பெரியகளந்தை

அமைவிடம் - பெரியகளந்தை
ஊர் - பெரியகளந்தை
வட்டம் - கிணத்துக்கடவு
மாவட்டம் - கோயம்புத்தூர்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில், கிணத்துக்கடவுக்கருகில் அமைந்துள்ள ஊர் பெரியகளந்தை. இங்கு ஆதீசுவரர் கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அண்மையிலேயே தொல்லியல் சின்னமான கல்திட்டை ஒன்று காணப்படுகிறது. வீடு போன்ற அமைப்பில் மூன்று புறமும் மேல்பகுதியிலும் பலகைக்கற்களால் மூடப்பட்ட தோற்றத்திலும், நான்காவது முகமாக முன்புறம் வாயில் போன்ற அமைப்பில் திறந்துள்ள தோற்றத்திலும், கட்டப்பட்ட இக்கல்திட்டை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். இக்கல்திட்டையில், இடுதுளை ஒன்றும் உள்ளது. இக்கல்திட்டையில் காணப்பெறும் ஒரு சிறப்பு என்னவெனில், பிற்காலத்தினர், கல்திட்டையின் அறை போன்ற பரப்பில் புலியைக் கொன்ற வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்களை அமைத்துள்ளனர். இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் சிற்பத்தில் வீரன் ஒருவன், குதிரையுடன் இருப்பதாகக் காட்சி. இரண்டாவது சிற்பத்தில் பாய்ந்து தாக்குகின்ற நிலையில் காணப்படும் புலியின் உருவம். புலியோடு வீரன் போரிடும் வழக்கமான காட்சியில் அமையாது, வீரனும் புலியும் தனித்தனியே காட்டப்பட்டிருகிறார்கள்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கிணத்துக்கடவுக்கு அருகில் உள்ள பெரியகளந்தை என்னும் ஊரில் கற்திட்டை ஒன்று காணப்படுகின்றது. இக்கற்திட்டையில் வீரன் ஒருவனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லசந்திரம் கற்திட்டைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியம் வரைந்து வழிபடுதல் என்பது பிற்காலமரபில் சிற்பங்களாக வடிவெடுத்தன. அந்நிலையை பெரியகளந்தை கற்திட்டையில் காணமுடிகின்றது.