குன்னக்குடி

அமைவிடம் - குன்னக்குடி
ஊர் - குன்னக்குடி
வட்டம் - திருப்பத்தூர்
மாவட்டம் - சிவகங்கை
மொழியும் எழுத்தும் - தமிழ் - பண்டையத் தமிழி (தமிழ்-பிராமி)
காலம் / ஆட்சியாளர் - ஆதன் சாத்தன்
வரலாற்றுஆண்டு் - கி.பி.3-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி - 26, Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
கல்வெட்டு மின்னுருவாக்கப்பட்டது / சேகரிக்கப்பட்டது - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

இக்கல்வெட்டு 1909 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. 1992ல் ஐ. மகாதேவன் உடன் சென்ற தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை குழுவினர் கல்வெட்டின் முதல் எழுத்தை அதன் மீது பூசிக்கட்டப்பட்டிருந்த சுண்ணாம்புக் காரையை உடைத்து அறிந்தனர். எழுத்துக்கள் தலைகீழாகவும் மேல் கீழாகவும் மாற்றி எழுதப்பட்டவை. கண்ணாடியில் பிம்பமாகத் தெளிவாக நேராகத் தெரியக் கூடியவை. இதன் காலம் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டாகும். காபி என்பதில் 'ப்' மெய்சேர்த்து ‘காப்பி’ என்று படிக்கலாம் காப்பி ஊரைச் சேர்ந்த ஆதன் சாத்தன் என்ற ஆட்பெயராக உள்ளது. சாத்தன் என்ற சொல்லில் ‘த்’ புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது. காப்பியம் என்பது ஒரு குடிப் பெயராக இருக்கவேண்டும். தொல்காப்பியர், காப்பியாற்றுக் காப்பியனார், காப்பியன் சேந்தனார் முதலிய புலவர்களது பெயர்கள் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியவையாகும். காப்பியக்குடி என்றொரு ஊர் இன்று சீர்காழி அருகில் உள்ளது. காப்பியக்குடி என்பதற்கு ஒத்த பெயரே 'காப்பிஊர்’ எனலாம்.

குறிப்புதவிகள் - I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை