ஆயக்குடி-ஆமைக்கரடு

அமைவிடம் - ஆயக்குடி-ஆமைக்கரடு
ஊர் - ஆயக்குடி
வட்டம் - பழனி
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஆயக்குடி பகுதியில் உள்ள ஆமை கரடு என்ற இடத்தில் இந்தக் கல்திட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வழக்கமான கல்திட்டைகள் அமைப்பிலிருந்து இவை முற்றிலும் மாறுபடுகின்றன. ஏற்கனவே இதே ஆமை கரடு பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கல் வீடுகளும், புறாக்கூடு அமைப்பிலான கல்திட்டைகளும் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை இப்பகுதியை ஆண்ட சங்ககால ஆய் வேளிர் அரசர்களின் நினைவிடங்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளன. கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரன் வழியினரின் நினைவிடங்கள் இவை. தற்போது இந்த ஆமை கரடின் தெற்கு பகுதியில் புதிதாக சில கல் அமைப்புகள் கண்டறியப்பட்டன. இந்த அமைப்புகள் 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இங்கு உள்ளன. பாறையின் மேற்புறத்தில் உருண்டை வடிவிலான கல்லை வைத்து அதற்குமேல் ஒரு தேங்காய் அளவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் மேலும் ஒரு உருண்டை வடிவிலான கல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காய் வடிவிலான கல் இரண்டு உருண்டை கற்களுக்கு நடுவில் சொருகி வைக்கப்பட்டதை போல் உள்ளது. இந்த அமைப்பு சுமார் 4 அடி உயரம் கொண்டுள்ளது. மேலே உள்ள உருண்டைக் கல் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதற்கான அடையாளத்துடன் காணமுடிகிறது. அதேபோல் இந்தக் கல்திட்டைகளில் உள்ள ஒரு பலகை கல்லில் ஏழு, ஏழு கட்டங்களாக மொத்தம் 49 கட்டங்கள் பகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டங்கள் தமிழர்களின் மறுபிறப்பு மற்றும் ஏழு பிறப்பு நம்பிக்கையினை வெளிப்படுத்தும்விதமாக உள்ளது. தமிழர்களிடத்தில் ஏழு பிறப்பு நம்பிக்கை இருந்ததைத் அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், ஆண்டாள் ஆகியோர் தத்தமது பாடல்களில் பதிவுசெய்துள்ளனர். இங்கு கிடைத்துள்ள 49 கட்டங்கள் உடைய கற்பலகை ஆய்வுக்குரியது. பைபிளில் இந்த 49 என்பது 'முக்தி அல்லது விடுதலை'யின் எண்ணாகப் பாவிக்கப்படுகிறது. இதை ஜுப்ளி வருடம் என்பார்கள்.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள 'ஆமை கரடு' என்னுமிடத்தில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்திட்டைகள் கண்டறியப்பட்டன. இந்தக் கல்திட்டைகள் பழந்தமிழ் மக்களின் மறுபிறப்பு மற்றும் ஏழு பிறப்பு நம்பிக்கைகளைக் குறிப்பதாக உள்ளன என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.