முகப்பு அகழாய்வுகள் வரலாற்றுக்காலம் அத்திரம்பாக்கம்
அகழாய்விடத்தின் பெயர் | - | அத்திரம்பாக்கம் |
ஊர் | - | அத்திரம்பாக்கம் |
வட்டம் | - | திருவள்ளூர் |
மாவட்டம் | - | திருவள்ளூர் |
வகை | - | 5 இலட்சம் ஆண்டுகள் |
காலம் | - | தொல் பழங்காலம் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | - | 1964-65 |
அகழாய்வு தொல்பொருட்கள் | - | கற்கருவிகள், கைக்கோடரிகள், வெட்டும் கருவிகள், சுரண்டிகள், கிழிப்பான்கள் |
அகழாய்வு மேற்கொண்ட நிறுவனம்/ நபர் | - | இந்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | அத்திரம்பாக்கத்தில் கற்காலக்கருவிகள் உள்ள ஆற்று அடுக்குகளின் தன்மையை அறிய இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஆய்வுப்பிரிவைச் (Prehistory Branch) சேர்ந்த K.D. பானர்ஜி என்பார் அகழாய்வு ஒன்றினை 1964-65 ஆம் ஆண்டில் மேற்கொண்டார். அத்திரம்பாக்கம் ஓடையின், மேடான பகுதியில் அகழாய்வுகள் மேற்கொண்டதில் இங்கு 4 மண்ணடுக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதல்மண்ணடுக்கு : ஸ்ரீபெரும்புதூர் மென்கற்பலகை (Sriperumpudur Shale) என்ற வகையைச் சேர்ந்த முதல் மண்ணடுக்கில், அச்சூலியன் வகையைச் சேர்ந்த கைக்கோடரிகளும் வெட்டுக்கற்கருவிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்பட்டன. இந்த மண்ணடுக்கு களி மண்ணால் மூடப்பட்டிருந்தது. இரண்டாவது மண்ணடுக்கு: களிமண் மற்றும் சரளைகளோடு உடைய இந்த மண்ணடுக்கில் அச்சூலியன் பிற்பகுதி வகையைச் சார்ந்த கூர்முனைகள், இருமுகக்கருவிகள், செதுக்குக்கருவிகள் (Scrapers) போன்றவை காணப்பட்டன. மூன்றாவது மண்ணடுக்கு: பழுப்பு நிறமுடைய மண் கலந்த செம்மண் சரளைக்கற்களுடன் இவ்வடுக்கு காணப்பட்டது. இதில் கற்கருவிகள் கிடைக்கவில்லை. நான்காவது மண்ணடுக்கு: குழியின் மேலிருந்த இம்மண்ணடுக்கில் மிகச்சிறிய அளவிலான கற்கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இரு பக்க முனைக் கற்கருவிகள், அம்புமுனைக் கற்கருவிகள் இவற்றுள் அடங்கும். அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ள அச்சூலியன் வகை கற்கருவிகளின் அடிப்படையில் இவ்வூரில் ஏறக்குறைய 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பழங்கற்கால மனிதன் வாழ்ந்துள்ளான் என்பதை அறிய முடிகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பை ஆய்வு செய்த புஸ்க் (Busk) மற்றும் தேவோகைண்ட் (Davokind) என்பவர்கள் இப்புதைபடிவம் மனித கால் எலும்புப்பகுதி என உறுதியுடன் கூறினர். இது இங்கு நாடோடியாகத் திரிந்த பழங்கற்கால மனிதனுடையதே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | சர்மா ஹெரிடேஜ் |
சுருக்கம் | - | திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்தில் திருவள்ளூர் – சத்தியவேடு சாலையில் சென்னையிலிருந்து 56 கி.மீ. தொலைவில் அத்திரம்பாக்கம் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்கில் கோர்த்தலையாறு (குசஸ்தலையாறு) என்னும் ஆறு உள்ளது. இதன் வடக்கில் அலிக்கூர் – சத்தியவேடு குன்றுகளும் ஊரைச்சுற்றி காடுகளும் உள்ளன. அத்திரம்பாக்கம், ஆற்றம்பாக்கம், ஆட்ரம்பாக்கம் என பல்வேறு பெயர்களால் கூறப்படுகின்ற இவ்வூர், ஆற்றுக்குப் பக்கத்தில் உள்ளதால் இப்பெயரைப் பெற்றது. இம்மாற்றத்தைக் காட்டும் வகையில் அத்திரம்பாக்கம் ஆற்றுப்படுகையில் ஆற்றடுக்குகள் காணப்படுகின்றன. ஆற்று நீரோடு அடித்து வரப்படும் கூழாங்கற்கள், கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் ஆகியவற்றுடன் இவ்வூரில் 4 ஆற்றடுக்குகள் காணப்படுகின்றன. இவை முறையே 100, 60, 20, 8 அடி உயரங்களைக் கொண்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகளின் காலத்தை அறிவதற்கு இந்த 4 ஆற்றடுக்குகளும் பெரிதும் உதவி புரிகின்றன எனத் தொல்லியல்அறிஞர் V.D. கிருஷ்ணசாமி கருதுகின்றார். இராபர்ட் புரூஸ்புட் என்னும் நிலப்பொதியியல் அறிஞர் அத்திரம்பாக்கத்தில் பல பழங்கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். இவற்றுடன் மனிதனின் கால் எலும்பின் புதைபடிவத்தையும் இங்கு அவர் கண்டெடுத்தார். இவருக்குப்பின் இவ்வூரில் V.D. கிருஷ்ணசாமி, பேட்டர்சன், H.D. சங்காலியா போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு அத்திரம்பாக்கம் பழங்கற்காலக் கருவிகள் செய்யப்பட்ட தொழிற்கூடமாக விளங்கியதைத் தெளிவுறுத்தினர். இப்பழங்கற்காலக் கருவிகள் அவற்றின் அமைப்பிலும் வேலைப்பாட்டுத்திறன் அடிப்படையிலும் முதற்பழங்கற்காலம், இடைப்பழங்கற்காலம், கடைப்பழங்கற்காலம் என மூன்று காலங்களைச் சேர்ந்ததாகும் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வூரில் கிடைக்கின்ற கைக்கோடரிகள் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்ற பழங்கற்கால கைக்கோடரிகளை ஒத்தவை. இவை 'சென்னைக்கைக்கோடரி' (Madras Hand Axe) என்றே அறிஞர்களால் பெயரிடப்பட்டன. இக்கோடரிகள் உலகப் புகழ்பெற்றவை. |
குறிப்புதவிகள் | - | 1. Shanti Pappu, Yanni Gunnell, Maurice Taieb and Kumar Akhilesh, Preliminary Report on Excavations at the Paleolithic Site of Attirampakkam, Tamil Nadu (1999-2004), 2. Shanti Pappu, Yanni Gunnell, Kumar Akhilesh, Régis Braucher, Maurice Taieb, François Demory and Nicolas Thouveny, Early Pleistocene Presence of Acheulian Hominins in South India , Science 331, 1596-1599, 2011. DOI: 10.1126/science.1200183 3. FOOTE, R.B. 1866.On the occurrence of stone implements in lateritic formations in various parts of the Madras and North Arcot districts. Madras Journal of Literature and Science, 3rd.series (II):1-35. 4. I.A.R.: INDIAN ARCHAEOLOGY. A REVIEW. 1964-65:20-22 5. KRISHNASWAMI, V.D. 1938a. Environmental and cultural changes of Prehistoric man near Madras. Journal of the Madras Geographic Association 13:58-90. 6.PAPPU, S. 2001. A re-examination of the Palaeolithic archaeological record of northern Tamil Nadu, south India. Oxford: BAR International Series 1003. |