கோயிலின் பெயர் - அருள்மிகு ஏடகநாதர் கோயில்
வேறு பெயர்கள் - திருஏடகம்
அமைவிடம் - அருள்மிகு ஏடகநாதர் கோயில், திருவேடகம்-624234, மதுரை மாவட்டம்.
ஊர் - திருவேடகம்
வட்டம் - வாடிப்பட்டி
மாவட்டம் - மதுரை
தொலைபேசி - 04543-259311
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை) - சைவம்
மூலவர் பெயர் - ஏடகநாதேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் - ஏலவார்குழலி, மாதேவியம்பிகை, சுகந்த குந்தளாம்பிகை
தலமரம் - வில்வம்
திருக்குளம் / ஆறு - பிரம தீர்த்தம், வைகை ஆறு
பூசைக்காலம் - காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் - ஏடு எதிரேறிய விழா, பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் - கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ முற்காலப் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு - இத்தலம் "பாகனூர்க் கொற்றத்து திருவேடகம்" என்றும், இறைவன் பெயர் "திருவேடகம் உடைய நாயனார்" என்றும் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் பாண்டியர்களில் மாறவர்மன் மகனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்திகள்,ஸ்ரீவல்லபதேவன், இவர்கள் காலங்களிலும், கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தில் சகம் 1448இலும் பொறிக்கப்பெற்ற மொத்தம் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில்(See the Annual Report on South Indian Epigraphy for the year 1905 No. 677 - 689.) சிவபெருமானின் திருப்பெயர் திருவேடகமுடைய நாயனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியன், சோணாட்டைக் கைப்பற்றி, முடிகொண்ட சோழபுரத்தில் விஜயா பிஷேகமும், வீராபிஷேகமும் செய்துகொண்டவன் என்றும், அவனே சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியனென்றும், கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம்பெற்றவன் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இம்மன்னன் காலத்தில் இவ்வூரில் இருந்த திருஞானசம்பந்தர் திருமடத்தில் இருபது தபசியர் உண்பதற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தி கூறப்பெற்றுள்ளது. ஸ்ரீ வல்லபதேவன் கல்வெட்டில், இவ்வூர் பாகனூர்க் கூற்றத்தைச் சேர்ந்ததென்று கூறப்பெற்றுள்ளது. கிருஷ்ணதேவமாராயர் கல்வெட்டு பச்சைப் பெருமாள் பச்சை கண்டிய தேவர் நிலம் அளித்ததை புலப்படுத்துகின்றது.
சுவரோவியங்கள் - சதாசிவம் மற்றும் ஐஸ்வரியேஸ்வரரின் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை காலத்தால் பிந்தியன.
சிற்பங்கள் - கருவறையில் இலிங்க வடிவில் ஏடகநாதர் காட்சியளிக்கிறார். ஏலவார் குழலி கருவறையில் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அம்மன் சந்நிதி கற்றூண் ஒன்றில் திருஞானசம்பந்தரின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.மேலும் தூண் புடைப்புச் சிற்பங்கள் இங்கு இறையுருவங்களாக அமைந்துள்ளன. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள படித்துறையில் அன்னையர் எழுவர் சிற்பங்களும், திருஞானசம்பந்தர், கணபதி, ஆற்றில் எதிரேறி மிதந்து வரும் ஏடு, விடை வாகனத்தில் காட்சி தரும் அம்மையப்பர் ஆகிய சிற்பங்கள் தலபுராணத்தை விளக்கும் புடைப்புச் சிற்பங்களாகஅமைந்துள்ளன.
தலத்தின் சிறப்பு - 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தரால் (மூன்றாம் திருமுறை) தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். பிற்காலப்பாண்டியர் கலைப் பாணியைப் பெற்றுள்ளது.
சுருக்கம் - மதுரையில் இருந்து வடக்கே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை ஆறு தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மன், பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் சிறப்பு மிக்க வழிபாட்டினைப் பெற்றுள்ளது.. பாண்டிய நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 4-வது தலமாகும். இத்திருக்கோயிலின் தல தீர்த்தமான பிரம தீர்த்தத்தில் நீராடி, திருஏடகநாதேஸ்வரரை வழிபட்டால் "சித்தப்பிரமை" நீங்கும் என்பது நம்பிக்கை. மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் (மதுரை-சோழவந்தான் சாலையில்) திருவேடகம் என்ற ஊர் உள்ளது.இவ்வூரின் புகழுக்குக் காரணம் இங்குள்ள ஏடகநாத சுவாமி கோவிலாகும். இது ஒரு சிறந்த சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். ஊரும் கோவிலும் வைகையாற்றின் கரையருகில் அமைந்துள்ளன. சமணர்களை ‘அனல்வாதத்தில்’ வென்ற திருஞான சம்பந்தர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு). பின் ‘புனல்வாதத்தில்’ ஈடுபட்டார். இப்போட்டியில் சமணர்கள் ஒரு சுலோகத்தை எழுதி அதை வைகை ஆற்றில் இட்டதாகவும், சமணரின் அவ்வேடு ஆற்றோடு போய்விட்டதாகவும், ஆனால் திருஞான சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றினை எதிர்த்துச்சென்று இன்றைய ஏடகப்பகுதியின்(திருவேடகம்) கரையில் அணைந்ததாகவும் இதனைக் கண்ட சமணர்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட தாகவும் கூறப்படுகிறது. சமணரை வென்ற திருஞான சம்பந்தர் ஏடணைந்த திருவேடகத்தில் சிவலிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டதாகவும், அதுவே இன்று திருவேடகம் கோவிலில் காட்சிதரும் ஏடகநாதர் என்றும் கூறுவர்.
கோயிலின் அமைப்பு - இறைவனின் கருவறைச் சுவர்களும், இறைவி ஏலவார் குழலியம்மையின் கருவறைச் சுவர்களும் தற்காலச் சிற்பிகளின் சிறந்த உளி வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. அம்மன் சந்நிதி முன்னுள்ள கற்றூண்களில் ஒன்றில் திருஞான சம்பந்தரின் சிறிய உருவமும், மற்றொன்றில் சமணர் ஒருவரின் உருவமும் உள்ளன. இக்கோவிலின் நுழைவாயிலிலுள்ள முற்றுப்பெறா நிலையிலுள்ள ‘மொட்டைக் கோபுரம்’ விஜயநகர அரசுகாலப் பணி என்று கூறப்படுகிறது. இந்நூற்றாண்டில், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இக்கோவிலைச் சீரிய முறையில் புதுப்பித்துக் கட்டியுள்ளனர்.
பாதுகாக்கும் நிறுவனம் - இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் - சோழவந்தான் ஜெனகமாரியம்மன் கோயில், கோச்சடை அய்யனார் கோயில், கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில், பரவை முத்துநாயகி அம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்
செல்லும் வழி - மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் 16 கிலோ மீட்டர் தூரத்தில் திருவேடகம் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன.
கோவில் திறக்கும் நேரம் - காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை
அருகிலுள்ள பேருந்து நிலையம் - பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, புதூர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் - மதுரை, சோழவந்தான்
அருகிலுள்ள விமான நிலையம் - மதுரை
தங்கும் வசதி - மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.