கோயிலின் பெயர் - அருள்மிகு வடபத்ரசாயி ஆண்டாள் கோயில்
வேறு பெயர்கள் - ஸ்ரீவில்லிபுத்தூர், வராகசேத்திரம்
அமைவிடம் - அருள்மிகு வடபத்ரசாயி ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125. விருதுநகர் மாவட்டம்.
ஊர் - ஸ்ரீவில்லிபுத்தூர்
வட்டம் - இராஜபாளையம்
மாவட்டம் - விருதுநகர்
தொலைபேசி - 04563 - 260254
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை) - வைணவம்
மூலவர் பெயர் - வடபத்ரசாயி, ரங்கமன்னார்
உலாப் படிமம் பெயர் - வடபத்ரசாயி
தாயார் / அம்மன் பெயர் - ஆண்டாள் (கோதை நாச்சியார்)
தலமரம் - துளசி
திருக்குளம் / ஆறு - திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம்
பூசைக்காலம் - விஸ்வரூப தரிசனம், கால சாந்தி பூஜை, உச்சிகால பூஜை, நடை திருக்காப்பிடுதல், நடை திறப்பு, சாயரக்ஷை, அத்தாளம், அரவணை
திருவிழாக்கள் - ஆடிப்பூரத் திருவிழா 10 நாட்கள், புரட்டாசி பெரிய பெருமாள் உற்சவம், பங்குனி திருக்கல்யாணம், மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
காலம் / ஆட்சியாளர் - கி.பி.8-15-ஆம் நூற்றாண்டு / பாண்டியர் விஜயநகர, நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு - ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில், இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்' என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -1120 ) ஆட்சியில் இந்த ஊர், 'விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின்,கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. திருமலைநாயக்கர் (1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (1689-1706) ஆட்சி காலத்தில், இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு - 1200 ஆண்டுகள் பழமையானது. ஆண்டாள் அவதரித்த திருத்தலம். திருப்பாவை இத்தலத்தில் தான் பாடப்பெற்றது. பெரியாழ்வார் பிறந்த ஊர். 108- வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் 90-வது திருத்தலமாகும்.
சுருக்கம் - ஸ்ரீ வில்லிபுத்தூர் என்ற நகர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. மதுரையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது. வரலாறு, சமயம், சமுதாயம், பண்பாடு ஆகிய எல்லாவற்றிலும் செழிப்புற்றுக் காலங்காலமாக வளர்ந்துவரும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என அழைக்கப்படும் திருவில்லிபுத்தூர் ஆகும். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாறித் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் பெரியாழ்வார் வாழ்ந்த ஊர். கோதை பிறந்த ஊர். சங்க காலத்தில் மல்லி நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இவ்வூர், புதியதாகக் குடியிருப்புகள் எழுந்தவுடன், புத்தூர் எனப் பெயர் பெற்று வளர்ந்து உள்ள ஊர். அருள்மிகு வடபத்ர சயனர் திருக்கோயிலின் இராஜகோபுரமே தமிழ்நாடு அரசின் அரசுஇலச்சினையில் பதிக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள புகழ்மிக்க கோவிலாகும். ஆண்டாள் கோவிலுக்கு அருகில் வடபத்ரசாயி கோவில் உள்ளது. ஆண்டாள் கோவிலின் தோற்றத்திற்கு முன்பே இக்கோவில் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இக்கோவிலின் சில பகுதிகள் பெரியாழ்வாரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. (பெரியாழ்வார் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்). இக்கோவிலின் கோபுரம் 60 மீட்டர் உயரமுடையது. இது விஜயநகர் காலப் பணியாகும். வடபத்ரசாயி கோவிலின் கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் சயனநிலையில் காட்சி தருகிறார். பெருமாளின் சந்நிதிக்கு அருகில் பெரியாழ்வார் சந்நிதியும், ஸ்ரீஆண்டாள் பிறந்த இடத்தைக் குறிக்கும் சந்நிதியும் உள்ளன. வடபத்ரசாயி கோயிலிலுள்ள கருடாழ்வார் மண்டப மரச்சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை. வடபத்ரசாயி கோவிலுக்குச் சிறிது வடக்கில் ஆண்டாள் கோவில் உள்ளது. நாச்சியார் கோவில் எனவும் இது அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் பெருமாள் ரெங்கமன்னார் ஆவார். ஆண்டாள் சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படுகிறார். கி.பி. 15ஆம் நூற்றாண்டில் மாவெலி வாணாதிராயர் என்பவர் இக்கோவிலைப் புதுப்பித்தும், விரிவுபடுத்தியும் திருப்பணிகள் புரிந்தார் என்று அறியப்படுகிறது. மதுரைப் பாண்டிய மன்னர்களின் திருப்பணிகளையும், திருமலை மன்னர் முதலிய மதுரை நாயக்க மன்னர் திருப்பணிகளையும் இக்கோவில் கொண்டுள்ளது. ஆண்டாள் பிறந்ததாகக் கூறப்படும் ஆடி மாதத்தில் இக்கோவிலில் முக்கிய விழா நடைபெறுகிறது. மார்கழி மாதம் மற்றொரு முக்கிய விழா நடைபெறுகிறது. இக்கோவிலின் கருவறை முற்றிலும் கல்லினாலானதாகும். வேலைப்பாடுமிக்கது. கருவறை மேலுள்ள விமானத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களின் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. கருவறை முன்னுள்ள மண்டபத்தில் திருமலை மன்னர், அவரது குடும்பத்தினரின் சிலைகள் உள்ளன. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடுகள் இச்சிலைகள்மீது உள்ளன. இக்கோவிலின் கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியவை சிற்ப, கட்டடக் கலைச் சிறப்புமிக்கவை. கல்யாண மண்டபத்திலுள்ள 12 தூண்களில் காணப்படும் யாளிகளின் சிற்ப அமைப்பு மிக நேர்த்தியானது. துவஜஸ்தம்பத்தின் இரு பக்கங்களிலும் பின்புறம் பெயர்களைக் கொண்ட அற்புத சிற்பப் படைப்புகள் உள்ளன : 1. வேணுகோபாலன் 2. ஸ்ரீராமர் 3. விஸ்வகர்மா 4. நடன மாது 5. லட்சுமணன், சூர்ப்பனகைக் காட்சி 6. கலைவாணி 7. அகோர வீரபத்திரன் 8. ஜலந்தர் 9. மோகினி 10. சக்தி ஆகியன. ஒற்றைக் கல்லினாலான மிகப்பெரிய தூண்களில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூறிய சிற்பங்கள் யாவும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். துவஜஸ்தம்பத்தை அடுத்துள்ள ஏகாதசி மண்டத்தில் பின்வரும் சிற்பப் படைப்புகள் உள்ளன. 1. கர்ணன் 2. அர்ஜீனன் 3. குகன் 4. சாத்தகி 5. ஊர்த்துவமுக வீரபத்திரன் 6. நீர்த்தமுக வீரபத்திரன் 7. மன்மதன் 8. ரதி ஆகியன. மேற்கூறிய சிற்பங்கள் யாவும் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர் வீரப்பர் ஆட்சியில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கோவிலைச் சேர்ந்த மிகப்பெரிய தேர் மரச்சிற்ப வேலைமிக்கது. ஆண்டாள் கோவில் சிற்பங்கள் நமது அரிய கலைச் செல்வங்கள் ஆகும். ஆண்டாள் கோவிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் வைத்ய நாத சுவாமி கோவில் உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இக்கோவில் சிறந்து விளங்கியதாகக் தெரிகிறது. பாண்டிய மன்னர்களின் திருப்பணிகள் இக்கோவிலில் உள்ளன. திருமலை மன்னர் இக்கோவிலின் ஒரு மண்டபத்தைக் கட்டினார். இக்கோவிலின் இறைவி சிவகாமி அம்மன் ஆவார். ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மற்றொரு முக்கிய கோவில் கிருஷ்ணன் கோவில் ஆகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்பர் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள சில கற்சிற்பங்கள் வேலைப்பாடு மிக்கவை. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில், வடபத்ரசாயி கோயிலுக்கு அருகில் (தெற்கு ரத வீதியில்) திருமலை மன்னர் (1623-1659) கட்டிய சிறிய அரண்மனை உள்ளது. இவ்வரண்மனையிலுள்ள குவிமாடங்களும், தூண்களும் திருமலையின் மதுரை அரண்மனையை நினைவூட்டுகின்றன. இந்த அரண்மனைக் கட்டடத்தின் ஒருபகுதி 1887லிருந்து காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்த அரண்மனைக் கட்டடத்தில் உப கருவூலம், வட்ட அலுவலகம், நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இங்குள்ள ஒரு கட்டடத்தின் முன்பகுதியில் ஒரு பளிங்குச் சாசனம் உள்ளது. “முதல் உலகப் போரின் பொழுது(1914-18) ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 52 பேர் போருக்குச் சென்றதாகவும், அவர்களில் 8 பேர் உயிர் நீத்தனர்” என்றும் கூறும் ஆங்கில வரிகள் இச்சாசனத்தில் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை மன்னர் மாளிகையைக் காப்பது நமது கடமையாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருப்பதி சீனிவாசர் கோவிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் கள்ளழகர் கோவிலும் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இராஜபாளையம் நகர் உள்ளது. பஞ்சு, நூற்பு ஆலைகளுக்குச் சிறந்து விளங்கும் இந்நகரில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றிய P.S. குமாரசாமி ராஜா (1898-1957) வாழ்ந்தார்.
பாதுகாக்கும் நிறுவனம் - இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் - வைத்தியநாத சுவாமி கோயில், கிருஷ்ணன் கோயில், திருப்பதி ஸ்ரீனிவாசர் கோயில், கள்ளழகர் கோயில், மாரியம்மன் கோயில்
செல்லும் வழி - மதுரையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் - காலை 6.30-1.00 முதல் மாலை 4.00-9.00 வரை
அருகிலுள்ள பேருந்து நிலையம் - ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் - இராஜபாளையம், சிவகாசி
அருகிலுள்ள விமான நிலையம் - மதுரை
தங்கும் வசதி - இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர விடுதிகள்
ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை