சங்ககாலத்திற்குப் பின்னர் கி.பி. 850-இல் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசை மறுமலர்ச்சி பெறச் செய்தான். அவனுக்குப் பின் ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன் முதலிய சோழ மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் காலத்திய காசுகள் இது வரை கிடைக்கவில்லை. சோழப் பேரரசர்களில் உத்தம சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகள் தான் இதுவரையில் கிடைத்துள்ள காசுகளில் பழமையானவையாகும். அக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களாலானவை. அவற்றில் மூன்று வகைக் காசுகள் உள்ளன. முதல் வகைக் காசின் முன்புறத்தில் புலி, இரு மீன்கள், வில் ஆகிய மூன்று இலச்சினைகளையும் பின்புறத்தில் உத்தம சோழன் என்ற நாகரி எழுத்துக்கள...
சங்ககாலத்திற்குப் பின்னர் கி.பி. 850-இல் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசை மறுமலர்ச்சி பெறச் செய்தான். அவனுக்குப் பின் ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன் முதலிய சோழ மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் காலத்திய காசுகள் இது வரை கிடைக்கவில்லை. சோழப் பேரரசர்களில் உத்தம சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகள் தான் இதுவரையில் கிடைத்துள்ள காசுகளில் பழமையானவையாகும். அக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களாலானவை. அவற்றில் மூன்று வகைக் காசுகள் உள்ளன. முதல் வகைக் காசின் முன்புறத்தில் புலி, இரு மீன்கள், வில் ஆகிய மூன்று இலச்சினைகளையும் பின்புறத்தில் உத்தம சோழன் என்ற நாகரி எழுத்துக்களையும் காண்கிறோம். இக்காசுகளே பெருவாரியாகக் கிடைத்துள்ளன. இரண்டாம் வகை புலியும் ஒரு மீனும் உள்ள காசு. இதன் ஒரத்தில் 'மதுராந்தகன்’ என்ற தமிழும், கிரந்தமும் கலந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. மூன்றாம் வகைக் காசுகளில் இருபுறமும் புலியும் ஒரு மீனும், சுற்றிலும் 'உத்தம சோழன்' என்ற எழுத்துக்களும் காணப்படுகின்றன.
இராஜராஜன் காலத்தில் முன்புறம் புலி, இரு மீன்கள், வில் ஆகிய மூன்றும், அதன் கீழ் "ஸ்ரீராஜராஜ சோழ” என்ற நாகரி எழுத்துக்களும் உள்ளன. பின் புறமும் அதே சின்னங்களும், எழுத்துக்களும் உள்ளன. அக்காலத்தில் அச்சிடப்பட்ட மற்றொரு வகை காசில் ஒரு புறத்தில் ஒரு மனிதனுடைய நின்ற உருவமும் மறுபுறம் அமர்ந்த உருவமும் காணப்படுகின்றன. அமர்ந்த மனிதனின் கையின் கீழ் ஸ்ரீராஜராஜன் என்ற நாகரி எழுத் துக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்தக் காசுகள் ஆயிரக்கணக்கில் இன்றும் கிடைக்கின்றன.
இராஜராஜன் மற்றொரு சிறப்பையும் செய்திருக்கிறான் தான் வெளியிட்ட காசுகளில் ஒருபுறம் அமர்ந்த மனித உருவமும் ஸ்ரீராஜராஜ என்று நாகரி எழுத்தும் பொறித்தான். இதைப் பொதுவாக வைத்துக்கொண்டான். பின்புறம் நின்ற மனித உருவம். அவன் கையின் கீழே சோழ நாட்டில் வழங்கிய காசில் புலியைப் பொறித்தான். பாண்டி நாட்டில் வழங்கிய காசில் மீனைப் பொறித்தான். கேரளத்தில் வழங்கிய காசுகளில் திருவடிகளைப் பொறித்தான். இவ்வாறு தான் ஜெயித்த அந்தந்த நாட்டுக்குரிய சின்னங்களைப் பொறித்து வெளியிட்ட பெருமை இராஜராஜ சோழனையே சாரும். ராஜேந்திர சோழன் காலத்திய காசுகளில் புலி, இரு மீன்கள், வில் மூன்றும் முன்னும் பின்னும் உள்ளன. கீழே கங்கைகொண்ட சோழன் என்ற நாகரி எழுத்துக்கள் உள்ளன. சில காசுகளில் ஸ்ரீராஜேந்திர சோழ என்ற நாகரி எழுத்துக்கள் காணப்படுகின்றன.
ஆந்திர பிரதேசத்தில் தவளேச்சுரம் என்ற இடத்தில் பல தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. அவற்றின் நடுவில் புலி, மீன், வில் சின்னங்களும், சுற்றிலும் கங்கைகொண்ட சோழன் என்ற கிரந்த எழுத்துக்களும் உள்ளன. பின்புறம் குழிவாக எவ்வகை உருவமுமின்றி உள்ளது. இதே போன்று மலைநாடு கொண்ட சோழன் என்ற எழுத்துக்கள் கொண்ட காசுகளும் கிடைத்துள்ளன.
மன்னர் குதிரை மீதேறிச் செல்லும் உருவம் பொறித்த சோழர் காசுகளும் கிடைத்துள்ளன. இவை இராஜாதிராஜன் காலக்காசுகள் எனக் கருதப்படுகின்றன. குழலூதும் பிள்ளையாக, கண்ணனின் உருவம் பொறித்த காசுகளும் அக்காலத்தவையே. தமிழகத்தில் இராஜராஜன் பெயர் பொறித்த காசுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. சோழர்களின் கல்வெட்டுக்களில் மதுராந்தகன் மாடை, ராஜராஜன் மாடை என்று காசுகளின் பெயர்கள் காணப்படுகின்றன. மாடை என்றால் பொற்காசு என்று பொருள்.
குலோத்துங்கனுடைய காசுகளில் உள்ள “சுங்” என்ற சொல் சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பட்டத்தைக் குறிக்கிறது.