அகழாய்விடத்தின் பெயர் | - | கீழடி |
ஊர் | - | கீழடி |
வட்டம் | - | சிலைமான் |
மாவட்டம் | - | சிவகங்கை |
வகை | - | வரலாற்றுக்காலம் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | - | 2015-2017 |
அகழாய்வு தொல்பொருட்கள் | - | கீழடியில் 10 க்கும் மேற்பட்ட செங்கல் கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள்கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது |
அகழாய்வு மேற்கொண்ட நிறுவனம்/ நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | இந்திய தொல்பொருள் ஆய்வு கழகம் 1861-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் மிக முக்கியமான பிரிவு அகழாய்வுப் பிரிவு என்று கூறலாம். சமீபத்தில் 2001-இல் தென்னிந்தியாவிற்கு என்று அகழாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கு முன் அமைக்கப்பட்ட 5 அகழாய்வுப் பிரிவுகளும் வட இந்தியாவில் அமைக்கப்பட்டவை. இதற்காகவே கடும் முயற்சியால் தென்னிந்தியாவில் ஒரு பிரிவு வேண்டும் என்று உருவாக்கினார்கள். இந்தப் பிரிவின் கீழ் தென்னிந்தியாவில் அகழாய்வு செய்யப்பட்ட தொல்லியல் களமே கீழடி. அகழாய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகை நதிக்கரைப் பகுதியானது 5 மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்விடங்களில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த முக்கியமான 22க்கும் மேற்பட்ட இடங்கள் ஆற்றங்கரையின் இருமருங்கிலும் 5 கி.மீ. உள்ள அளவில் கிடைக்கப்பெற்றவை. இவற்றில் ஒன்று தான் கீழடி. அல்லிநகரம் என்ற இடமும் மிகப் பெரிய வாழ்விடப் பகுதியாக அறியப்பட்டது. பொதுவாக ஆற்றங்கரை நாகரிகம் என்பதற்கு ஏற்ப வைகை நதிக்கரையின் தென்புறத்தில் அதிகளவான வாழ்விடப் பகுதி கிடைக்கப்பெற்றது. ஒரு நல்ல வாழ்விட பகுதியை அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கொள்கையினால் தேர்ந்தெடுக்கப்பட்டது தான் கீழடி. மதுரையின் வரலாற்றைப் பற்றி ஆராய வேண்டுமென்றால் கீழடி, சித்தர்நத்தம், மாரநாடு ஆகிய மதுரையின் மிக அருகில் உள்ள இந்த மூன்று நகரங்களை ஆராய்தல் வேண்டும். அவற்றில் விதிகளுக்குட்பட்ட வகையில் இருந்தது கீழடி மட்டுமே. கீழடி ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட இடமானது 80 ஏக்கர் அளவு கொண்டதாக இருந்தது. 31/2 கி.மீ. சுற்றளவு கொண்டது. மண்மேடு (Archeological mound) உயரம் 3 மீட்டர். இவ்வகையான உயரம் தமிழ் நாட்டில் அரியது. இவ்வாறு இயற்கையாய் அமையப்பெற்று பாதுகாப்பாக இருப்பதற்கான காரணம் அங்கு உள்ள தென்னந்தோப்பு. கிட்டதட்ட 40 வருடங்கள் இங்கு தென்னந் தோப்பு இருக்கின்றது. கீழடி மதுரையிலிருந்து தென்கிழக்காக 12 கி.மீ. தூரத்திலும் மற்றும் வைகை ஆற்றில் தென்பகுதியிலும் அமைந்துள்ளது. கீழடி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தது. ஆனால் மதுரை அருகில் இருக்கின்ற ஒரே வாழ்விட பகுதி என்பது கீழடி தான். ஏனைய பகுதிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. கீழடி மட்டுமே ஒரு முழுமையான மற்றும் திருப்திகரமான நிறைவை தரக்கூடிய வாழ்விட பகுதியாக அகழாய்வுக்கு ஏற்றபடியாக இருந்தது. கீழடியை சுற்றிலும் பல இடங்கள் அகழாய்வு செய்வதற்கான பகுதிகளாக இருக்கின்றன. கீழடி கிராமத்தில் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் பெயர் பள்ளிச்சந்தை திடல் என்பதாகும். இது கீழடி கிராமத்தில் இருந்து தென்கிழக்கே அமைந்துள்ளது. கீழடியை பற்றிய வரலாறு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து தான் கிடைக்கப்பெறுகின்றன. கீழடியில் மூன்று இடங்களில் தோண்டப்பட்டவை மொத்தம் 43 அகழிகள். கிடைக்கப்பெற்ற மண்ணடுக்கு மொத்தம் 2.80 மீட்டர். இது மேட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சாய்வான பகுதி. மேட்டின் உயரமான பகுதியில் கிடைக்கப்பெற்ற மண்ணடுக்கு மொத்தம் 4.5 மீட்டர். அதன் விரிவில் 3.7 மீட்டர் மண்ணடுக்குகள் கிடைத்தன. கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்தவை ஒரு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிடைப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்க ஒன்று. ஏனென்றால் இது ஒரு megalithic மட்பாண்டம், அவை வாழ்விட பகுதியில் கன்னி மண்ணிற்கு மேல் உள்ள அடுக்குகளில் கிடைத்தவை தான் ஒரு ஆதாரம். கீழ் அடுக்குகளில் பலவிதமான கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் எண்ணிக்கையில் அதிகமாக கிடைத்துள்ளன. ஆனால் இதனுடைய அறிவியல் பூர்வமான கால அளவை இதுவரை நிர்ணயிக்கவில்லை. ஆனால் கிடைத்துள்ள மட்பாண்டத்தில் உள்ள பிராமி எழுத்துக்களைக் கொண்டு இந்த பகுதியின் கால அளவை பொ.ஆ.மு.3 முதல் பொ.ஆ.பி.10 என்று கீழடியின் அகழாய்வில் அதன் பண்பாட்டுக்காலம் கணிக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்திற்குள் இந்த நகரம் இருந்து வளர்ந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு எதுவும் கிடைக்கவில்லை. சோழ நாணயங்கள் மேற்பரப்பில் கிடைத்தன. செம்பாலான முத்திரைக்காசுகள், பிராமி எழுத்துக்களுடன் கூடிய மட்பாண்டங்கள் கீழ் மண்ணடுக்கில் கிடைத்துள்ளன. இங்கு பலவிதமான கட்டடப்பிரிவுகள் கிடைத்துள்ளன. அவைகளில் செங்கற்சுவர், செவ்வக வடிவ அறை, செங்கல் தரைத்தளம் மற்றும் 36 cm, 34cm, 33 cm என்ற மூன்று அளவிலான கற்கள் கிடைத்துள்ளன. இதை ஒப்பிட்டு பார்க்கும் போது இது சங்க கால கட்டிடங்களுக்கு நிகரானது போல் உள்ளது. அது மட்டுமல்லாமல் முக்கியமாக கையால் செய்யப்பட்ட தரைத்தளம் மற்றும் கூரைகளின் ஓடுகள் கிடைத்துள்ளன. கட்டிடப்பகுதியில் குழிகள் அதிகம் இருக்கின்றன. அவை மரக் கொம்புகளை நட பயன்பட்டிருக்க வேண்டும். பெரிய கொம்புகள் நட்டு அதன் மீது ஒரு தாங்கி கொடுத்து கூரை அமைத்துள்ளனர். இவ்வாறாக தமிழ்நாட்டில் அகழாய்வில் அதிகமான கட்டிடங்கள் கீழடியில் தான் கிடைத்துள்ளன. தரைத்தள கட்டிட அமைப்புகள் தமிழ்நாட்டில் கிடைப்பது என்பது அரிது. ஆனால் கீழடியில் கிடைத்துள்ளது. மேலும் இங்கு 10 ½ மீட்டர் நீளமுள்ள தாழ்வாரம் கிடைத்துள்ளது தமிழ்நாட்டில் இதுவே முதன் முறை. இதற்கு இணையான மற்றொரு சுவர் உள்ளது. ஒரு தாழ்வாரத்தின் நடுவில் உறை கிணறு இருப்பது ஆராயத்தக்க ஒன்று. மேலும் இங்கு அறிய வகை கல்லினால் செய்யப்பட்ட மணிகளான கார்னீலியன், அகேட், சால்சிடனி, குவார்ட்ஸ், முத்து மற்றும் 800-க்கும் மேற்பட்ட கண்ணாடி மணிகள், செப்பு நாணயங்கள், சதுரம் மற்றும் வட்ட வடிவ காசுகள் மற்றும் சுடுமண் பொருட்களான உருவங்கள், மணிகள், சதுரங்கக் காய்கள், தக்கிலி, வட்டுகள், சக்கரங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள பொருட்கள் யாவும் முழுமையானவை. எந்த ஒரு பொருளையும் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இங்கு கிடைக்கவில்லை. முழுமையாக வடிவமைக்கப்பட்ட பொருளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக நகரமக்கள் பொருட்களை வாங்கி பயன்படுத்துவர்களாகத் தான் இருப்பார்கள். இதனால் கீழடியில் வாழ்ந்தவர்கள் அவ்வகையானவர்கள் என்பது தெரிய வருகிறது. அடுத்து ஆய்வில் கிடைத்த முக்கியமானவை என்றால் பானை ஓடுகள். தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் தான் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு. கிட்டதட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 32 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் ‘திசன்’, ‘உதிரன்’, ‘ஆதன்’, ‘இயனன்’, ‘சுராமா’ என்ற எழுத்துக்கள் எழுதியிருந்தன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற எழுத்துக்கள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தபட்டு உள்ளன. இவ்வகை எழுத்துக்கள் மதுரையை சுற்றி உள்ள சமண கோயில்களில் காணப்பட்ட எழுத்துக்களை ஒத்து இந்த எழுத்துக்கள் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் 3-ஆம் நூற்றாண்டு என்னும் கால அளவை உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தவிர (graffiti) 350 குறியீடுகள் கிடைத்துள்ளன. அதில் மிக முக்கியமானதாக சொல்ல வேண்டுமென்றால் மீன் சின்னம். பாண்டிய பிராந்தியம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு மீன் சின்னங்கள் அதிகம் கிடைத்துள்ளன. மீன், படகு, சுவஸ்திக், சூரியன், அம்பு போன்ற சின்னங்கள் கிடைத்துள்ளன. மேலும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு சிவப்பு பானைகள் என்பது வைகை நதிகரையில் மட்டும் தான் கிடைக்கும். வேறு எங்கும் இருக்காது. இதற்கான முதல் ஆதாரம் T.கல்லுப்பட்டி அகழாய்வு எனலாம். 1971-ல் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் T.கல்லுப்பட்டி–யில் அகழாய்வு மேற்கொண்டார்கள். அப்போது தான் இவ்வகை பானைகளை கண்டுப்பிடித்தார்கள். |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
சுருக்கம் | - | மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டம் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேசுவரம் - அழகன்குளம் துறைமுகத்துக்குச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ள பள்ளிச்சந்தைத் திடல் என்ற பெயரிலான மணல்மேட்டிலேயே இவ்வகழாய்வு தொடங்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றி நிலத்தை உழும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் அவ்வளவாக பாதிப்புக்குள்ளாகாது இருந்த இம்மேடு ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக இக்களம் கணிக்கப்பட்டுள்ளது. கரிமத் தேதியிடல் முறை மூலம் இன்னும் இது துல்லியமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான "பெருமணலூர்" இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட செங்கல் கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள்கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. உறை கிணறுகள் இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களில் குறிப்பிடத்தக்கவையாகும். ரோமானியர்களின் ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் கிடைத்துள்ளன. 'ஆதன்', 'உதிரன்', 'திசன்' போன்ற பெயர்கள் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி, இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள், வட்டுக்கள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்கிளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது. பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் செங்கல் வீடுகளும், வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது. |
குறிப்புதவிகள் | - |
|