மாவடைப்பு

அமைவிடம் - மாவடைப்பு
ஊர் - மாவடைப்பு
வட்டம் - உடுமலைப்பேட்டை
மாவட்டம் - திருப்பூர்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

உடுமலைப்பேட்டைப் பகுதியில் உள்ள மாவடைப்பு என்னும் மலைக்கிராமத்தில் கற்திட்டை கண்டறியப்பட்டுள்ளது. கல்திட்டை எனப்படும் ஈமச்சின்னம் பொதுவாக பூமியின் மேல் நான்கு பெரிய பலகைக்கல்லை பக்கங்களில் நிறுத்தி அதன் மேல் ஒரு பலகைக்கல்லை மூடுகல்லாக ( Cap stone) வைத்து கல்லறை உருவாக்கப்படுவதாகும். கிழக்குப்பக்க கல்லில் ஒரு பெரிய துளை ஒன்றும் போடப்பட்டிருக்கும். இது போன்ற அமைப்பு சவ்வாதுமலையில் கீழ்சேப்பிளி என்ற கிராமத்தில் நிறைய காணப்படுகின்றன. இவற்றின் அமைப்பையொட்டி 3 வகைகளாக பிரிப்பர். முதல்வகை கல்திட்டை சதுரம், செவ்வகம் வடிவில் கற்களை ப வடிவில் மூன்று பக்கமும் நிறுத்தி அதன் மேல் மூடுகல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். கிழக்கு பக்கம் மூடப்படாமல் விடப்பட்டிருக்கும். இச்சின்னங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து 5 அல்லது 6 சின்னங்களாக சேர்ந்து இருக்கும். இரண்டாம் வகை ஈமச்சின்னங்களில் 3 பக்கமும் ப வடிவில் பலகைக்கல்லை அமைத்து கற்கள் சாயாமல் இக்க பக்கவாட்டில் சிறிய கற்களை நிறுத்திவைப்பர். கிழக்குப்பக்கம் மூடப்படாமல் கல்லறை நுழைவாயில் போல இருக்கும். இவை தனித்தனியே அமைந்திருக்கும். மூன்றாம் வகை நான்கு புறமும் பெரிய பலகைக்கல்லை வைத்து மேல்பகுதியில் மூடுகல்லை வைத்து மூடிவிடுவர், கிழக்குப்பக்கம் கல்லில் மட்டும் வட்டமாக ஒரு துளை அமைந்திருக்கும்.

ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மாவடப்பு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் இவ்வகையான கல் திட்டைகள் அதிக அளவில் காணப்படுன்றன. இந்த கல்திட்டைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பலகை வடிவிலான பாறைக் கற்களால் இவை உருவாக்கப்பட்டு, சிறிய அளவிலான வீடுபோல அமைந்துள்ளது. மலைகளின் உச்சியில் உள்ள சமதளப்பரப்பில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. அந்தந்த இடங்களை வைத்து எந்த இனக் குழுவினர் வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. பக்கத்துக்கு ஒரு கல் பலகையை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலகைக் கற்களை வைத்து, மேல்புறம் அகலமான பலகைக் கல்லை வைத்து இவை மூடப்பட்டுள்ளன. கல் திட்டையின் கிழக்குப் பக்கமுள்ள பலகைக் கல்லில் வட்ட வடிவில் இடுதுளை ஒன்று காணப்படுகிறது. `யு’ வடிவிலும் துளையிடப்பட்டுள்ளன.