முகப்பு ஓவியங்கள் சுவரோவியங்கள் கோனேரிராஜபுரம்
அமைவிடம் | - | கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு முன் திறந்த வெளி மண்டபத்தின் கூரைப்பகுதி, கிழக்கு மற்றும் வடக்கு சுவர்கள். |
ஊர் | - | கோனேரிராஜபுரம் |
வட்டம் | - | மயிலாடுதுறை |
மாவட்டம் | - | நாகப்பட்டினம் |
ஓவியம் இருப்பிடம் | - | உமா மகேஸ்வரன் கோயில், கோனேரிராஜபுரம் |
ஓவியத்தின் பெயர் | - | சைவப் புராணங்கள் மற்றும் சைவத் திருத்தலங்கள் |
ஓவியரின் பெயர் | - | |
ஓவியத்தின் வகை | - | சுவரோவியம் |
வண்ணம் | - | அல்ட்ராமரைன் நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு, கருப்பு மற்றும் நீல நிற பச்சை நிறம் |
ஆட்சி ஆண்டு | - | கி.பி.20-ஆம் நூற்றாண்டு |
விளக்கம் | - | கோனேரிராஜபுரம் எனும் அழகிய குக்கிராமம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருநாகேசுவரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு உமா மகேஸ்வரன் கோயில் எனும் பழமையான சைவக்கோயில் உள்ளது. இது தேவாரப் பாடல் பாடப் பெற்றத் தலம். இக்கோயில் முதலாம் ஆதித்த கரிகாலனால் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர் இராஜராஜன் மற்றும் விஜயநகர – நாயக்க மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு முன் திறந்த வெளி மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தின் கூரைப்பகுதி மற்றும் கிழக்கு, வடக்கு சுவர்கள் ஆகியவற்றில் ஓவியங்கள் காணப்படுகின்றது. இம் மண்டபத்தின் கூரைப்பகுதி கிரானைட் அடுக்குகளால் ஆனது அதன் மேல்புறத்தில் 2 முதல் 3 மி.மீ. வரை அடர்த்தியான சுண்ணாம்புடன் சேர்ந்த கலவை நன்றாக பூசப்பட்டுள்ளது. இப்பூச்சின் மேற்புறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களில் அலங்கார கூறுகள் தெய்வ உருவங்கள் மற்றும் புராண கதாபாத்திரங்கள் மற்றும் சமகால நிகழ்வுகளை தெளிவாக காட்சிப்படுத்துகிறது, மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள ஒரு ஓவியம் பழங்குடி மக்களின் வாழ்வினை சித்தரிக்கிறது. அது போல வடக்கு சுவரில் உள்ள ஓவியம் ஒன்று ஆங்கிலேய அதிகாரிகளை உள்ளூர் இசைக்கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் வரவேற்கும் காட்சியைச் சித்தரிக்கிறது. இவ்வோவியங்கள் யாவும் சுவர் காய்ந்த நிலையில் வரையப்படும் “டெம்பரா” எனும் முறையில் வரையப்பட்டுள்ளது. இங்கு அல்ட்ராமரைன் நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு, , பழுப்பு மற்றும் கருப்பு, நீல நிற பச்சை நிறம் சில ஒளிரும் பிரகாசத்தை வெளிப்படுத்தும் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில ஓவியங்களில் விளக்கங்கள் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன அவை தற்போதைய தமிழ் எழுத்தமைதியைக் கொண்டுள்ளது. இந்த ஓவியங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என்பதை அங்கு வடக்குச் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் சிப்பாயின் சித்தரிப்பு உணர்த்துகிறது. இம்மண்டபத்தின் கூரைப்பகுதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் தென்புறம் உள்ள ஓவியங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை அடையாளப்படுத்தியுள்ளனர். அதில் தற்புருஷ, அகோர, வாம, சத்யோ சதமூர்த்தி போன்ற நான்கு உருவங்கள் மட்டும் ஓவியங்களாக வரையப்பட்டுளது. அதைத் தொடர்ந்து ரிக், யசூர், சாம மற்றும் அதர்வன வேதங்களுக்கு உருவம் கொடுத்துள்ளனர். இக்குழுவிற்கருகே அகத்தியரும் காணப்படுகின்றார். மேலும், சனகாதி முனிவர்களுடன் தட்ஷிணாமூர்த்தி, கைலாயத்தில் தவக்கோலத்தில் முனிவர்கள், மரத்தடியில் தபசு பண்ணும் முனிவர், கிளியும் முனிவர்களும், இறைவனை தாங்கிச் செல்லும் வாகனங்கள், ரத உற்சவங்கள், புலி வேட்டை, முனிவர்கள் நீராடல், இறை உருவங்கள், பிற வேட்டைக் காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், கோயிலில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் காணப்படுகின்றன. உருவங்களைத் தவிர எஞ்சிய கூரைப் பகுதி முழுவதும் அலங்கார கூறுகளால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான ஓவியங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்குள்ள சுவர் ஒன்றில் பெரிய அளவில் வேடுவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தியுள்ளனர். அதில் வேடன் ஒருவன் வேட்டையாடிய மானை தோளில் தூக்கிக் கொண்டும், ஒரு கையில் மேளம் கொட்டி நடந்து வருவதாக உள்ளது. அவனுக்கருகே வேட்டுவச்சி தலையில் மண் குடத்துடன் ஒய்யாரமாக நடந்து வருகிறாள். இவர்களுடன் பறை மற்றும் கொம்பு ஊதும் இசை கலைஞர்களும் உடன் வருகின்றனர். இவர்களுடன் இவர்களது வேட்டை நாய்களும் காட்டப்பட்டுள்ளது. இது குறிஞ்சி மற்றும் முல்லை நில வேடர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. மற்றொறு சுவரில் சதிர் நடனக் குழுவினர் ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்கும் விதமாக ஆடிப் பாடுகின்றனர். இதில் இசைக் கலைஞர்கள் யாவரும் மரபான உடையுடன் காணப்படுகின்றனர். அவர்களுக்கு எதிர்புரமாக ஆங்கிலேய அதிகாரிகள் மிடுக்கான உடை மற்றும் ஆயுதங்களுடன் பூசை தட்டை வணங்குவது போல காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் யாவும் 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வரைந்ததாக கருதப்படுகின்றது. இவை இந்திய புராண, இதிகாசங்களை எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சியை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்திய கதை மரபை மேற்கத்திய ஓவிய நுணுக்கத்துடன் தமிழக ஓவியர்கள் முயற்சி செய்துள்ளனர். இவை இராஜா ரவிவர்மா போன்ற ஓவியர்களின் தாக்கத்துடன் காணப்படுகின்றது. |
ஒளிப்படம் எடுத்தவர் | - | க.த. காந்திராஜன் |
சுருக்கம் | - | இங்குள்ள மகாமண்டபத்தில் புராண கதைகளும், கோவில் நிகழ்வுகளும், அன்றைய காலகட்ட வரலாற்றுச் சம்பவங்களும் நேர்த்தியாக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டுள்ளது. மேற்கத்திய ஓவியத்தின் தாக்கத்தினால் உருவங்கள் இயற்கையான தோற்றத்தில் பல வண்ண பூச்சுக்களுடன் காட்டப்பட்டுள்ளது. |