போதமலை

அமைவிடம் - போதமலை
ஊர் - போதமலை
வட்டம் - இராசிபுரம்
மாவட்டம் - சேலம்
வகை - கற்திட்டைகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள், கற்பரல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள 'போகர் மலை' என அழைக்கப்படும் போதமலை உச்சியில் இருக்கும் கல்திட்டைகள், பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்களில் ஒன்று. `நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது வடுகம் கிராமம். இங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. போதமலை அடிவாரம். சுமார் 10 கிலோ மீட்டர் கடந்தால் மலையை அடையலாம். அதேபோல வெண்ணந்தூர், பனமரத்துப்பட்டி எனப் பல்வேறு ஊர்கள் வழியாக போதமலைக்கு செல்லும் பாதை உள்ளன. அக்கால மனிதர்கள், இறந்தவர்களைப் புதைத்து, அதன்மேல் மூன்று பக்கம் சுவர் போல் கற்களை நிறுத்தி, மேலே பெரிய பலகைபோன்ற தட்டைவடிவ கல்லை படுக்கை வாக்கில் வைத்து, வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். சில இடங்களில், முன் துளையுடனும் அமைப்பார்கள். அவ்வழியே இறந்தவர்களின் ஆன்மா வெளியே வந்து செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை. உள்ளே இறந்தவர் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பும் பொருள்களையும் உடன் புதைப்பார்கள். அதை அவர்கள் செல்லும் புதிய உலகத்தில் பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இவற்றின் காலம் சுமார் 5000 ஆண்டுகளும், அல்லாது அதற்கு மேலும் இருந்திருக்கும். அன்றைக்கே பெரிய பாறைகளை வெட்டி, செதுக்கி அவ்வளவு பெரிய எடையைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். அந்த கல்திட்டை நடுவில் கருங்கற்களால் அடுக்கப்பட்ட கிணறு போன்ற அமைப்பும், அதைச்சுற்றி சுமார் 20 கல்திட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாயகன்ற எரிமலையைப் போன்ற கற்களால் ஆன கிணறு அமைப்பு போன்று உள்ளது. இதைத்தான், மலைவாழ் மக்கள் குள்ள மனிதர்கள் வீடு, பாண்டியர்கள் வீடு என்கின்றனர்.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

போதமலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். இதன் வடக்கே ஜருகு மலையும், தெற்கே கொல்லி மலையும் அமைந்துள்ளது. போதமலை ஒரு சிறிய மலைத்தொடராகும். போதமலையில் பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான கற்திட்டைகள் காணப்படுகின்றன. இக்கற்திட்டைகள் வட்ட வடிவ இடுதுளைகளுடன் காணப்படுகின்றன.