குடியம்

    அமைவிடம் - குடியம்
    ஊர் - கூனிப்பாளையம்
    வட்டம் - பொன்னேரி
    மாவட்டம் - திருவள்ளூர்
    வகை - பழங்கற்காலக் குகை
    கிடைத்த தொல்பொருட்கள் - பழங்கற்காலக் குகை, 16 பாறை மறைவிடங்கள்
    பண்பாட்டுக் காலம் - தொல் பழங்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - 1962-63, 1963-64
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங்

    விளக்கம் -

    குடியம் குகை பூண்டிக்கு மேற்குப்புறம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அல்லிக்குழி மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிகப்பெரிய அளவிலான குகை “மனச்சம்மன்“ குகை எனப்படும். இது சுமார் 100 அடி உயரமுடையதாகும். இக்குகை சுமார் 100 பேர் தங்கக் கூடிய அளவு பரப்பளவினை உடையதாக காணப்படுகின்றது. இப்போதும் இப்பகுதி கிராம மக்கள் பௌர்ணமி நாளில் இங்குள்ள மனச்சம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு 1962-63 மற்றும் 1963-64-இல் அகழாய்வு செய்யப்பட்டது. இதில் தொல்பழங்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தில் படிப்படியாக வளர்ச்சி பெற்றதைத் தெளிவாக அறியமுடிகிறது. கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், வெட்டிகள், சுரண்டிகள் ஆகியவை இங்கு கிடைத்துள்ளன.

    சுருக்கம் -

    இந்தியாவின் மிகச் சிறப்பான பழங்கற்கால வாழ்விடமாகும். இது ஒரு குகையுடன் கூடிய இடமாகும். இந்தக் குகையில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கானத் தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. இது போன்ற பழங்கற்காலக் குகைகள், இந்தியாவில் வெகு அரிதாகவே உள்ளன. இது சென்னைக்கு வட மேற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் குகை 1962-63, 1963-64 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. பழங்கற்கால மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக அமைந்துள்ள குகைகளைப் பயன்படுத்தினர் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறப்பான சான்றாகும். இங்கு பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைக்கின்றன. அச்சூலியன் காலத்திற்குப் பிந்தைய (இடைப் பழங்கற்காலம்) காலக் கருவிகள் நுண்கருவி தொழிற்கூடமாக மாறுவதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் 16 பாறை மறைவிடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டில் கற்காலச் சான்றுகள் காணப்படுகின்றன.

    குறிப்புதவிகள் -
    1. H.D.Sankalia - The Pre and Proto History of India and Pakistan, Deccon College, Post Graduate Research Institute, Poona, 1974.
    2. V.D.Krishnasamy - Stone Age of India Ancient India Vol.3 
    3. Shanthi Pappu and Kumar Akhilesh - The Palaeolithic Archaeology of the Kortallayar river Basin, Tamil Nadu, Sharma Center for Heritage Education, Chennai. Kalvettu, காலாண்டு இதழ், எண்-58. 
    4. Santhi Pappu - The Palaeolithic Site of Attrampakkam at Tamil Nadu, Avanam No.13 
    5. Shanthi pappu - A Re-Examination of the Palaeolithic Archaeological record of Northe Tamil Nadu, South India. 
    6. Vidula Jayaswal - Palaeo History of India, Agam kala prakasam Delhi 1978.
    7. Indian Archaeology A Review - 1966-67 pg.20-21. 
    8. Sitaram Gurumurthy - Excavations of Archaeological sites in Tamilnadu, Parikulam Govement of Tamilnadu, Dept of Archaeology, 2006. 
    9. H.D.Sankalia - Stone Age Tools, Their Techniques, Names and Probable Functions, Deccon College, Poona, 1964.