அழகன்குளம்-கோட்டைமேடு, புதுக்குடியிருப்பு

    அகழாய்விடத்தின் பெயர் - அழகன்குளம்-கோட்டைமேடு, புதுக்குடியிருப்பு
    ஊர் - அழகன்குளம்
    மாவட்டம் - இராமநாதபுரம்
    வகை - சங்ககால துறைமுகப் பட்டினம்
    காலம் - கி.மு.2-ஆம் நூற்றாண்டு
    அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் - 1986-87/1990-91/1993-94/1995-96/1996-97/1997-98
    அகழாய்வு தொல்பொருட்கள் - கருப்பு-சிவப்பு, சிவப்பு மற்றும் சாம்பல் நிற பானையோடுகள், வடக்கத்திய பளபளப்பான கருப்பு மட்கலன், ஆம்புரோ மதுக்குடுவை, அறுக்கப்பட்ட சங்கு வளைகள், சுடுமண் மணிகள், இரும்பு வாள், கத்தி, பாண்டியரின் சதுர வட
    அகழாய்வு மேற்கொண்ட நிறுவனம்/ நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
    விளக்கம் -

    அழகன்குளம் அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 1983-இலிருந்து ஆறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வூர் இராமநாதபுரத்தின் கிழக்கில் 24கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அங்கு கோட்டைமேடு மற்றும் புதுக்குடியிருப்பு என்னும் பகுதிகளில் 19 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வூர் சங்ககாலத்தில் துறைமுகப்பட்டினமாக விளங்கியுள்ளது. பாண்டியர்களின் இரண்டு துறைமுகப்பட்டினங்களான கொற்கை, சாலியூர் அல்லது மருங்கூர் பட்டினம் என்பதில் மருங்கூர்பட்டினம் அழகன்குளமாய் இருக்கலாம் என்று அகழாய்வு முடிவுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வகழாய்வில் நான்குவிதமான பண்பாட்டு காலங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய வரலாற்றுக்கால பண்பாடு, சங்ககாலப் பண்பாடு, பண்டைய இடைக்காலப் பண்பாடு ஆகிய பண்பாட்டினைச் சேர்ந்த தொல்பொருட்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. அரிட்டைன் மற்றும் ரௌலட்டட் பானையோடுகள் இங்கு கிடைத்த தொல்பொருட்களில் குறிப்பிடத்தக்கவை. இவை ரோம் மற்றும் இத்தாலியுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிகத் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. இங்கு கிடைத்துள்ள ரோமானியக் காசுகளில் முன்புறம் ரோமப்பேரசரின் தலைப்பகுதியும், பின்புறம் வெற்றி தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு காசில் பேரரசன் இரண்டாம் வேலன்டைன் (கி.பி.375) காலத்தில் வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது. சமுதஹ, குவிரஅன், குவிரன் முதலிய பெயர்கள் மற்றும் பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் கிடைத்துள்ளன. இவ்வகழாய்வில் கிடைத்துள்ள வடஇந்திய பளபளப்பான கருப்பு மட்கலன்கள் கங்கை நதிப் பகுதிக்கும் இத்துறைமுகத்திற்கும் இருந்த கடற்வணிகத் தொடர்பினை உறுதிப்படுத்துகிறது.

    ஒளிப்படம்எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
    சுருக்கம் -

    தமிழக அகழாய்வு இடங்களுள் அழகன்குளம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். வைகை ஆற்றங்கரையில் உள்ள இவ்வூர் கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இவ்வூர் பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமாக சங்க காலத்தில் விளங்கியது. மருங்கூர் பட்டினம் என்று சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் ஊர் இதுவேயாகும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆறு கால கட்டங்களில் இத்தொன்மை வாய்ந்த கடற்கரைப் பட்டினத்தை அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த சிவப்பு நிற பானையோடுகள் கிடைத்துள்ளன. மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ரௌலட்டட் மற்றும் ஆம்போரா பானையோடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் இத்துறைமுகப் பட்டினத்தின் கடற்வணிக மேம்பாட்டினை உய்த்துணர முடிகிறது.

    குறிப்புதவிகள் -
    1. B.Sasisekaran , S.Rajavel , ‘Adichanallur: A Prehistoric Mining Site’, Indian Journal of History of Science, 2010. 
    2. T.S.Subramanian, ‘Unearthing a great past’ Frontline, Vol.22, 2005. 
    3. Michel Danino, ‘Vedic Roots of Early Tamil Culture’, Saundaryashrih, Archaeological Studies in the New Millennium, 2008. 
    4. Kenneth A.R.Kennedy, ‘The physical anthropology of the megalith-builders of South India and Sri Lanka’, Australian National University Press, Canberra, 1975. 
    5. தி.ஸ்ரீ.ஸ்ரீதர், இ.ஆ.ப., ‘தமிழக அகழாய்வுகள்’, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2008.