சின்னஉடைப்பு கண்மாய்

அமைவிடம் - சின்னஉடைப்பு கண்மாய்
ஊர் - சின்னஉடைப்பு
வட்டம் - தெற்கு வட்டம்
மாவட்டம் - மதுரை
வகை - தாழி
கிடைத்த தொல்பொருட்கள் - முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், கருப்பு-சிவப்பு பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2016
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

முனைவர் மகாராசன்

விளக்கம் -

மதுரை மாவட்டம், தெற்கு வட்டம், அயன்பாப்பாகுடி உட்கிடையில் அமைந்திருக்கும் சின்னஉடைப்பு எனும் சிற்றூரின் கண்மாய் அருகே பழங்கால ஈமச் சின்னங்களான முதுமக்கள் தாழிகள் புதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சின்னஉடைப்பில் கண்டறியப்பட்டுள்ள ஈமக்காடு மற்றும் தாழிகள் குறித்து இப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இந்நிலப் பகுதியைத் ‘தால வைத்தான் காடு’ எனவும், ‘தாட வைத்தான் காடு’ எனவும் குறிப்பிடுகின்றனர். இவை ‘தாழி வைத்தான் காடு’ அல்லது ‘தடம் வைத்தான் காடு’ அல்லது ‘தடயம் வைத்தான் காடு’ என்பதன் திரிபாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இம்மேட்டுப் பகுதிக்கு ஆடுமாடுகள் மேய்க்கச் செல்லும்போது ஆந்தைகள் மட்டுமே கள்ளி மரங்களில் அலறிக் கொண்டிருக்கும் எனவும், இந்தப் பகுதிக்கு ஆட்கள் வருவதற்கே அஞ்சுவர் எனவும் குறிப்பிடுகின்றனர். சின்ன உடைப்பில் வாழும் சில முதியவர்கள் ‘இந்தப் பகுதியில் பெரிய குளுமைகளில் (தாழி போன்றே இருக்கும் தானியக் குதிர்) உணவுத் தானியங்கள் இருந்ததாகவும், அவற்றை வீட்டிற்கு அள்ளி வந்ததாகவும், நிறைய ஓட்டைக் காசுகளைப் பொறுக்கி வந்ததாகவும் இளவயது அனுபவங்களை வெளிப்படுத்தினர். ஒன்றிரண்டு கல்வட்டங்களைக் கொண்டிருக்கும் ஈமக்காட்டு அகழாய்வுகளின் மூலமே ஏகப்பட்ட தொல்லியல் பொருட்களை வெளிக்கொணர்ந்துள்ளனர் ஆய்வாளர்கள். தற்போது இங்கு கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள் புதைந்துள்ள ஈமக் காடானது 50க்கும் மேற்பட்ட கல்வட்டங்களைக் கொண்ட பெரும்பரப்பாய் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 40 முதல் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இப்புதைமேடானது, அரசு புறம்போக்கு நிலத்திலும், தனியார் நிலத்திலும் பரவியிருக்கிறது. இப்புதைமேட்டின் ஓரத்தில்தான் மதுரை-கன்னியாகுமரி நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. இந்நிலப்பகுதியின் பெரும்பாலான பரப்பும் இதனைச் சுற்றியுள்ள மற்ற பெரும்பரப்பும் மனையிடப் பகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. பல கல்வட்டங்களும் தடயங்களும் அகற்றப்பட்டுள்ளன. புதர்களும் இண்ட முள்மரங்களும் கள்ளிகளும் சூழ்ந்த இவ் ஈமக்காடு, பெருங்கற்காலத் தொன்மையின் அடையாளப் பதிவாய் அமைந்திருக்கிறது. மழைநீர் அரிப்பால் பத்துக்கும் மேற்பட்ட தாழிகளின் மேற்பகுதி வாய்ப்பகுதிகள் வெளித்தெரிகின்றன; சிதைவுகளுக்கும் உள்ளாகி வருகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - முனைவர் மகாராசன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

மதுரையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மதுரை வானூர்தி (விமான) நிலையம் அருகே அமைந்திருக்கும் ஊர் சின்னஉடைப்பு ஆகும்.  இவ்வூரின் கண்மாய் அருகே பழங்கால முதுமக்கள் தாழிகள், ஈமச் சின்னங்கள் நிறைந்த ஈமக்காடு எனப்படும் புதைமேடு கண்டறியப்பட்டுள்ளது.