கோட்டமங்கலம்

    அமைவிடம் - கோட்டமங்கலம்
    ஊர் - கோட்டமங்கலம்
    வட்டம் - உடுமலைப்பேட்டை
    மாவட்டம் - திருப்பூர்
    வகை - கற்திட்டை
    கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

    கோட்டமங்கலம் - கல்திட்டைகள், கோட்டமங்கலம்-அக்கு தார்ச் சாலையிலிருந்து ஒரு கல் தொலைவில் புன்செய் நிலத்திடையே காணப்படுகின்றன. இங்கு இரு கல்திட்டைகள் தற்போது காணக்கிடக்கின்றன. இவ்வூர் உடுமலை திருப்பூர் சாலையில் குடிமங்கலத்திலிருந்து தெற்கே நான்கு கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கருவன்ராயன் கோயிலுக்கு பின்புறம் விஜயகுமார் அவர்களின் தோட்டத்தில் இரண்டு பெருங்கற்காலச் சின்னங்களான கற்பதுக்கைகள் உள்ளது. இதன் உள்பகுதியில் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு பூச்சும் உள்ளது. தெற்கு பகுதியில் இடுதுளையும், மேல்புறத்திலும்(Cap Stone) இடுதுளையும் உள்ளது. மற்றொன்றில் வடபுறத்திலும் மேற்கு பகுதியிலும் இடுதுளை உள்ளது. பெரும் பலகைக் கற்களை நாற்புறமும் செவ்வகமாக இணைத்த ஓர் அமைப்பாக இக்கல்திட்டைகள் அமைந்துள்ளன. முன்புறம் சிறிய அளவிலான இரண்டு பலகைக் கற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் இடையில் வீட்டின் நுழைவாயில் போன்று இடைவெளி. நேர் பின்புறம் ஒரு ஒற்றைக் கல் பலகை. இவ்விரண்டு அமைப்பும் செவ்வகத்தின் அகலப் பக்கங்கள். செவ்வகத்தின் நீளப்பக்கங்கள் இரண்டிலும் இரண்டு நீளமான பெரிய பலகைக் கற்கள். இவற்றின் மேலே கூரைப்பகுதியில், ஆமையின் முதுகில் காணப்படும் ஓடு போன்றதொரு மிகப்பெரிய பலகைக் கல். செவ்வகப் பரப்பை முழுதும் மூடுகின்ற வகையில் மூடுகல். உள்ளே கல்லறை அமைப்பாக உள்ளது. மற்றொரு கற்திட்டையின் மூடுபலகைக் கல்லில் ஒரு பெரிய வட்டமான இடுதுளை காணப்படுகிறது.

    ஒளிப்படம்எடுத்தவர் - து.சுந்தரம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்