நடுகல் வீரன்

சிற்பத்தின் பெயர் - நடுகல் வீரன்
சிற்பத்தின் அமைவிடம் - பெண்ணேசுவர மடம்
ஊர் - பெண்ணேசுவர மடம்
வட்டம் - பையூர் பற்று
மாவட்டம் - கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் - கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை - நடுகல்
விளக்கம் - அரசனின் வெற்றி வேண்டி போரில் ஈடுபட்டு இறந்த வீரன்
ஆக்கப் பொருள் - கருங்கல்
காலம் / ஆட்சியாளர் - கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் - முனைவர் கோ. சசிகலா
சுருக்கம் - போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை, மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து, அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு, அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி, அதை நட வேண்டிய இடத்தில் நட்டு, நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்பு செய்து வாழ்த்துவார்கள். கணவனோடு தீயில் விழுந்து உடன் கட்டையேறின மகளிர்க்கும் நடுகல் நடுவது உண்டு. இது மாஸ்திக்கல் (மாசதிக்கல்) என்று பெயர் பெறும். பெண்ணேசுவர மடத்தில் அமைந்துள்ள இந்த நடுகல் புடைப்புச் சிற்பத்தில் ஆண், பெண் இணை காட்டப்பட்டுள்ளது. வீரன் வாளை உயர்த்தியபடி நேராக நிற்கிறான். அருகில் பெண் ஒருவள் வலது கையில் மதுக்குடுவையை பிடித்தபடி உள்ளாள். இவள் அவ்வீரனின் இல்லாளாக இருக்க வேண்டும். வீரன் போரில் மாய்ந்த பின் அவளும் அவனும் இறந்திருக்க வேண்டும். கணவனுடன் பெண் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் போது அவளும் கணவனின் நடுகல்லில் இடம் பெறுகிறாள். பல்வேறு இடங்களில் இவ்வாறு இறந்த பெண்களுக்காக மாசதிக்கல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாசதிக்கல்லில் பெரும்பாலும் பெண் உருவம் வடிக்கப்படுவதில்லை. அவளின் வளையணிந்த கைகள் மட்டுமே காட்டப்படும். இச்சிற்பத்தில் பெண், கள் குடுவையை வீரனுக்காக கையில் வைத்துள்ளாள். கள் வீரர்களுக்கு வெறியூட்டுவதாக அமையும். மிக்க கள்ளுண்ட வீரர்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இம்மையிலே வீரன் உலக இன்பமாகிய பெண், கள் முதலியவற்றையும் அழியாப் புகழையும் தன் சிறந்த வீரத்தினால் பெறுகிறான் என்பது தொன்ம நம்பிக்கையாகும். இவ்வுலகில் வீரத்துடன் போரிட்டு இறந்து பட்ட வீரன் சொரக்கலோகம் புகும் போது அங்கு தேவமங்கையர் மதுக்குடுவையுடன் அவ்வீரனை வரவேற்பர் என்ற தொன்மத்தின் அடிப்படையில் பிற்கால நடுகல் சிற்பங்கள் வடிக்கபட்டன.
குறிப்புதவிகள் -

  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.