தாண்டிக்குடி-முருகன்கோயில்

அமைவிடம் - தாண்டிக்குடி-முருகன்கோயில்
ஊர் - தாண்டிக்குட
வட்டம் - கொடைக்கானல்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1928
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பழனி மலைத் தொடரில் அமைந்துள்ள தாண்டிக்குடி என்ற கிராமம் முக்கிய பாரம்பரிய வணிகப்பாதையில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பாதை மேற்கு கடற்கரையில் இருக்கும் முசிறித் துறைமுகத்தையும், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மற்றும் மதுரையையும் இணைக்கும் விதமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரிலிருந்து வடகிழக்கில் 44 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்தி லிருந்து 4,400 அடி உயரத்தில் தாண்டிக்குடி உள்ளது. பழனி மலையில் உள்ள முக்கிய கிராமம் தாண்டிக்குடி. இம் மலையில் உள்ள பாலமலை, பெருமாள்மலை, மச்சூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் கதவு மலை கிராமங்கள் ஊடே வணிகப்பாதை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பழனி மலைப் பகுதிகளில் காணப்படும் பெருங்கற்கால கட்டுமானங்கள் நான்கு வகைகளில் காணப்படுகிறது. அவை கற்திட்டை , கல்லறை, தாழி மற்றும் கல் வட்டங்களாகும். தாண்டிக்குடியில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின் மூலம் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தில் பரவலான வேறுபாடுகள் காணப்படுகின்றது. ஐயூர் முடவனார் என்ற சங்க காலக்கவிஞர் எழுதிய புறநானூற்றுச் செய்யுள் (399:34) ``தோன்றிக்கோ” என்ற குறுநில மன்னனைக் குறிப்பிடுகிறது. தாண்றி என்ற சொல்லின் பழைய வடிவமாகவே தோன்றி என்ற சொல் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் தோன்றிக் குடியே இன்றைய தாண்டிக்குடியாக மாறி இருக்க வேண்டும். குணசேகரப் பாண்டியன் ஆட்சியில் கி.பி.1280ல் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று இங்குக் கிடைத் துள்ளது. இக்கல்வெட்டில் ``தாண்றிக்குடி” என இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. தாண்றி என்பது ஒரு வகை மரம். இதன் தாவரவியல் பெயர் டெர்மினாலியா பெல்லரிகா என்பது ஆகும். இம்மரம் தற்போதும் இப்பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. குடி என்பது ஊரைக் குறிக்கும். தாண்றிக்குடி என்ற பெயரின் திரிபு வடிவமாகவே தாண்டிக்குடி என்ற பெயர் வழங்குகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட இக் கிராமத்தில் மலைகளிலிருந்து தோன்றும் சிறிய ஓடைகள் ஒன்றாகக் கலந்து பெரியாறு ஓடை என்ற பெயரில் சிற்றாறு ஒன்று ஓடுகிறது. இது பின்னர் மருதா நதி என்ற ஆற்றில் கலக்கிறது. இரு வாணிப வழிப்பாதைகளுக்கு அருகில் தாண்டிக்குடி இருந்துள்ளது. முதலாவது பாதை தென்பகுதியில் உள்ள பாண்டியரின் தலைநகரமான மதுரைக்குச் செல்வது. மற்றொரு பாதை சேரர்களின் தலைநகரமான வஞ்சி நகருக்கு சின்னமனூர், உத்தம பாளையம், உத்தமபுரம், கம்பம், கூடலூர் என முல்லைப் பெரியாறு ஆற்றின் கரைப் பகுதி வழியாகச் செல்வது. இப்பாதையானது வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள பாண்டியரின் துறைமுகமான ஆலங்குளத்தையும் பெரியாற்றின் முகத்துவாரத்தில் உள்ள சேரர்களின் துறைமுகமான முசிறியையும் இணைத்தது. தாண்டிக்குடிக் கல்லறைகளில் நிகழ்ந்த அகழ்வாய்வில் கிட்டிய கலைப்பொருள்கள் வணிகர்களுடனும் வணிக மையங்களுடனும் இவ்வூர் கொண் டிருந்த நெருக்கமான உறவை வெளிப்படுத்துகின்றன. இரும்புக்காலத்திற்கு முன்பிருந்தே இப்பகுதி குடியிருப்புப் பகுதியாக இருந்துள்ளதை இங்கு அகன்றெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகள் உணர்த்து கின்றன. ஆங்கிலேட் என்பவர் தாண்டிக்குடியிலிருந்து மணலூர் செல்லும் பாதையின் ஓரத்தில் இறந்தோரை அடக்கம் செய்யும் பதுக்கைகள் (டால்மன்கள்) காணப் பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் பார்வையிட்ட காலத்திலேயே வரலாற்றுச் சின்னங்களான கற்குவியல்களும் கற்பலகைகளும் சாலை போடவும் கட்டிடம் கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 46 கல்லறைகளில் மூன்று மட்டுமே அழிவுக்கு ஆளாகவில்லை. இங்குக் காணப்படும் பதுக்கைகளை முழுமையாகப் பார்க்கும்போது இவற்றை அமைப்பதில் ஓரே சீரான அமைப்பு முறை பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. மழைநீர் நேரடியாகப் புதைகுழிக்குள் விழாதவாறு அமைக்கப்பட்டுள்ளன. தாண்டிக்குடியில் பதுக்கைகளை `பேட்டு’, `அரை மனிதன் வீடு’ என்று அழைக்கிறார்கள். இப்பதுக்கைகள் அனைத்தும் பாறைகளின் மீதே உருவாக்கப்பட்டுள்ளன. இவை தனித்தனியாக இல்லாமல் கூட்டமாகவே அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து இரும்பு கற்காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு நிறப் பாண்டங்கள், இரும்பு உளி ஆகியன . இரும்புக்காலத்திய புதைகுழிகள் மூன்று இடங் களில் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று தலைக்காட்டில் உள்ள காஃபி வாரிய வளாகம், இரண்டாவது முருகன் கோயில் வளாகம், மூன்றாவது பொம்மக்காடு என்னும் பகுதி. இம்மூன்று பகுதிகளிலும் கற்பெட்டியைப் போல கல்லறைக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மூடியிருந்த கற்பலகைகள் பல புதைகுழியை விட்டு அகற்றப்பட்டுத் தனித்துக் கிடைக்கின்றன. கல்லறை ஒன்று நன்றாகச் செதுக்கப்பட்ட கற்பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது. மண் தரையில் செங்கோண வடிவில் தோண்டப்பட்ட குழியில் கற்பலகை ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. குழியின் நான்குபுறமும் கற்பலகைகளைச் செங்குத்தாக நட்டு, ஒரு பெட்டி போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் இக்குழியானது சம அளவிலான இரு பிரிவுகளாக இரண்டு மீட்டர் ஆழத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தினரின் கூற்றுப்படி இத்தகைய கல்லறைகள் காஃபி சாகுபடிக்காக நிலத்தைச் சமப்படுத்தும் போது அழிந்து போயின. அடர்ந்த காடும் தீவிரமான காஃபி சாகுபடியும் எல்லா கல்லறைகளையும் ஆராய முடியாதவாறு செய்துவிட்டன. இருந்த போதிலும் இப்பகுதி யானது பெரிய அளவிலான அடக்கத் தளமாக இருந்துள்ளதை இக்கல்லறைகளும் அவற்றின் அமைப்பும் உணர்த்துகின்றன. இரும்பு வாள்கள், சில மண்பானைகள் ஆகியன சிதைவடைந்த கல்லறைகளில் கிடைத்துள்ளதாக இக் கிராம மக்கள் கூறுகின்றனர். ஆங்கிலட் என்பவர் 1954ல் நிகழ்த்திய அகழ்வாய்வில் சேகரித்த பொருட்கள் செம்பகனூர் அருங்காட்சியகத்தில் உள்ளன. கிராம மக்களின் கூற்றுக்கு அருங்காட்சியகப் பொருட்கள் வலுவூட்டுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

பழனிமலைத் தொடரில் அமைந்துள்ள கொடைக்கானல் மலையில் உள்ள தாண்டிக்குடி பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் இருப்பதை 1928-இல் முதன்முதலாக கண்டறிந்தவர் ஆங்கிலேடு என்று ஆங்கிலேயர் ஆவார். இவர் அக்காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்.இப்பகுதி மக்கள் இந்த சின்னங்களை வாலியர்வீடு, பேத்து, குகை என்று அழைக்கின்றனர். இங்குள்ள கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் காலத்தால் முந்திய ஈமச்சின்னங்களாகும். இங்கு தமிழகத்தின் ஐவகைத் திணைகளில் மலையும் மலை சார்ந்த பகுதிகளும் கூடிய குறிஞ்சித் திணையின் கடவுளான முருகனுக்கு கோயில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலின் அருகில் கற்திட்டைகள் காணக்கிடைக்கின்றன. கற்பதுக்கைகளில் செய்யப்பட்ட ஆகழாய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பளிங்கு, சூதுபவளம், அஸ்டியடைட் போன்ற அரிய கல்மணிகள் அகழந்தெடுக்கபட்டன. இவற்றில் எண்ணூறுக்கும் மேற்பட்டவை ஸ்டியடைட் மணிகளாகும். இவை 5 மி,மி அளவுடையன, தமிழகத்தில் முதன்முதலில் உவை தாண்டிக்குடி கற்பதுக்கைகளிலே கண்டறியப்பட்டுள்ளன. ஸ்டியடைட் சிந்துவெளி மக்கள் அதிக அளவில் பயண்படுத்தியுள்ளனர் என்பது இங்கு குறுப்பிடதக்கது. தாண்டிக்குடி பகுதியில் கற்பதுக்கைகளில் கிண்ணங்கள், பிரிமணைகள், பானைகள் போன்ற மட்கலன்களும் கண்டெடுக்கபட்டன.