அடுக்கம்

அமைவிடம் - அடுக்கம்
ஊர் - அடுக்கம்
வட்டம் - கொடைக்கானல்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.1928
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

அடுக்கம் ஊராட்சி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள அடுக்கம் ஒரு தொல்லியல் களமாகும். பழந்தமிழகத்தில் மலைப்பகுதியான குறிஞ்சித்திணையில் மக்கள் வாழ்ந்த போது விட்டுச் சென்ற எச்சங்கள் இன்று தொல்லியல் சான்றுகளாக களஆய்வில் கிடைக்கின்றன. அடுக்கத்தில் கல்வட்டங்கள், மூடுபலகை கற்கள் ஆகிய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் வாழ்விடங்களுக்கு இடையே காணப்படுகின்றன. முற்காலத்தில் ஈமக்காடாய் இருந்த இப்பகுதியில் மக்கள் தற்போது வசித்து வருகின்றனர். இதனால் பல ஈமச்சின்னங்கள் இன்று காணக் கிடைக்கவில்லை. அடுக்கத்தில் காணப்படும் கல்வட்டங்கள் குறிப்பிடத்தக்கன. மலைப்பகுதியாதலால் அங்குள்ள கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கற்கள் உருண்டையாக இல்லாமல் பலகைக் கற்களாகக் காணப்படுவது தனித்துவமாகும். மேலும் ஒவ்வொரு பலகைக் கல்லின் மீதும் கீறல்கள் வரையப்பட்டுள்ளன. இவை குறியீடுகளாகும். இக்குறியீடுகள் பெருங்கற்காலப் பண்பாட்டில் குடிகளின் ஏதொவொரு செய்தியை பகிர்கின்றன எனலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அடுக்கம் என்னும் மக்கள் வசிக்கும் இருப்பிடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் இருப்பது களஆய்வில் கண்டறியப்பட்டது. அடுக்கத்தில் கல்வட்டங்களும், கற்குவியல்களும் காணப்படுகின்றன. எண்ணிக்கையில் நிறைய கல்வட்டங்கள் இருந்திருக்க வேண்டும். காலவெள்ளத்தில் அழிந்தவை போக ஓரிரு கல்வட்டங்களே அடுக்கத்தில் தற்போது காணப்படுகின்றன.