டி எழுத்திலிருநது தோன்றியது என்றார். கர்னல் அவர்கள் பொனீஷியன் வரிவடிவத்திலிருந்து வந்தது என்றார். பியூலர் அவர்கள் தமிழ் – பிராமியின் வேறுபட்ட வடிவம் என்றார். மேலும் இவ்வெழுத்தானது மராட்டியரின் மோடி என்ற எழுத்தைப் போன்று வணிகர்கள் மட்டும் பயன்படுத்தும் எழுத்தாக இருந்திருக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களைக் கூறினர். தமிழ் – பிராமி எழுத்திலிருந்தே வட்டெழுத்துத் தோன்றியது என்பதை முதன் முதலில் கூறியவர் டி. ஏ. கோபிநாதராவ் அவர்களே.. மேற்கூறிய பூலாங்குறிச்சி, அரச்சலூர் கல்வெட்டுகளும் மேலும் குறிப்பிட்ட இடங்களிலும் கல்வெட்டுகள் கிடைத்த பின்னரே தமிழ் பிராமி எழுத்திலிருந்து தான் வட்டெழுத்துத் தோன்றியது என்ற முடிவுக்குத் தீர்மானமாக வர முடிந்தது.
பின்னர் முழுவதும் வட்டெழுத்தாக மாறிய எழுத்தமைதியுடன் கூடிய இருளப்பட்டி நடுகல், செஞ்சிக்கருகில் திருநாதர்க்குன்று சமணக் கல்வெட்டு ஆகியவைக் குறிப்பிடத்தக்கன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் அதாவது திருநாதர்க் குன்றுக் கல்வெட்டில் தான் தமிழின் உயிர் எழுத்துக்களுள் ஒன்றாகும் ‘ஐ’ என்ற எழுத்து வடிவம் கிடைத்தது.
இவ்வாறாக, பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் மட்டுமின்றி தொண்டை மண்டலத்தின் புறப்பகுதிகளாகிய செங்கம், தர்மபுரி, வட, தென் ஆர்க்காடு மாவட்டங்களிலும் ஏராளமான நடுகள் கல்வெட்டுக்கள் வட்டெழுத்தில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் கங்கர், நொளம்பர், பாணர், பல்லவர் போன்றே ஆட்சியாளர்கள் காலக் கல்வெட்டுக்கள் வட்டெழுத்துக்களில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முந்தைய கால கட்ட வளர்ச்சியினைச் சேர்ந்த எழுத்தாகும்.
பல்லவர் காலத்தில் அவர்களது மையப் பகுதியாகிய காஞ்சிபுரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கவில்லை. ஆனால் பல்லவர்களின் புறப்பகுதிகளில் வட்டெழுத்துக்களிலேயே நடுகல் கல்வெட்டுகள் காணப்படுவதால் அப்பகுதிகளில் மக்கள் பயன்படுத்திய எழுத்தாக வட்டெழுத்தே இருந்திருக்கிறது. மலையடிவாரப் பகுதிகளில் ஆநிரைகளையே செல்வங்களாகக் கொண்டு வாழ்ந்த நாட்டுப்புற மக்களிடையே அடிக்கடி காணப்படும் ஆநிரைக் கவர்தல், ஆநிரை மீட்டல் போன்ற சண்டைகளிலும், மன்னர்களின் படையெழுப்பில் கலந்து கொண்ட சிறுசிறு ஊர்த்தலைவர்களும் சிற்றரசர்களும் போரில் கலந்து கொண்டு உயிர் துறக்க நேரிடும் போது அவர்களின் வீரத்தைப் பாராட்டி எடுக்கப்படுவதே நடுகல் ஆகும். இக்கல்வெட்டுகளில் எல்லாம் வட்டெழுத்தே பயின்றிருக்கிறது. ஆகையால் சாதாரண மக்களிடையே வட்டெழுத்தே வழக்கத்திலிருந்தது என்பதை அறிய முடிகிறது.
ஆனால் பல்லவர் அரச ஆவணங்களில் வட்டெழுத்து பயிலப்படவில்லை. தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லவர் காலத்தில் சமஸ்கிருத மொழியை எழுதுவதற்கு கிரந்த எழுத்து முறை உருவாக்கப்பட்டது. அதன் தாக்கத்தினால் வட்டெழுத்தையும் சிறிது மாற்றியமைத்து தமிழ் எழுத்தையும் சிறிது மாற்றியமைத்திருக்க வேண்டும் . பல்லவர் செப்பேடுகளில்தான் தமிழ் எழுத்துக்களின் பழைய வடிவத்தைக் காண முடிகிறது. பல்லவர்கள் வெளியிட்டுள்ள செப்பேடுகளில் எல்லாம் முதல்பகுதியாகிய சமஸ்கிருதப் பகுதியில் கிரந்த எழுத்தையும் இரண்டாம் பகுதியாகிய தமிழ்ப் பகுதியில் தமிழ் எழுத்தையுமே பயன்படுத்தினர். ஆனால் இதே காலகட்டத்தில் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் முதல் பகுதியில் கிரந்த எழுத்தையும் இரண்டாம் பகுதியில் செப்பேடுகளில் தமிழ்மொழியை எழுத வட்டெழுத்தையே பயன்படுத்தினர். இயல்பாக வளர்ந்த எழுத்து வட்டெழுத்து தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கி.பி. 7 – 8 ம் நூற்றாண்டுகளில் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் வட்டெழுத்துக்களில் ஏராளமான கல்வெட்டுக்களும் சில செப்பேடுகளும் கிடைத்துள்ளன. மதுரையைச் சுற்றிலுமுள்ள எண்பெருங்குன்றங்களிலும், கழுகு மலையிலும், திருக்காட்டாம் பள்ளியிலும் கிடைத்துள்ளன.
கி.பி. 10 ம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ ஆட்சி காலத்தில் பாண்டிநாடு முதலாம் வசமான போது சோழர் கட்டிய சேரன் மகாதேவி அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள திருவாலீஸ்வரம், ஆத்தூர் ஆகிய கோயில்களுக்கு சோழன் ஏராளமான கொடை பணித்திருக்கிறான். சோழன் பொறித்த கல்வெட்டுகள் எல்லாம் பாண்டி நாட்டில் வட்டெழுத்துக் கல்வெட்டுகளே ஆகும்.
பாண்டியன் இரண்டாம் வரகுண பாண்டியன் இராஜராஜ சோழனுக்கு முன்பாகவே சோழ நாட்டின் பல பகுதிகளை தன் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்திருந்தான். அப்போது சோழ நாட்டுக் கோயில்களுக்குக் கொடையளித்த செய்தியைக் கூறும் கல்வெட்டுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. பாண்டியன் சோழ நாட்டில் தமிழ் எழுத்தையும், சோழன் பாண்டி நாட்டில் வட்டெழுத்தையும் பயன்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்கதே. அப்பகுதியில் வழங்கும் எழுத்தையே பயன்படுத்த வேண்டும் என்ற பரந்த எண்ணம் மன்னர்களுக்கு இருந்தது தெரிய வருகிறது.
களப்பிரர் ஆட்சியை அகற்றிவிட்டு அமைந்த பல்லவர் ஆட்சியும் பாண்டியர் ஆட்சியும் சமஸ்கிருதம் தமிழ் என்ற இரு மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது. செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் இரு மொழிகளையும் அதாவது ஒரு கல்வெட்டில் உள்ள செய்தியை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் (Bilingual) பொறித்தனர். குறிப்பாகப் பாண்டியர் கல்வெட்டுகள் இருமொழியிலும் அமைந்திருப்பதைக் காணலாம். களப்பிரருக்குப் பின் ஆட்சி புரிந்த பாண்டியர்கள் முற்காலப் பாண்டியர் என வரலாற்றறிஞர்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் காலக் கல்வெட்டுகள் பெரும்பகுதி இருமொழிகளில் அமைந்திருக்கின்றன. இவற்றில் காலத்தில் முந்தைய பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்தைச் சேர்ந்த வைகைக் கரைக் கல்வெட்டு, ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையனின் ஆனை மலைக் கல்வெட்டு, திருப்பரங்குன்றம் கல்வெட்டு, திருப்பத்தூர்க் கல்வெட்டு திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு போன்றவற்றைக் கூறலாம். இக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிப்பகுதி வட்டெழுத்திலேயே அமைந்திருக்கின்றன. பாண்டியர் செப்பேடுகளிலுள்ள இரண்டாம் பகுதியாகிய தமிழ் மொழிப் பகுதி வட்டெழுத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த பகுதி பல்லவர் சோழர் செப்பேடுகளில் தமிழ் எழுத்துக்களில் அமைந்திருக்கும் என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.
தொடர்ந்து முற்கால பாண்டியர்களின் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் வட்டெழுத்திலேயே காணப்படுகின்றன. வீரபாண்டியனை வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்றி சோழர் ஆட்சியை முதலாம் இராஜராஜ சோழன் நிறுவிய போதும் அவன் கல்வெட்டுகளை வட்டெழுத்திலேயே பொறித்தான் என்பதை முன்னரே கூறினோம். அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் ராஜேந்திரன் காலத்தில் பாண்டி நாட்டு பொறுப்பாளனாக அவன் மூத்த மகன் சுந்தரசோழன் என்பவன் சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரில் பாண்டி நாட்டை ஆட்சி செய்யும் போது அவன் கல்வெட்டுகள் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டன. அது முதல் வட்டெழுத்து வழக்கத்திலிருந்து சோழர்களால் நீக்கப்பட்டு தமிழ் எழுத்தை வழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டனர் என்று கூறலாம்.
சேரநாட்டில் வட்டெழுத்து கி.பி. 14 ஆம் நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்தது. பின்னர் வட்டார மொழியாக மலையாளம் உருவான போது அதை எழுதுவதற்கு வட்டெழுத்தையும் கிரந்த எழுத்தையும் இணைத்து மலையாள எழுத்தை உருவாக்கினர். அத்துடன் சேர நாட்டிலும் வட்டெழுத்து வழக்கொழிந்தது.
இவ்வாறாக தமிழ் நாட்டில் தமிழ் பிராமியிலிருந்து வளர்ச்சியடைந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகளை கால வரிசையாகப் பிரிக்கலாம். மூன்று கட்டமாகப் பிரித்துப் பார்த்தால் புரிந்து கொள்வது எளிதாக அமையும்.
1. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 ம் நூற்றாண்டு வரையுள்ள காலம்
2. கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ம் நூற்றாண்டு வரையுள்ள காலம்.
3. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் 10 ம் நூற்றாண்டு வரையுள்ள காலம்.
முதல் கட்டத்தில் பூலாங்குறிச்சி, அறச்சாலையூர், அரசலாபுரம், அம்மன் கோயில்பட்டி, இந்தளூர் ஆகிய கல்வெட்டுக்களைச் சேர்க்கலாம்.
இரண்டாம் கட்டத்தில் திருநாதர்குன்று, பறையன் பட்டு, இருளப்பட்டி போன்ற கல்வெட்டுகளைக் கூறலாம்.
மூன்றாம் காலகட்டத்தில் அரிகேசரி மாறவர்மன் கல்வெட்டு ஆனைமலைக் கல்வெட்டு, திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு திருப்பரங்குன்றம், திருப்பத்தூர்க் கல்வெட்டுகள், பாண்டியர் செப்பேடுகள் போன்றவையாகும்.