மல்லசந்திரம்

    அமைவிடம் - மல்லசந்திரம்
    ஊர் - மல்லசந்திரம்
    வட்டம் - ஓசூர்
    மாவட்டம் - கிருஷ்ணகிரி
    வகை - கற்திட்டை
    கிடைத்த தொல்பொருட்கள் - 200-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள், கல்வட்டங்கள், ஓவியங்களுடன் கூடிய கற்திட்டைகள், இடுதுளைகளுடன் கூடிய கல்திட்டைகள்
    பண்பாட்டுக் காலம் - பொ.ஆ.மு.1000லிருந்து பொ.ஆ.மு.500
    விளக்கம் -

    கிருஷ்ணகிரியிலிருந்து 25 கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரியிலிருந்து – பீர்பள்ளி சாலையில் மல்லசந்திரம் எனும் மலையடிக் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ள மலை உச்சிப்பகுதி மோறல் பாறை என அழைக்கப்படுகின்றது. இங்கு முன்பு நூற்றுக்கணக்காண கல்திட்டைகள் காணப்பட்டுள்ளது. ஆனால் இன்று பெரும்பாலனா கல்திட்டைகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இருப்பினும் 30 க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் நல்ல நிலையில் உள்ளது. இங்குள்ள மக்கள், இக் கல்திட்டைகளில் பாண்டவர்கள் வனவாசம் வந்த போது தங்கியிருந்தனர் என நம்புகின்றனர். இங்கு கிடைக்கும் பாறைகள் தட்டையாக உடையும் தன்மையில் உள்ளதால் இவை கல்திட்டைகள் அமைப்பதற்கு ஏதுவாக உள்ளது. இங்குள்ள கல்திட்டைகள் சுமார் 3 அடி முதல் 6 அடி வரை உயரமாக உள்ளது. நான்கு கற்பலகைகள் செங்குத்தாக அமைத்து அதன் மேல் பலகைக் கல்லால் மூடப்படும். பெரும்பாலும் கிழக்குப்பக்கமாக இருக்கும் கற்பலகையில் நுழைவதற்கான துளை போடப்பட்டுள்ளது. இக் கல்திட்டைகளைச் சுற்றி கற்பலகைகள் வட்டமாக சுற்றுச் சுவர் போல பதிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் இரண்டு வட்டமாக கற்சுவர்கள் எழுப்பியுள்ளனர். இங்குள்ள கல்திட்டைகள் சிலவற்றில் ஓவியங்கள் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கற்பலகையில் வரையப்பட்டுள்ளது. அதில் யானை வேட்டை, புலி வேட்டை, நடனக் காட்சிகள், மற்றும் சில குறியீடுகளும் காணப்படுகின்றன. சில ஓவியங்களில் விலங்குகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற காட்சிகள் உள்ளன. அவை சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் “ களிறு அடக்கல்” (யானையை அடக்குதல்) என்ற வார்த்தைக்கேற்ப அமைந்துள்ளது.

    ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
    சுருக்கம் -

    மல்லசந்திரம் (மல்ல சமுத்திரம்) தமிழகத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையிலுள்ள, சிறந்த ஈமச்சின்னங்களை உடைய பெருங்கற்கால ஊராகும். மல்லசந்திரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் வட்டத்தில் தருமபுரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பெங்களூர் சாலையில் பீர்பள்ளியிலிருந்து இவ்வூருக்குச் செல்லலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள மலையின் மீது இருநூற்றுக்கும் மேற்பட்ட கல்திட்டைகளும், பிற ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன. இவை பாண்டவர் கோயில் என்று அழைக்கப்படுகின்றன. இவை மலை மீது அமைந்து இப்பகுதிக்கு அழகூட்டுகின்றன.  இங்கு காணப்படும் கல் திட்டைகள் மிகப் பெரியதாகவும், வடிவமைப்பில் வேறுபட்டும் காணப்படுகின்றன. இங்குள்ள கல்திட்டைகளைச் சுற்றிலும் கற்பலகைகள் வட்டமாக நடப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதி அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற அரைவட்ட வடிவ கற்பலகைகள் அரிதாகவே காணப்படுகின்றன.  இந்த வகை ஈமச்சின்னங்கள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். இங்குள்ள கல் திட்டைகளில் சில சேதமடைந்துள்ளன. இவற்றுள் இடுதுளைகள் உள்ளன.இக்கல் திட்டைகள் 1மீ முதல் 2.6 மீ உயரத்துடனும் காணப்படுகின்றன. நான்கு புறமும் கற்பலகைகளை வைத்து, மேலே ஒரு மூடுகல் வைக்கப்பட்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சுற்றி உள்ள கல்வட்டம் மிக அழகாகக் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கல்திட்டைகள் சிறிய பெரிய அளவில் உள்ளன. இவற்றின் சில பலகைகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் இடுதுளைகள் உள்ளன.இவை பொ.ஆ.மு.1000லிருந்து பொ.ஆ.மு.500 வரையான காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.