தமிழகம் ஒரு நீண்ட ஓவிய மரபைக் கொண்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் அடர்ந்த வனத்துக்குள் இருந்த குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் வரையத் துவங்கிய ஓவிய மரபு தொடர்ந்து பாண்டியர், பல்லவர், சோழர், விஜயநகர – நாயக்கர் , மராத்தியர், சேதுபதிகள், தொண்டைமான்கள் போன்ற மன்னர்களாலும் ஆதரவளிக்கப்பட்டு வந்தது. இதற்குச் சாட்சியாக அவர்கள் காலத்தில் கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் எஞ்சியிருக்கும் ஓவியங்கள் இன்றளவும் காணக்கிடைக்கின்றது. பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து அரசியல் குழப்பம் மற்றும் மாற்றத்தினால் பாரம்பரிய கலை மரபுகள் ஆதரவின்றி நலிந்தன. அதே சமயம் மேற்கத்திய கலை மரபு நமது ஓவியர்களால் ஈர்க்கப்பட்டுப் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன...
தமிழகம் ஒரு நீண்ட ஓவிய மரபைக் கொண்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் அடர்ந்த வனத்துக்குள் இருந்த குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் வரையத் துவங்கிய ஓவிய மரபு தொடர்ந்து பாண்டியர், பல்லவர், சோழர், விஜயநகர – நாயக்கர் , மராத்தியர், சேதுபதிகள், தொண்டைமான்கள் போன்ற மன்னர்களாலும் ஆதரவளிக்கப்பட்டு வந்தது. இதற்குச் சாட்சியாக அவர்கள் காலத்தில் கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் எஞ்சியிருக்கும் ஓவியங்கள் இன்றளவும் காணக்கிடைக்கின்றது. பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து அரசியல் குழப்பம் மற்றும் மாற்றத்தினால் பாரம்பரிய கலை மரபுகள் ஆதரவின்றி நலிந்தன. அதே சமயம் மேற்கத்திய கலை மரபு நமது ஓவியர்களால் ஈர்க்கப்பட்டுப் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
தமிழகத்தில் கிழக்கிந்திய கம்பெனி 1600 – 1800 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏராளமான இந்திய ஓவியர்களையும், நெசவாளர்களையும் வைத்துத் துணிகளில் ஓவியங்கள் வரையப்பட்டு இந்தோனேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். இச்சூழலில் பாரம்பரிய கலை மரபுகள் போதிய அங்கீகாரமும் வருமானமும் இல்லாததால் மறையத் தொடங்கின. ஆரம்பக் காலகட்டங்களில் எளிமையான படுக்கை விரிப்பாகவும், திரைச்சீலையாகவும் ஏற்றுமதி செய்யப்பட்ட துணி வகைகள் பின்னர் பிற பயன்பாட்டுக்காக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஓவியங்களுடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. ஆங்கிலேயர்களிடமும், டச்சுக்கார்ர்களிடமும் எண்ணற்ற பாரம்பரிய இந்திய ஓவியர்கள் பணிபுரிந்தனர். இப்பணியில் “வர்ணம் தீட்டுவோர் சாதி” எனும் இனக்குழுவின் பங்கு அதிகம். கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் ஓவியர்களுக்குமிடையே பணி ஊதியம், மற்றும் வேலை நேரம் போன்ற பிரச்சனைகளால் விரிசல் ஏற்பட்டது. 1680 ஆம் ஆண்டு ஸ்டேரயன்ஷாம் ( Streyensham ) எனும் ஆங்கிலேய அதிகாரி போராடிய ஓவியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால் இங்கிலாந்தில் புதிய நூற்பாலைகள் உருவாகின. அதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் குறைந்து பின்னர் முழுமையாக நிறுத்தப்பட்டது. ஐரோப்பியர்கள் வரும் வரை கோயில்கள், அரண்மனைகள், பெரிய வீடுகளில் ஓவியங்கள் வரைந்த கலைஞர்கள் அதை விட்டு விட்டு ஐரோப்பியர்களிடம் பணிபுரிய ஆரம்பித்னர். தொழில் மற்றும் பொருளாதார மாற்றத்தினால் புதிய தொழிலையும் இழந்தனர் அதே சமயம் காலம் காலமாய் செய்து வந்த மரபு சார் ஓவியங்கள் வரையும் முறையினையும் மறந்து விட்டனர்.
ஆங்கிலேய ஓவியங்கள் ( 1750 -1950)
வணிக நோக்கத்தோடு வந்த கிழக்கிந்திய நிறுவனத்தில் 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களுடைய தாக்கம் கல்வி, கலை போன்ற துறைகளில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இந்திய பாரம்பரியக் கல்வி மற்றும் கலை மரபுகளின் முக்கியத்துவத்தைச் சிதைத்து ஆங்கிலேயர்களுக்கான கல்வி முறையும் கலைப் பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டன. சிற்றரசுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு ஆங்கிலேயே அரசு குடைக்குள் கொண்டு வரப்பட்டன. இங்கிலாந்தில் இருந்து மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ( 1760 – 1811) தனது உருவத்தையும் தன் மனைவி சார்லெட் சோப்பியா உருவத்தையும் ஓவியமாக வரைந்து இந்திய மன்னர்களுக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்ட இந்திய மன்னர்களும் தங்களுடைய உருவத்தை ஓவியமாகப் பார்க்க விரும்பினர். அதற்கு நல்ல வெகுமதி வழங்கவும் தயாராக இருந்தனர். இதனை அறிந்து ஐரோப்பிய ஓவியர்கள் இந்திய மண்ணுக்குப் படை எடுத்தனர். அவர்களில் யான் ஸ்மார்ட்( John Smart), தாமஸ் ஹுக்கு (Thomas Hicky), ஜார்ஜ் சின்னெரி ( George Chinnery) , காரியர்டியா ( Carriar Deah) போன்ற ஓவியர்கள் சென்னைக்கு வந்தனர். இங்கிலாந்திலிருந்து சுமார் 60 ஓவியர்கள் 1769 – 1820 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கு வந்தனர்.
சென்னை கலை இயக்கம்
இந்தியாவில் முதன் முறையாக 1850 ஆம் ஆண்டு ஆங்கிலேய மருத்துவர் டாக்டர் அலெக்ஸாண்டர் ஹண்டர் (Dr. Alexander Hunter ) என்பவரால் சென்னையில் மெட்ராஸ் பள்ளி ஆப் ஆர்ட்ஸ் என்ற பெயரில் கவின் கலைக் கல்லூரி உருவாக்கப்பட்டது. பின்னர் 1852 ஆம் ஆண்டு அரசு தொழில் கல்வி கூடமாக மாற்றப்பட்டு தற்போது அரசு நுண்கலைக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரி ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயருக்களுக்குத் தேவையான கைவினை பொருட்களைத் தயார் செய்து கொடுத்தும் பின்னர் ஓவிய ஆசிரியர்களையும் உருவாக்கியும் வந்தது. இக்கல்லூரிக்கான கலைப் பாடத் திட்டத்தினை வில்லியம் டைய்ஸ் (William Dyce) என்பவர் ஆங்கிலேய கலைக் கல்விப் பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார். இக்கல்வி மூலம் இந்திய ஓவியர்கள் ஆங்கிலேயேர்களின் இரசனைக்கேற்ற தொழில் நுட்பம், சிந்தனையுடன் பயிற்சி பெற்றனர். அதே சமயம், இக்கல்வி முறையால் பாரம்பரிய கலை மரபு போதிய நிதி உதவி மற்றும் ஆதரவு இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விட்டது. மெட்ராஸில் கலைப் பள்ளி தொடங்கியபின் அதன் தொடர்ச்சியாக இந்தியாவெங்கும் பல இடங்களில் கலைக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. இக்கல்லூரிகளில் பெரும்பாலும் சென்னை கலைக் கல்லூரியில் படித்த மாணவர்களே ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.
மதராஸ் கலைக் கல்லூரியின் வளர்ச்சியில் ஆளுநர் நேப்பியார் பிரபு (1871) அதிகம் கவனம் எடுத்துக் கொண்டு பல உதவிகள் செய்து கல்லூரி முன்னேற்றம் அடைய வழி வகுத்தார். அவரைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள தெற்கு கென்சிங்டன் கலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்த இ.பி. ஆவல் (Ernest Binfield Havell) 16 September 1861 – 31 December 1934) என்பவர் 1884 ஆம் ஆண்டுச் சென்னை வந்து மதராஸ் கலைக் கல்லூரியில் மேற்பார்வையாளராகப் பணியேற்றார். மேலும், இந்திய கலைஞர்கள், கிரேக்க, ரோமானிய கலைப் படைப்புகளைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு தங்களது தொன்மையான கலை வடிவங்களில் இருக்கும் தத்துவத்தையும், வடிவமைப்பையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையே, சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு உருவான பிரம்மஞானச் சபையினர் 1936 ஆம் ஆண்டுக் கலாஷேத்ரா எனும் கலைப் பள்ளியை உருவாக்கினர். அதில் இந்திய மரபு நடனம், சிற்பம், ஓவியம் போன்ற கலை வடிவங்களைப் பயிற்றுவித்தனர்.
சென்னை கவின் கலைக் கல்லூரிக்கு 1929 ஆம் ஆண்டு டி.பி. ராய்சொளத்ரி முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது, கைவினைப் பயிற்சியைத் தவிர்த்து மாணவர்கள் இயற்கையிலிருந்து இயல்பான ஓவியம் மற்றும் சிற்பங்களை உருவாக்கப் பாடத்திட்டம் உருவாக்கினார். இவருக்குப் பின் கே.சி.எஸ். பணிக்கர் 1957 ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பணிக்கரின் மேலை நாட்டுப் பயணத்தின் போது இம்ப்ரஸ்னிசம், பதவி இம்ப்ரஸ்னிசம் போன்ற கலையியல் கோட்பாடுகளை அறிந்து செயல்படத் துவங்கினார். அவரது தாக்கம் சகஆசிரியர்களான மற்றும் மாணவர்களான எஸ். தன்பால், பி.வி. ஜானகிராம், வித்யாசங்கர் ஸ்தபதி, ஏ.பி. சந்தானராஜ், முனுசாமி போன்றோர்களிடத்தில் இருந்தது. இவர்களே பின்னாளில் மெட்ராஸ் ஆர்ட் மூவ்மென்ட்
(சென்னை கலை இயக்கம்) என்ற கலை அமைப்பை உருவாக்கினர்.
இவ்வமைப்பின் நோக்கம் ஒவ்வொருவரும் தமக்கான பண்பாட்டு வேர்களினூடேயிருந்து கலைப் படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதாகும். இவ்வமைப்பைச் சார்ந்த கலைஞர்கள் வட்டார மரபுக் கலை வடிவங்கள், கோலம், யந்திர உருவங்கள், தொன்மையான எழுத்துக்கள், பழங்குடி கலை வடிவங்கள், கோயில் சிற்பங்கள் போன்றவற்றில் இருந்து தங்கள் கலைப்படைப்பிற்கான ஆதாரங்களைத் தேடினர். இவ்வோவியர்களில் பெரும்பாலானோர் பல்வேறு கிராம பின்புலத்தில் இருந்து வந்தமையால் இவர்களுடைய கலைப் படைப்புக்கள் இந்தியக் கலை மற்றும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்தது.
இக்கல்லூரியில் மரபு உலோக வடிப்பு கலை மற்றும் மரச்சிற்பங்கள் பயிற்சி இருந்ததனால் மாணவர்களுக்கும் மரபு சார் கலை வடிவங்களை உருவாக்கும் முறையினையும் அறிந்து கொள்ள வாய்ப்பாய் இருந்தது.
இந்த ஓவியர்கள் தமது மரபு சார் அறிவிலிருந்து மேற்கத்திய ஓவியப்பாணிகளின் யுத்திகளோடு புதுமையான கலை மரபினை உருவாக்கினர். இந்திய மரபு ஓவியங்களில் கோடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவ்வோவியர்கள் புதிய காட்சி மொழியில் கிராமப் பின்புலங்கள், பெண்கள் எனப் பல்வேறு காட்சிகளை இப்புதிய முறையில் அணுகினர்.
இவ்வமைப்பின் முன்னோடிகளாக கே.சி.எஸ்.பணீக்கர், அல்போன்சோ தாஸ், கே.ராமானுசம், அந்தோனிதாஸ், ஏ.பி. சந்தானராஜ், பி.பெருமாள், எஸ். சூரியமூர்த்தி, எல். முனுசாமி, ஜெ. சுல்தான் அலி, ரெட்டப்பநாயுடு, பி.வி. ஜானகிராம் மற்றும் எஸ். நந்தகோபால் போன்றோர் இருந்துள்ளனர்.
இவ்வமைப்பைச் சேர்ந்த ஓவியர்கள் தாங்கள் உருவாக்கிய கலைப் படைப்புக்களை உரிய விலைக்கு விற்க இயலவில்லை. அதே நேரம், கை வினை கலைஞர்கள் தமக்கென்று சங்கத்தை உருவாக்கி தங்கள் கைவினைப் பொருட்களை விற்று வந்தனர். ஓவியர்களும், சிற்பிகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் தங்கி கலைப்படைப்புக்களை உருவாக்கத் திட்டமிட்டனர். அதன் விளைவாக, 1966 ல் சோழ மண்டல கலைஞர்கள் கிராமம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கம் அருகே உருவாக்கப்பட்டது. சென்னை நகரிலிருந்து கே.சி.எஸ்.பணிக்கர், கே. ஜெயபால பணிக்கர், கே.எம்.ஆதிமூலம், சி. தக்சிணாமூர்த்தி, கே.ஆர். ஹரி, எஸ்.ஜி. வாசுதேவ், கே. ராமானுஜம், ஜெ. சுல்தான் அலி, பி.கோபிநாத் போன்றோர் இந்தக் கலை கிராமத்தில் குடியேறினர். இங்குள்ள கலைஞர்கள், தினமும் சில மணி நேரம் கைவினைப் பொருட்களை உருவாக்கப் பயிற்சி பெற்றனர், பின்னர் வழக்கமாக உருவாக்கும் கலைப்படைப்பினை செய்து வந்தனர்.