தொண்டூர்

அமைவிடம் - தொண்டூர்
ஊர் - தொண்டூர்
வட்டம் - செஞ்சி
மாவட்டம் - விழுப்புரம்
மொழியும் எழுத்தும் - தமிழ் - பண்டையத் தமிழி (தமிழ்-பிராமி)
வரலாற்றுஆண்டு் - கி.பி.3-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
சுருக்கம் -

பஞ்சனார்படி குகைத்தளத்தின் வெளியே தரைப்பாறையில் இரு வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மிகவும் தேய்ந்து தெளிவில்லாமல் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டாகும். “(இ)ளங்காயிபன் ஏவ அகழ்ஊரறம் மோசி செயித அதிடானம்“ என்பது இதன் வாசகமாகும். தொடக்கத்தில் ‘இ’க்கான மூன்று புள்ளிகள் உள்ளது போல் தெரிகிறது. இறுதியில் மூன்று என்பது ஒன்றன்கீழ் ஒன்றான படுக்கைக் கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. இளங்காயிபன் பணித்தபடி (ஏவ) அகழுரினர் இந்த அறத்தைச் செய்தனர். இந்த புனித இருக்கை (அதிட்டானம்) மோசியால் செய்யப்பட்டது என இருசெய்திகளாகப் பொருள்தருகிறது. இறுதியில் உள்ள மூன்று கோடுகள் அங்குள்ள படுக்கைகளில் மூன்று படுக்கைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறதா என்பது தெரியவில்லை. 1 மற்றும் 12வது எழுத்துக்கள் நடன. காசிநாதனால் “ஸ’ என படிக்கப்பட்டன. 15ஆவது எழுத்தான 'ற' கல்வெட்டு வெட்டியவரால் பிழையாக வலம் இடமாக வெட்டப்பட்டுள்ளது மூன்றாவது எழுத்து‘ங்’ புள்ளியுடன் உள்ளது. அகழுர் என்பது அகழ் ஊர் என இக்கல்வெட்டில் உள்ளது. இன்று தொண்டூர் அருகில் அகலூர் என்றொரு ஊர் உள்ளது. அகழுரினர் ஒன்றாக இணைந்து இளங்காயிபன் என்பவர் பணிக்க அறம் செய்துள்ளனர் என்பது ஒரு நிறுவன அமைப்பினை உணர்த்தும். மோசி என்பது ஆட்பெயர். 'திருந்து மொழி மோசிபாடிய ஆயும் என்பது புறப்பாடல் வரி (புறம் 158).

குறிப்புதவிகள் - I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை