கீ்ழ்நமண்டி

அமைவிடம் - கீ்ழ்நமண்டி
ஊர் - கீழ்நமண்டி
வட்டம் - வந்தவாசி
மாவட்டம் - திருவண்ணாமலை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், நெடுங்கல், குழிக்குறிபாறை, கறுப்பு சிவப்பு வண்ண பானைகள், இரும்பு ஆயுதங்கள், இரும்பு கசடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2020
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

திரு.பழனி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

விளக்கம் -

கீழ்நமண்டி கிராமத்தின் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகளால் சூழப்பட்ட இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு உள்ளது. இந்த ஈமக்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இக்கல்வட்டங்களின் நடுவில் மண்ணுக்கடியில் ஈமப்பேழையில் அக்காலத்தில் இறந்து போன மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண்குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்துவிடுவது வழக்கம். இவ்வாறு புதைத்த இடத்தை சுற்றி வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பதும் வழக்கமாகும். இதுபோன்ற பல கல்வட்டங்கள் இங்கு உள்ளன. இவற்றில் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இதனை தொல்லியலாளர்கள் பெருங்கால கல்வட்டங்கள் என்று அழைக்கின்றனர். இங்கு கிடைக்கும் பெருங்கற்கால கல்வட்டங்களில் சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் 4 இடத்தில் உள்ளன. இதுபோன்று தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரிப்பகுதியிலும் கிடைக்கின்றன. அந்த வரிசையில் கீழ்நமண்டி கல்வட்டப்பகுதியில் கிடைக்கும் குறிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த குழிக்குறிப் பாறையில் உள்ள வட்டக்குழிகள் அக்கால மனிதர்களின் வானியல் அறிவினைக் குறிப்பதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஒளிப்படம்எடுத்தவர் - திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள கீழ்நமண்டியில் காணப்படுகின்ற பெருங்கற்கால கல்வட்டங்கள் சில சிதிலமடைந்துள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண்குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. கீழ்நமண்டி ஒரு தொல்லியல் களமாகும். இவ்வூரை அகழாய்வு செய்தால் பண்பாட்டுத் தரவுகள் வெளிவரக்கூடும்.