விஜயநகரர் காசு
விஜயநகர மன்னர்கள் வெளியிட்ட காசுகள் பல சின்னங்களைத் தாங்கி விளங்குகின்றன. அனேகமாக விஜயநகர வழியில் வந்த எல்லா அரசர்களும் காசுகளை வெளியிட்டிருக்கிறார்கள். ஹரிஹரர், தேவராயர் இருவராலும் வெளியிடப்பட்ட தங்கக் காசுகளில் உமா மஹேஸ்வரர் உருவம் காணப்படுகிறது. புக்கர், தேவராயர் இருவராலும் வெளியிடப்பட்ட காசுகளில் திருமால் பிராட்டியர்களுடன் விளங்குவதைக் காணலாம். அச்சுதராயரின் காசுகளில் இரண்டு தலைகளைக் கொண்ட கண்டபேருண்டப் பறவை, தன் அலகுகளால் யானைகளைக் கொத்தி நிற்பதைக் காணலாம். சில காசுகளில் பன்றியையும், சிலவற்றில் கருடன், நடமாடும் கண்ணன் முதலியனவும் காணப்படுகின்றன.
&nb...

விஜயநகர மன்னர்கள் காலத்தில் 'ராம உங்கா' என்று அழைக்கப்படும் தங்க அச்சுக்கள் ஏராளமாக வெளியிடப்பட்டன. இவற்றில் ஒருபுறம் ராமரும் சீதையும் அமர்ந்திருப்பதையும், மறுபுறம் அனுமன் நிற்பதையும், நாகரி எழுத்துக்களையும் காணலாம். இவை வழிபாட்டுக்கு ஏற்பட்டவை என்று கருதப்படுகிறது.
முதன் முதலில் விஜயநகரக் காசுகளில் கன்னட எழுத்துக்களில் அரசனின் பெயர் காண்கிறோம். பின்னர் நாகரி எழுத்துக்களிலும் உள்ளன.
தஞ்சை நாயக்கர் காசு
1530-ல் விஜயநகர அரசர் அச்சுததேவராயர், தன் மைத்துணி மூர்த்தி அம்மாள் என்பவளை செவ்வப்பநாயக்கர் என்பருக்கு மணம் செய்து கொடுத்தார். அவளுக்கு சீதனமாகத் தஞ்சாவூர் சீமையை செவ்வப்பனுக்குக் கொடுத்தார். அன்றிலிருந்து தஞ்சாவூர் நாயக்கராட்சி ஏற்பட்டது. செவ்வப்பர், அச்சுதப்ப நாயக்கர், விஜயரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என்ற நான்கு நாயக்கர்கள் தஞ்சையை ஆண்டனர். செவ்வப்பர் முதலில் கிருஷ்ண தேவராயரின் கீழ் இருந்தார். திருவண்ணாமலையில் உயர்ந்த கோபுரத்தை எடுத்தவர் இவர். இவர் ஒரு காசு வெளியிட்டிருக்கிறார். அதில் ஒருபுறம் சங்கு உள்ளது. மறுபுறம் “சவப்ப“ என்று நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. விஜயரகுநாத நாயக்கர் வெளியிட்ட காசும் உள்ளது. அதில் ஒருபுறம் ரகுநாத நாயக்கரின் உருவம் உள்ளது. மறுபுறம் இராமர், இலட்சுமணர் ஆகிய உருவங்கள் உள்ளன. ரகுநாத நாயக்கர் சிறந்த ராமபக்தன். கும்பகோணத்தில் ராமர் கோயிலைக் கட்டியவர் இவரே. அக் கோயிலில் ரகுநாத நாயக்கரின் சிற்பம் அமைந்துள்ளது. அதே உருவம் போல் காசிலும் காணப்படுகின்றது.
மதுரை நாயக்கர் காசு
1529-ல் மதுரை நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. கிருஷ்ணதேவராயர் விஸ்வநாத நாயக்கர் என்பவரை மதுரைப் பகுதியை ஆள அமர்த்தினார். அதன்பிறகு 1740 வரை அவர்கள் ஆட்சியிருந்தது. மதுரை நாயக்கர்கள் பாண்டி நாட்டை ஆண்டதால் தங்களைப் ‘பாண்டியர்' என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் தங்களது காசுகளில் முதலில் பாண்டியர் இலச்சினையான இரு மீன்களே பொறித்தனர். விஸ்வநாத நாயக்கர் வெளியிட்ட காசுகளில் ஒருபுறம் நின்ற மனித உருவம் இருக்கிறது. பின்புறம் இரண்டு மீன்களும் நடுவில் செண்டும் உள்ளன. அதைச் சுற்றி விஸ்வநாதன் என்று தமிழில் எழுதியிருக்கிறது. வீரப்ப நாயக்கர் என்பவர் 1550-1592 ? வரை ஆண்டவர் அவர் காலத்தில் மதுரைக் கோயிலில் பல கட்டிடங்கள் எடுக்கப்பட்டன. ஆயிரக் கால் மண்டபம் எடுத்தது அவர்தான். அவரது காசுகளில் ஒருபுறம் நின்ற மனித உருவம், பின்புறம் ஒரு மாடு நிற்கிறது. அதன் மேலே சந்திரன். மாட்டின் முன் ‘வீ’ என்று நாகரியில் இருக்கிறது. ஒருவகைக் காசில் நின்ற மாடும், பின்புறம் கோடுகளுக்கிடையில் ‘தி’ என்ற எழுத்தும் உள்ளன. இது திருமலை நாயக்கர் வெளியிட்டதாயிருக்கலாம். ஒருபுறம் லிங்கம், மீனாட்சி அம்மன் முதலிய உருவங்கள் பொறித்த காசுகளும் இருக்கின்றன.