முகப்பு ஓவியங்கள் பாறை ஓவியங்கள் திருமலை
அமைவிடம் | - | பம்பரபாறை |
ஊர் | - | திருமலை |
வட்டம் | - | சிவகங்கை |
மாவட்டம் | - | சிவகங்கை |
ஓவியம் இருப்பிடம் | - | திருமலை - பம்பரபாறை |
ஓவியத்தின் பெயர் | - | விலங்கின் மேல் மனித உருவம், இரண்டு மனித உருவங்கள் நேருக்கு நேர் சந்தித்தல், கை கோர்த்த நிலையில் இரண்டு மனித உருவங்கள், மானை பிடிக்கும் நிலையில் மனித உருவம் |
ஓவியரின் பெயர் | - | |
ஓவியத்தின் வகை | - | பாறை ஓவியங்கள் |
வண்ணம் | - | சிவப்பு |
ஆட்சி ஆண்டு | - | புதிய கற்காலம், பெருங்கற்காலம் |
விளக்கம் | - | சிவகங்கையிலிருந்து 21 கி.மீ. மேற்கில் அமைந்துள்ள ஊர் திருமலை. இங்கிருக்கும் மலைக் குன்றொன்றில் தமிழ் – பிராமிக் கல்வெட்டுக்களும், சமணத் தடயங்களும், பிற்கால சிவன் கோயிலும், வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களும் ஒருங்கே காணப்படுகின்றன. இம்மலைக் குன்றில் சறுக்கும் பாறை (மேற்கு) வடக்குப் பாறை, தென் கிழக்குப் பாறை, தெற்குப்பாறை போன்ற நான்கு இடங்களில் பாறை ஓவியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் சிவப்பு வண்ணத்திலும் சில இடங்களில் வெள்ளை வண்ணத்திலும் உள்ளன. இந்த ஓவியங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள ஓவியம் ஒன்றில் இரண்டு மனித உருவங்கள் ஒரு கையை மேலே தூக்கியும் மறு கையை பக்கவாட்டில் நீட்டித்தும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள உருவங்களின் உடல் தோற்ற அமைப்பைக் கொண்டு இவை ஆண் மற்றும் பெண் உருவமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இவ்வோவியங்கள் அடர் சிவப்பு வண்ணத்தில் உள்ளது. உள்ளங்கை விரித்த நிலையில் உள்ளது. அதனருகே வளைந்த கோடுகள் மேலிருந்து கீழாக காட்டப்பட்டுள்ளது. அவை மலையில் இருந்து விழும் நீர் வீழ்ச்சியைக் காட்டும் விதமாக இருக்கின்றது. இங்குள்ள மற்றொரு ஓவியத்தில், மனித உருவம் ஒன்று குறைந்த எண்ணிகையிலான கோடுகளால் சிவப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை வடிவியல் அமைப்புடன் உள்ளது. இம் மனித உருவத்தின் வயிற்றுப் பகுதியிலிருந்து கயிறு போன்ற ஒன்று நீண்டுள்ளது. அது மறுமுனையில் வட்டமான ஒன்றோடு இணைக்கப்பட்டுள்ளது. இக்காட்சி எதனை விளக்குகின்றது என அறியப்பட முடியவில்லை. இதே பாறையின் மற்றொரு இடத்தில் மனித உருவம் ஒன்று விலங்கின் மேல் ஏறி வருவதாக உள்ளது. இதில் காட்டப்படும் விலங்கு குதிரையாக இருக்க வாய்ப்புண்டு. இரண்டு உருவங்களுமே சிவப்பு வண்ணத்தில் கோட்டோவியமாக காணப்படுகிறது. அதுபோல மற்றொறு இடத்தில் கை கோர்த்த நிலையில் இரண்டு மனித உருவங்கள் நடந்து வருவது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் தலைப்பகுதி குச்சியான கோடுகளால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருப்பது போல உள்ளது. இவ்வோவியங்களும் அடர் சிவப்பு வண்ணத்தில் முழுமையான கோட்டோவியமாக தீட்டப்பட்டுள்ளது. மூன்று மனித உருவங்கள் கை கோர்த்து நடனமாடும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. உருவங்கள் காட்டப்பட்ட விதத்தைக் கொண்டு இது வட்ட வடிவமான நடனமாக ( Circular dance) இருக்கலாம் என கருதப்படுகிறது. இங்குள்ள மூன்று உறுவங்களில் முதலாவது உருவத்தில் புறக்கோடுகளால் உருவம் வரைந்து பின் வண்ணம் நிரப்பப்பட்டுள்ளது, இரண்டாவது உருவத்தில் குரைந்த அளவில் உருவத்துக்குள் வண்ணம் நிரப்பப்பட்டுள்ளது, மூன்றாவது உருவம் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. ஓவியன் மூன்று உருவங்களையும் மூன்று விதமாக வரைய முற்பட்டது தெரிய வருகிறது. இம்மலையின் அடிப்புறத்தில் உள்ள பாறை ஒன்றில் மிக அலங்காரமான மனித உருவம் காணப்படுகிறது. நீள் வட்ட தலையில் நீண்ட மரக்கிளைப் போன்ற அலங்கார கோடுகளால் வரையப்பட்டுள்ளது. உடல் பகுதி தலை கீழ் இரண்டு முக்கோணங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. உடலின் உட்பகுதியில் குறுக்கு கோடுகளால் வெளியை நிரப்பும் வண்ணம் கோடுகள் உள்ளன. இடது கையில் கயிற்றின் ஒரு முனை உள்ளது. மற்றொரு முனை அடையாளம் தெரியாத விலங்கொன்றின் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. இம்மலையில் ஓவியங்கள் அதிக இடங்களில் வரையப்பட்டிருப்பினும் சில இடங்களில் கற்கீரல்கள் காணப்படுகின்றன. அவை உளி கொண்டு செதுக்கியது போல உள்ளதால் அவை இரும்பு காலத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்குள்ள ஓவியங்கள் காட்சியின் அடிப்படையிலும், வரைவு முறைகளிலும் புதிய கற்கால மற்றும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஓவியர்களால் வரைந்திருக்கக் கூடும் என கருதப்படுகின்றது. இங்கு வரையப்பட்ட பெரும்பாலான மனித உருவங்கள் ஒத்த தன்மை உடைய கோட்டோவியமாகவே தீட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மனிதர்களும், விலங்குகளும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான உறவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. |
ஒளிப்படம் எடுத்தவர் | - | க.த.காந்திராஜன் |
சுருக்கம் | - | |
குறிப்புதவிகள் | - |
|