தமிழக சுவரோவியங்கள் ஓர் அறிமுகம்
தமிழகத்தில் ஓவியக்கலை சங்க காலத்திலேயே முழு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்துள்ளது என்பதற்கு பல சமகால இலக்கியங்கள் சாட்சியாக உள்ளன. சித்திர மண்டபங்களும், சித்திர மாடங்களும், சித்திரச் சாலைகளும், எழுத்து மண்டபங்களும் பரவலாக இருந்துள்ளன. கலையில் ஆர்வமிக்கவர்கள் அக்கூடங்களுக்குச் சென்று அந்த ஓவியங்களைக் கண்டு ரசித்தும் அது குறித்து கலந்துரையாடியும் இருந்தனர் என்பதுக்கு பரிபாடல், புறநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களே சாட்சியாக இருந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இப்பொழுது காணப...
தமிழக சுவரோவியங்கள் ஓர் அறிமுகம்
தமிழகத்தில் ஓவியக்கலை சங்க காலத்திலேயே முழு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்துள்ளது என்பதற்கு பல சமகால இலக்கியங்கள் சாட்சியாக உள்ளன. சித்திர மண்டபங்களும், சித்திர மாடங்களும், சித்திரச் சாலைகளும், எழுத்து மண்டபங்களும் பரவலாக இருந்துள்ளன. கலையில் ஆர்வமிக்கவர்கள் அக்கூடங்களுக்குச் சென்று அந்த ஓவியங்களைக் கண்டு ரசித்தும் அது குறித்து கலந்துரையாடியும் இருந்தனர் என்பதுக்கு பரிபாடல், புறநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களே சாட்சியாக இருந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இப்பொழுது காணப்படும் சுவரோவியங்களில் மிகவும் தொன்மையானவை பல்லவர் காலத்தவையே ஆகும். அதாவது ஏறக்குறைய கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலிருந்து தான் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இதற்கு முன்னர் வரையப்பட்ட ஓவியங்கள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன. பல்லவ மன்னர்களில் கலை, இலக்கியம், இசை ஆகியவற்றில் அறிவாற்றல் மற்றும் தேர்ச்சி உடையவராக இருந்தவர்கள் முதலாம் மகேந்திரவர்மனும், இராஜசிம்ம பல்லவனும் ஆவர். மாமல்லபுரம் கோயில்கள், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் மற்றும் பனமலை தாளகிரீஸ்வரர் கோயில் ஓவியங்கள் இவர்களது படைப்புகளுக்குச் சாட்சியாக உள்ளன. வட ஆற்காடு மாவட்டத்தில் ஆம்பூருக்கு அருகே உள்ள ஆர்மாமலை எனும் ஊரில் உள்ள மலைக் குகை ஒன்றில் சுமார் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சமணத்துறவிகள் வாழ்ந்து வந்துள்ளனர். இக்குகையின் கூரைப்பகுதிகளில் தாமரைத்தடாகம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
பாண்டியர் கைவண்ணத்தில் சுமார் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் உருவான ஓவியங்கள் புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலில் உள்ள சமணக் குடைவரைக் கோயிலின் கருவறை மற்றும் அர்த்த மண்டப கூரைகள், தூண்கள் மற்றும் போதிகைகளில் காணப்படுகின்றது. இங்கு தாமரைத்தடாகம், அரச குடும்பத்து மனிதர்கள், ஆடல் மகளிர் மற்றும் அலங்கார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பிற ஒவியங்கள் இருந்ததற்கான எச்சங்கள் மதுரைக்கருகில் ஆனைமலை, கீழவளவு, கீழக்குயில்குடி ஆகிய சமணத் தலங்களில் காணப்படுகின்றது.
சோழர் கால ஓவியங்களில் தொன்மையாக கருதப்படுவது விஜயாலய சோழீஸ்வரத்தில் உள்ள கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஓவியங்களேயாகும். அதற்கு அடுத்தப்படியாக எஞ்சி உள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். இங்கு சிவபெருமானின் தடுத்தாட்கொண்ட புராணமும், பிற புராணங்களும் ஓவியங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இடைப்பட்ட காலங்களில் எழுப்பப்பட்ட காலத்து கோயில்களில் ஓவியங்கள் காணப்படவில்லை ஒரு வேளை அழிந்து போயிருக்கலாம்.
சோழர்களைத் தொடர்ந்து போசளர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள், திருவரங்கத்தில் உள்ள குழலூதும் பிள்ளை கோயில் முன் மண்டப விதானத்தில் சில ஓவியங்கள் எஞ்சியுள்ளன. இங்கு கண்ணன் கோபியருடன் இருக்கும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
சோழர் மற்றும் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் மீண்டும் மரபுக் கலைகள் விஜயநகர நாயக்க மன்னர்களால் கி.பி.14-ஆம், நூற்றாண்டுக்குப் பின் புத்தாக்கம் பெற்று வளர துவங்கிற்று. காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பருத்திக்குன்றம் சமணர் கோயிலில் விஜயநகர மன்னன் புக்கனின் அமைச்சராக இருந்த இருகப்பா என்பவர் முயற்சியில் சங்கீத மண்டபம் எழுப்பி அதன் கூரையில் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜயநகர – நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட பல கோயில்களில் புதிய மண்டபங்கள் எழுப்பப்பட்டு அதில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்திருப்பினும் திருவண்ணாமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், திருவெள்ளறை, திருவரங்கம், அழகர்கோயில், திருப்புடைமருதூர், செங்கம், அதியமான்கோட்டை போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் இவர்களது ஓவியங்கள் இன்றளவுக்கும் காணக்கிடைக்கின்றன.
நாயக்கர்கள் ஆட்சி புரிந்த காலக்கட்டங்களில், தென் தமிழகத்தில் இராமநாதபுரத்தை மையமாக கொண்டு ஆண்டு வந்த சேதுபதி மன்னர்களாலும் ஓவியக்கலை பெரிதும் வளர்க்கப்பட்டது. இவர்களது ஓவியங்கள் இராமநாதபுரத்தில் உள்ள இராமலிங்க விலாசம் எனும் அவர்களது அரண்மனையில் காணப்படுகின்றது. இங்கு கி.பி.18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராமாயணக்காட்சிகள் தொடர் ஓவியங்களாக உள்ளன. மேலும் அரண்மனை அந்தப்புர வாழ்வியல் காட்சிகள் விளக்கமாக வரையப்பட்டுள்ளன.
தஞ்சாவூரை மையமாக கொண்டு கி.பி.18-ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மராத்திய மன்னர்களும் ஓவியக் கலையை பெரிதும் ஆதரித்தனர். இவர்களது ஓவியங்கள், தஞ்சாவூர், வெண்ணாற்றங்கரை, திருவலஞ்சுழி, ஆவுடையார்கோயில் போன்ற கோயில்களிலும் அரண்மனைகளிலும் காணக்கிடைக்கின்றன. இவர்களது காலத்தில் வட இந்திய மற்றும் மேற்கத்தியப் பாணியுடன் உள்ளூர் மரபும் சேர்ந்து புதிய பாணிகளில் ஓவியங்கள் வளர்ந்தன. புராணக்கதைகளை நீண்ட தொடர் ஓவியமாக வரையும் மரபு குறைந்து கடவுள் மற்றும் அரசர்களின் உருவப்படங்கள் பெரிய அளவில் வரையப்பட்டன. ஐரோப்பியர் வருகைக்குப் பின் மரபு கலைகள் வீழ்ச்சியுற்று மேற்கத்திய பாணி ஓவியங்கள் வளர தொடங்கிற்று.