விளக்கம் | - | புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோயில் வட்டத்தில் ஆத்மநாதசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் மாணிக்கவாசகரால் திருவாசகம் இங்கு தான் இயற்றப்பட்டது. அது போல கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊராகும். சிவன் கோயில் வெள்ளாற்றின் தென்கரையில் பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக இக்கோயிலில் உள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சாட்சர மண்டபத்தில் கிடைத்த செய்யுள் கல்வெட்டுகளில் மாணிக்கவாசகர் கோயில் கருவறையையும், கனகசபை மண்டபத்தையும் எழுப்பினார் என கூறப்பட்டுள்ளது. “திதிக்கும் சகாத்தமிங் கொன்றரை ஆயிரம் செல்லுறு நான்கு உதிக்கும் பிலவத்தில் பங்குனி மாதத்தில் ஒன்பதிற்குப் பதிக்கும் கனக சபை மண்ட பந்தனிற் பாக்கலெலாம் மதிக்கும் படிமுகித் தானெங்கள் மாணிக்க வாசகனே!“ மாணிக்கவாசகர் அருளால் 16-ஆம் நூற்றாண்டில் இம்மண்டபம் எழுந்தது என்பது பொருள். இக்கோயிலில் கனகசபை, சிற்சபை, தேவசபை, நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டபங்கள் உள்ளன. இதன் கூரைப் பகுதியில் ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான ஓவியங்கள் கால ஓட்டத்தில் சேதாரமாகி மங்கிய நிலையிலேயே உள்ளன. இவ்வோவியங்களில் திருஞான சம்பந்தர் மதுரை சென்று, சமணர்களோடு வாதிட்டு, பின் கழுமரம் ஏற்றிய சம்பவங்கள் வரை ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளும் வரையப்பட்டு அதற்கு உரிய விளக்கங்களுடன் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் வரைந்த முறை மற்றும் பயன்படுத்திய வண்ணங்களின் அடிப்படையில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் ஆட்சியில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அது போல மற்றொரு மண்டபத்தில் மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்று, சிவபெருமானுக்கு திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயில் கட்டிய நிகழ்வுகளும், அதன் பின் நரிகள் பரிகளான நிகழ்வுகளும் தொடர்ச்சியாக வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சிக்கும் கீழே அதற்குரிய விளக்கங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. | |
குறிப்புதவிகள் | - | - ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015.
- முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
- Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943.
- Sewell, R.J. A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961,
- Sivaramamurti, C. South Indian Paintings (New Delhi, National Museum, 1968),
- Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943.
- Krishnaswami, A. The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
- Natarajan B. The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
- Ramachandran. T.M. Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
- Sastri, K.A. Nilakanta, A History of South India (Madras, Oxford University Press, 1971).
- Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
|