ஆங்கிலேயர்
இங்கிலீசுகாரர்கள் கி.பி. 1600-ல் தமிழ் நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்தார்கள். சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி இங்கிலீசு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்தார்கள். தங்களது வியாபாரத்துக்காக இவர்கள் பல காசுகள் வெளியிட்டார்கள். விஜயநகர அரசர்களின் தங்கக் காசுக்கு அப்பொழுது ‘வராகன்' என்று பெயர். அதனால் இங்கிலீசு தங்கக் காசுகளுக்கும் ‘வராகன்' என்று பெயர். இந்துக் கோயில்களை இவர்கள் பகோடா என்று அழைப்பார்கள். அதனால் வராகன் காசுகளை 'பகோடா' என்றும் குறித்தார்கள். இதில் இந்து தெய்வங்களின் உருவங்கள் இருக்கும். இவற்றில் ஒரு வகைக் காசுகளில் நக்ஷத்திரக்குறி இருக்கும். அதை (Star Pagoda) நக்ஷத்திர பகோடா என்று அழைத்தார்கள். இதுதான் முதலில் இங்கிலீசுகாரர்கள் பயன்படுத்திய முக்கிய காசு. இது கும்பினிவராஹன் அல்லது புள்ளிவராஹன் என்று பெயர் பெற்றது. வெள்ளியில் இவர்கள் வெளியிட்ட காசுகளுக்கு ரூபாய் என்று பெயர். ஒரு தங்க வராகனுக்கு 3 1/2 வெள்ளி ரூபாய் இவர்கள் செம்பில் 40 காசு, 20 காசு, 10 காசு, 5 காசு, 2 1/2 காசு என்றெல்லாம் வெளியிட்டார்கள். முதலில் பம்பாயில் வேறு வகை, வங்காளத்தில் வேறு வகை, தமிழ் நாட்டில் வேறு காசுகள் புழக்கத்திலிருந்தன. அதனால் 1835-ல் இந்தியா முழுவதும் ஒரே வகைக் காசு செல்லத்தக்கவாறு தங்க வராகன் வெளியிடுவதை நிறுத்தி வெள்ளி ரூபாய் மட்டும் வெளியிட்டார்கள். சென்னையில் காசு வெளியிட்ட இடம் தான் தங்கச்சாலை என்று பெயர் பெற்றது. அதை (Mint) ‘மின்ட்’ என்பார்கள்.
ஹாலந்து
ஹாலந்து (டச்சு)க்காரர்கள் கி.பி.17-ஆம் நூற்றாண்டில், கிழக்கிந்தியக் கரையில் நாகப்பட்டினம், புழற்காடு முதலிய இடங்களில் வாணிக நிலையங்களை அமைத்திருந்தனர். “டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி” என்பது அவற்றின் பெயராய் இருந்தது. ஆங்கிலேயரின் வெற்றியால் டச்சுக்காரர்கள் அதிக செல்வாக்கைப் பெறவியலவில்லை. அவர்கள் வெளியிட்டுள்ள பல காசுகள் அவர்களுடைய பகுதியில் செலாவணிக்காக அச்சிடப்பட்டவை. தமிழகத்தின் பல பகுதிகளில் அவை இன்றும் கிடைப்பதைக் காணலாம். அவற்றின் முன்புறம் பெரும்பாலும் (V.O.C) வி.ஒ.சி என்ற ஆங்கில எழுத்துக்கள் காணப்படும். இது அவர்களுடைய கம்பெனியின் பெயரைக் குறிக்கும், பின்புறம் டச்சு இலச்சினைகளான இரண்டு சிங்கங்கள் பல நிலைகளில் இருப்பதைக் காணலாம். இவற்றை ‘நாகூர் சல்லிகள்’ என்றும் குறிப்பர். இது போன்று அரைச் சல்லிகளையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
டச்சுக்காரர்களுடைய புழற்காடு (Pulicut) நிலையம் அச்சிட்ட காசுகளில் “பி” (P) என்ற ஆங்கில எழுத்தும், நாகப்பட்டினத்தில் அச்சிட்ட காசுகளில் “என்” (N) என்ற எழுத்தும் காணப்படும்.
ஹாலந்துக்காரர்கள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகளை வெளியிட்டனர். விஜயநகரக் காசுகளைப் பின்பற்றி தங்கக் காசுகளில் திருமாலின் உருவையும் இவர்கள் பொறித்துள்ளது அறிந்து மகிழத்தக்கது.
டேனிஷ்
தஞ்சையை ஆண்ட நாயக்கப் பெருமன்னர் விஜய ரகுநாத நாயக்கர் கி.பி. 1620-ல் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் தம் நாட்டில் வாணிகம் செய்ய அனுமதி அளித்தார். அந்த கம்பெனி தரங்கம்பாடியில் ஒரு கோட்டை கட்டிக்கொண்டு வியாபாரம் செய்து வந்தது. அப்போது டேனிஷ் நாட்டை ஆண்ட அரசர் நான்காம் கிறிஸ்டியன் என்பவர். டேனிஷ் அரசர்கள் கிறிஸ்டியன் என்றும் "பிரடிரிக்" என்றும் மாற்றி மாற்றி பெயர் வைத்துக் கொண்டனர். அவர்கள் தமிழ் நாட்டில் வாணிகத்துக்காகப் பல காசுகளை வெளியிட்டிருக்கிருர்கள். அவர்கள் காசுகளில் C4, C5, C6, F3, F4 என்ற எழுத்துக்கள் இருக்கும் C4 என்றால் கிறிஸ்டியன் 4 என்றும் F3 என்றால் பிரடிரிக் 3 என்றும் பொருள். இவர்கள், தரங்கம்பாடியில் ‘டேன்ஸ் பொர்க்’ என்ற கோட்டையைக் கட்டினார்கள். ஆதலால் அக்கோட்டையின் உருவத்தை தங்கள் காசுகளில் பொறித்ததோடு ‘டேன்ஸ்பொர்க்’ என்ற பெயர் பொறித்தும் DANSBORG காசு வெளியிட்டிருக்கிறார்கள். இதை சுருக்கி D.B. அல்லது T.B. என்றும் வெளியிட்டிருக்கிறார்கள். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்று குறுக்கி ‘DOC’ என்ற எழுத்து பொறித்த காசுகளும் வெளியிட்டிருக்கிறார்கள். பத்துகாசுகள், நாலு காசுகள், இரண்டு காசுகள் என்ற வகையில் காசுகளே வெளியிட்டிருக்கிறார்கள்.
பிரெஞ்சு
ஆங்கிலேயர்களைப் போலப் பிரெஞ்சுக்காரர்களும் இந்தியாவில் வாணிக நோக்குடன் கம்பெனிகளை நிறுவினர். அவர்களுடைய முக்கியத் தலமாக பாண்டிச்சேரி திகழ்ந்தது. ‘வராகன்' என்ற தங்கக் காசு அக்காலத்தில் வழக்கிலிருந்தது. இதில் திருமால், பூமகளுடனும், திருமகளுடனும் நிற்கும் உருவம் இருக்கும். பிரெஞ்சுக்காரர்கள் முதலில் இக்காசுகளை அச்சிட்டனர். கிறிஸ்துவப் பாதிரிமார்கள் அதை விரும்பவில்லை. எனினும் அதனால் ஏற்படும் லாபத்தைக் கருதி பாரிஸ் நகரிலிருந்த கம்பெனியின் தலைமையகம் அதை அனுமதித்தது. அதன் பின்னர் தாங்கள் பிடித்த இடங்களின் செலாவணிக்காக அக்காசுகளை அச்சடித்து பரப்பினர். பிரெஞ்சுக்காரர்கள் வெளியிட்ட காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு முதலிய மூன்று உலோகங்களாலானவை. தங்க நாணயத்தைப் 'பகோடா' என்றும், வெள்ளி நாணயத்தைப் ‘பணம்’ , என்றும், செம்பு நாணயத்தைக் ‘காசு' என்றும் குறிப்பர். தங்கப் பகோடாவில் கடவுளின் உருவம் இருந்தது. வெள்ளிப்பணத்தில் மூவிதழ்கள் ஒருபுறமும், “பாண்டிச்சேரி 1700” என்ற எழுத்துக்கள் மறுபுறமும் இருந்தன. சிலவற்றில் குறுக்குக்கோடுகளும், நடுவில் மூவிதழ்களும் பொறிக்கப்பட்டன. செப்புக் காசுகள் மூன்று வகையில் அச்சிடப்பட்டன. 1. ஒருபுறம் “புதுச்சேரி” என்ற தமிழ்ப் பெயரும்; மறுபுறம் மூவிதழ்களும் இருக்கும். 2. ஒருபுறம் சேவலும், ஆண்டும் (1856) குறிக்கப்பட்டிருக்கும். மறுபுறம் மூவிதழ்களும் இருக்கும். 3. முன்புறம் நாகப்பட்டினம் என்றும், பின்புறம் புதுச்சேரி என்றும் எழுதப்பட்டிருக்கும். இன்னும் வேறு சிலவகைக் காசுகளும் இவர்களால் அச்சிடப்பட்டன.
சீனர்
தமிழ் நாட்டில் இருவகை சீனக்காசுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று கத்திபோல் வளைந்த தகட்டில் எழுத்துக்களுடனும், மற்றென்று நடுவில் சதுரமான துளையுடன் கூடிய வட்டவடிவமானதும் ஆகும். இவை கி.பி. 585-ல் ஆண்ட 'வூ'சூ' அரசர்களும், கி.பி. 713-முதல் 742 வரை ஆண்ட ‘கைனன்' அரசரும் வெளியிட்ட காசுகள் ஆகும். சீனத்து அரசன் ஒருவன் பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில் நாகப்பட்டினத்தில் பெளத்த விகாரை ஒன்றைக் கட்டினான். ஆதலால் இங்கு சீனக்காசுகள் பெருமளவிற்குப் புழக்கித்தில் வந்திருக்க வேண்டும்.