சானூர்

அமைவிடம் - சானூர்
ஊர் - சானூர்
வட்டம் - மதுராந்தகம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

சானூர் மத்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமாகும். சானூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்களும், கற்திட்டைகளும் காணப்படுகின்றன. மிகப்பெரிய ஈமக்காடாக இவ்விடம் விளங்கியிருப்பது இங்கு காணப்படும் ஈமச்சின்னங்களைக் கொண்டு அறியமுடிகிறது. இங்கு கற்பதுக்கைகள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் கற்பதுக்கைகள், கற்பலகைகளில் உருவாக்கப் பெறவில்லை. பெரிய பாறைகள் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளன. எனவே, இவை சற்று கரடுமுரடாக உள்ளன. இவை நாற்புறமும் கிரானைட் கற்களைக் வைத்து ஓர் அறை போல உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் உள்ளே சுடுமண்ணால் செய்யப்பட்ட ஈமப் பேழைகள் கிடைத்துள்ளன. இந்த அறைகள் மூடுகற்களால் மூடப்பட்டுள்ளன. இங்கு இரும்பாலான பொருட்களும், மனித எலும்புகளும், சங்கால் செய்யப்பட்ட காதணிகளும் கிடைத்துள்ளன. இங்கு கருப்பு-சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்புப் பானைகள் கிடைத்துள்ளன. பானைகளில் குறியீடுகள் கோட்டுருவங்களாக எழுதப்பட்டுள்ளன. இவை சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளை ஒத்திருப்பதாக ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

சானூர் ஒரு பெருங்கற்கால (இரும்புக்கால-வரலாற்றுத் துவக்கக்கால) ஈமச்சின்ன இடமாகும். இந்த இடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டிலிருந்து, திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சிறு மலைகள் அமைந்துள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான இறந்தவர்களுக்காக எழுப்பப்பட ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இந்திய அரசுத் தொல்லியல் ஆய்வுத்துறை இந்த இடத்தில் பல ஈமச்சின்னங்களை அகழாய்வு செய்துள்ளது. இந்த ஈமச்சின்னங்களிலிருந்து பல அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.