தளவானூர் குடைவரைக் கோயில்

    அமைவிடம் - தளவானூர்
    ஊர் - தளவானூர்
    வட்டம் - செஞ்சி
    மாவட்டம் - விழுப்புரம்
    வகை - குடைவரை
    தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி.7-ஆம் நூற்றாண்டு
    அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - கல்லடிக்குப்பம் சமணர் தீர்த்தங்கரர், கீழ்மாம்பட்டு, திருவம்பட்டு சிவன் கோயில்
    பாதுகாக்கும் நிறுவனம் - மத்தியத் தொல்லியல் துறை
    விளக்கம் -

              இக்குடைவரைக் கோயில் பழைய தென் ஆர்க்காடு ஜில்லாவில் அமைந்துள்ளது. பேரணி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே  ஐந்து கல் தொலைவில் உள்ளது. இத்தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் குடைவரைக் கோவில் இருக்கின்றது. இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது.

              கருவறையில் இலிங்கம் காணப்படுகின்றது. இடப்புற வாயிற்காவலர் ஒரு கையை வணக்கம் தெரிவிப்பவரைப்போலத் தலைக்குச் சரியாக உயர்த்தி நிற்கின்றார். மற்றவர் கதை மீது கைவைத்து நிற்கின்றார். தூண்கள் மீது திருவாசி எனப்படும் ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அஃது இரு பக்கங்களிலும் உள்ள மகரமீன்களின் வாய்களிலிருந்து வெளிப்பட்டு நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம்மேடைமீது கந்தர்வர் இருக்கின்றனர். மகரமீன்களின் கழுத்து மீதும் அவர்கள் காண்கின்றனர். திருவாசியில் இரண்டு வளைவுகள் காண்பதால் அதனை ‘இரட்டைத் திருவாசி’ என்பர்.

              இக்குடைவரையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று வடமொழிக் கல்வெட்டு, மற்றது தமிழ்க் கல்வெட்டு. “தொண்டையந் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் மிகமகிழ்ந்து - கண்டான் சரமிக்க வெஞ்சிலையான் சத்ருமல் லேசமென்[4](று) அரனுக் கிடமாக அன்று” என்பது தமிழ்க் கல்வெட்டாகும். பாதபந்த தாங்குதளம் பெற்ற ஒரே குடைவரை. இதனை கட்டுமானக் கோயில் தாங்குதள அமைப்பிற்கு முன்னோடி எனலாம். தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகரத்தோரண முகப்புப் பெற்ற ஒரே குடைவரை. முழுமை பெற்ற முதல் முகப்புக் கபோதம் பெற்ற குடைவரை. முதல் பூமிதேசம் அமைப்பினை கொண்ட குடைவரை. முன்றில் படிப் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் குடைவரை. தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகரத்தோரணம் முகப்பு பெற்ற ஒரே கோயில் சத்ருமல்லேசுவர் குடைவரை என்பது தளவானூர் சிறப்பாகும்.

    ஒளிப்படம் எடுத்தவர் - க.த.காந்திராஜன்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
    சுருக்கம் -

             விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் கிராமப்புறச் சாலையில் 6கி.மீ. பயணித்து தளவானூர் சிற்றூரை அடையலாம். தளவானூர்  குடைவரைக் கோயில்  பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவ மன்னனால் (கிபி 600 - 630) குடைவிக்கப்பட்டது. தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்புதவிகள் -

    மு. நளினி, டாக்டர் இரா. கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள், அலமு பதிப்பகம், சென்னை-14.