அரிட்டாபட்டி

அமைவிடம் - அரிட்டாபட்டி
ஊர் - அரிட்டாபட்டி
வட்டம் - மேலூர்
மாவட்டம் - மதுரை
மொழியும் எழுத்தும் - தமிழ் - பண்டையத் தமிழி (தமிழ்-பிராமி)
வரலாற்றுஆண்டு் - கி.மு.2-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு பதிக்கப்பெற்ற ஆவணம் - இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 264 -1978-79, Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
கல்வெட்டு மின்னுருவாக்கப்பட்டது / சேகரிக்கப்பட்டது - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த எளம்பேராதன் மகன் எமயவன் இந்தக் குகைத் தளத்தை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். கொடுபிதவன் என்பதில் 'ப்' ஒற்று சேர்த்து கொடுபிதவன் என்றும் கொள்ளலாம். இரண்டாவது கல்வெட்டில் இளம் பேராதன்- எளம் பேராதன், இமயவன்- எமயவன் என்று பேச்சு வழக்கில் ஏற்படும் 'இ’கரம் ‘எ’கரம் ஆகும் நிலையைக் காணமுடிகின்றது. இலஞ்சி என்னும் ஊரை இன்றைய குற்றாலத்திற்கு அருகில் உள்ள சிற்றூராக அடையாளம் காணலாம். மொழியியல் அடிப்படையிலும் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. இலஞ்சிய், முழஉகைய் என்னும் சொற்களின் இறுதியில் ‘ய’ என்னும் எழுத்து வருவது ‘இகர யகரம் இறுதி விரவும்’ என்னும் தொல்காப்பியர் கூற்றுக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது. முதற்கல்வெட்டில் முழாகை எனக் குறிப்பிடப்பட்ட கற்குகை, இவ்விரண்டாம் கல்வெட்டில் முழஉகை என எழுதப்பட்டுள்ளது. இதனால் இக்கல்வெட்டை முதற் கல்வெட்டைக் காட்டிலும் காலத்தில் முற்பட்டதாகவும் கருதலாம். இரண்டு கல்வெட்டுகளும் இக்குகையைச் செய்து கொடுத்த ஒரே செய்தியைத் தருகின்றன. இரண்டிலும் இடம்பெறும் நெல்வெளி, இலஞ்சி என்னும் ஊர்கள் தென்பாண்டி மண்டலத்து ஊர்களே. எனவே சங்ககாலப் பாண்டியர் குடியைச் சேர்ந்த தென்பாண்டி நாட்டுத் தலைவர்கள் இக்குகைத் தளத்தையும் கற்படுக்கைகளையும் அமைத்துக் கொடுத்தனர் எனக் கொள்ளலாம்.

குறிப்புதவிகள் - I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை