மலையடிப்பட்டி

அமைவிடம் - மலையடிப்பட்டி
ஊர் - மலையடிப்பட்டி
வட்டம் - பொன்னமராவதி
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச்சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது. முக்கிய வழிபாட்டு பகுதியிலிருந்த கல்வட்டத்திலிருந்த கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு அதிலிருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேரெதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அருகாமையில் இருக்கும் இரு கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கபடாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது. இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும் இப்பகுதியும் துணை வழிபாட்டு அமைப்புகளாக இருக்கிறது.கோயிலின் வடபுறம் மற்றும் தெற்கு புறங்களில் ஐந்து கல்வட்டங்கள் காணப்படுகிறது. இவைகள் ஐந்தும் வழிபாட்டில் இல்லை. ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத்தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டுள்ளன. கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகலாக கிழக்குப்புற விளிம்பு பகுதியில் கருங்கல்லினாலான நான்கு பலகைக்கற்களை இணைத்து சதுரவடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் செம்புராங்கற்களுக்கு பதிலாக கல் வட்டங்களை அமைக்க இப்பகுதியில் எளிதாக கிடைக்கும் கருங்கல் பலகைக் கற்களை பயன்படுத்தி யுள்ளனர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவைகளில் கோயிலின் வடபுறம் உள்ள கல் வட்டமே 24 அடி விட்டமுடையதாகும் இதே அளவை ஒத்த கல்வட்டங்கள் இரண்டும் .ஏனைய நான்கும் 14 அடி விட்டமுடைய கல்வட்டங்களாக உள்ளன. கல்லறையின் மேற்பகுதி மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் 3 அடி வரை உள்ளது. இது கல்வட்டத்திலுள்ள செம்புறாங்ககற்களை விடவும் சற்று கூடுதல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள வனத்தில், கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருக்கிறது. இதனை மக்கள் வழிபட்டு வருகின்றனர். சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஏழு கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் இரண்டு கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டிலுள்ளதை காண முடிந்தது.