புதன்சந்தை செல்லும் வழி

அமைவிடம் - புதன்சந்தை செல்லும் வழி
ஊர் - புதன்சந்தை
வட்டம் - சேந்தமங்கலம்
மாவட்டம் - நாமக்கல்
வகை - குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2020
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

பேராசிரியர் சந்திரசேகர்

விளக்கம் -

குத்துக்கல் என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் புதைவிடத்தில் அவர்களின் நினைவாக நடப்படும் கல் ஆகும். இக்கல் மக்களால் வழிபடப்படும். இத்தகு குத்துக்கல் ஒன்று நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள புதன்சந்தை என்னும் ஊருக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளது. புதன்சந்தை குத்துக்கல் சுமார் 4அடி உயரமுடையது. கல்லின் மேல்பாகம் கூர்மையாக வெட்டப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்துக் குத்துக்கற்களிலும் ஏதாவது ஒரு முனை கூராக்கப்பட்டிருக்கும்.

ஒளிப்படம்எடுத்தவர் - பேராசிரியர் சந்திரசேகர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

நாமக்கல் அருகே 2,500 ஆண்டுக்கு முந்தைய குத்துக்கல் கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ., தொலைவில் சாலையோரம் 2,500 ஆண்டுக்கு முந்தைய குத்துக்கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு கல்லூரி வரலாற்றுதுறை பேராசிரியர் சந்திரசேகர் இந்த குத்துக்கல்லை கண்டுபிடித்துள்ளார். சுமார் 6 அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்டதாக குத்துக்கல் இருக்கிறது. இந்த குத்துக்கல் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பெருங்கற்காலத்தில் மனிதர்கள் தங்களது நிகழ்கால வாழ்வை விட இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி அதிக சிந்தனையுடன் இருந்துள்ளனர். மறுபிறவிக் கோட்பாடும், சமூக அந்தஸ்தும் அக்காலகட்டத்தில் உருவான சமூக கூறுகளாக கருதப்படுகிறது. குடியிருப்புகளை விட ஈமக்குழிகளுக்கு மிக முக்கியத்துவத்தை அப்போதைய மக்கள் அளித்துள்ளனர். இறந்த பிறகு, ஈமக்குழியின் மேல் ஒரு கல்லை நட்டு வைப்பது பழக்கமாக இருந்திருக்கிறது. குத்தி வைப்பதால் இது குத்துக்கல் என அழைக்கப்படுகிறது. இக்கல்லின் உயரத்தைக் கொண்டு அக்கால மக்களின் சமூக அந்தஸ்து அளவிட்டு இருக்கலாம் என்று தொல்லியலாளர்களும், சமூகவியலாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.